யாரிந்த உதம் சிங்?


உதம் சிங் வேடத்தில் விக்கி கௌசல்

இந்திய சுதந்திர போராட்டத்தில் தனியாளாய் களமாடியவர் உதம் சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்க்க 21 ஆண்டுகள் காத்திருந்த இந்த உதம் சிங்கின் கதை திரைப்படமாகி இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் நேற்று(அக்.16) வெளியான ’சர்தார் உதம்’ என்ற இந்தி திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உதம் சிங் என்ற சுதந்திர போராட்ட காலத்து நாயகனின் கதையை புனைவுகள் கலந்து திரைப்படமாக்கி இருக்கிறார்கள். படத்தை பார்ப்பதற்கு முன்னர் யாரந்த உதம் சிங் என்று அறிந்துகொள்வதும் உதவும்.

உதம் சிங்

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் குறித்து பள்ளிப் பாடத்தில் படித்திருப்போம். ஆங்கிலேய அரசின் அடக்குமுறை சட்டங்களில் ஒன்று ரௌலட் சட்டம். இதன்படி எவரை வேண்டுமானாலும் கேள்வியின்றி கைது செய்யும் உரிமை காவல்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் அமைதியான வகையில் மக்கள் போராட ஆரம்பித்தார்கள். அப்படியொரு கூட்டம் பஞ்சாப் அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக் திடலில் கூடியிருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்காக குடிநீர் வழங்கும் பணியில் சில இளைஞர்களும் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் உதம் சிங்.

ரீல் உதம் மற்றும் ரியல் உதம்

ராணுவ ஜெனரலாக இருந்த ரெஜினால்ட் டயர் என்பவர் திடீரென ஜாலியன் வாலிபாக் திடலில் கூடியிருந்தோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் 379 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் அதிகாரிகளின் கணக்கு சொல்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேலானோர் குண்டடிபட்டும், உயிர் தப்புவதற்காக திடலின் கிணற்றில் குதித்தும் பலியானது பின்னர் உறுதி செய்யப்பட்டது. கோர சம்பவத்தின் நேரடி சாட்சியான உதம் சிங், படுகொலைக்கு காரணமான பஞ்சாப் துணை ஆளுநர் மைக்கேல் ஓ டயரை பழி தீர்க்க பொற்கோவிலில் சபதமேற்றார்.

மைக்கேல் ஓ டயர்

இதற்காக ஒன்று இரண்டல்ல 21 ஆண்டுகள் காத்திருந்தார். இடையே சுதந்திர போரட்ட களத்திலும் பகத் சிங் பாணியில் போராடினார். சில ஆண்டுகள் சிறையிலும் கழித்திருக்கிறார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து இங்கிலாந்தில் பதுங்கி இருந்தவர் தகுந்த தருணத்தில் வெளிப்பட்டார். 1940 மார்ச் 13 அன்று ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்த மைக்கேல் டயரை உதம் சிங் சுட்டுக் கொன்றார். கைது செய்யப்பட்ட உதம் சிங் விரைவாக வழக்கு முடிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்கு ஆளானார்.

சர்தார் உதம் திரைப்படம்

இந்தியாவின் அதிகம் பிரபலமாகாத விடுதலைப் போராட்ட வீரர்களின் கதையை திரைப்படமாக்கும் பாலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டில் சர்தார் உதம் திரைப்படமும் சேர்ந்திருக்கிறது. உதம் சிங்காக விக்கி கௌசல் நடித்துள்ளார்.

x