வெளிநாட்டு சினிமா ஜாம்பவான்களுக்கு இந்தியாவின் சத்யஜித்ரே விருது!


இஸ்த்வன் சாபோ, மார்ட்டின் ஸ்கார்சீசி

எடுப்பது தமிழ் சினிமாவானாலும் அமெரிக்கா வழங்கும் ஆஸ்கரையும் பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதையும் பெறுவதே பெருங்கனவாக பலருக்கு இருக்கிறது.

அந்த வகையில் இன்றுவரை நடிகர் திலகத்தை ‘செவாலியே’ சிவாஜி கணேசன் என்றே அழைப்பவர்கள் பலருண்டு. அவருக்குப் பின்னால் கமலஹாசன் இந்த விருதை பெற்றபோதும் மகிழ்ச்சியில் பலர் திளைத்தனர்.

சத்யஜித்ரே

அதேபோல, இந்தியாவின் பெருமிதமான திரை இயக்குநர் சத்யஜித் ரே, 25 தேசிய விருதுகளை வென்றவர். 50 ஆண்டுகளுக்கும் முன்னால் அவர் எடுத்த ’பதேர்பாஞ்சலி’தான், இன்றும் யதார்த்த சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக சிலாகிக்கப்படுகிறது. அவர் படங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாகக் கருதப்படக் காரணம் அவர் இந்திய மண்ணை, அதன் சாமானிய மனிதர்களைத்தாம் திரையில் பிரதிபலித்தார். அதுவே அவருக்குச் சர்வதேச அங்கீகாரம் ஈட்டித் தந்தது.

இவ்வளவு செய்தவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் தொடங்கி பாரத ரத்னாவரை அநேக விருதுகளை வழங்கி நாடு தனக்குப் பெருமைதேடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்றுவரை சத்யஜித் ரே ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்று நாம் பெருமை கொள்கிறோம்.

இந்நிலையில் சத்யஜித் ரேவின் பெயரில் இந்திய அரசு பிறநாட்டு சினிமா சாதனையாளர்களுக்கு ஏன் விருது வழங்கக்கூடாது! அந்த வகையில், சத்யஜித் ரேவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக அவரது பெயரில் பல விழாக்களை எடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கடந்த மே மாதம் முடிவெடுத்தது.

அதில் முக்கிய முடிவாக, இந்த ஆண்டுக்கான சத்தியஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஹங்கேரி நாட்டு திரைப்பட இயக்குநர் இஸ்த்வன் சாபோ, ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீசி ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 20 தொடங்கி 28வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 52-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில், இந்த விருது வழங்கப்படவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிவித்தார். இந்தியா கதைசொல்லிகளின் பூமி. இங்கிருக்கும் கதைகள் உலகின் கற்பனைத்திறனைச் சுண்டி இழுக்கக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார்.

ஹங்கேரியாவின் திரைப்பட ஜாம்பவானாகக் கொண்டாடப்படுபவர் இயக்குநர் இஸ்த்வன் சாபோ. இவர் இயக்கத்தில் 1966-ல் வெளிவந்த ’ஃபாதர்’, 1981-ல் வெளிவந்த ’மெஃபிஸ்தோ’ உள்ளிட்ட படங்கள் பிரசித்திபெற்றவை. நவீன ஹாலிவுட் சினிமாவின் பிரதான முகமாக அடையாளம் காணப்படுபவர் மார்ட்டின் ஸ்கார்சீசி.

இதுதவிர ஓடிடி தளத்தைச் சேர்ந்தவர்களும் முதன்முறையாக இந்தியச் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அந்த வகையில், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, வூட் மற்றும் சோனி லிவ் ஆகிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன.

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில், ஸ்பானிஷ் மொழி திரைப்படமான கார்லஸ் சாரா இயக்கிய, ‘தி கிங் ஆப் ஆல் தி வர்ள்ட்’ (The King of all the World) திரையிடப்படவிருக்கிறது.

அண்மையில் மறைந்த திரை மேதைகளான திலிப் குமார், சுமித்ரா பாவே, புத்தாதெப் தாஸ் குப்தா, சஞ்சரி விஜய், சுரேகா சிக்ரி உள்ளிட்டோருக்கும் அஞ்சலி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

x