“I'm Vengeance” - வெளியானது ‘தி பேட்மேன்’ ட்ரெய்லர்


’தி பேட்மேன்’

காமிக்ஸ் ரசிகர்கள், பல ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘தி பேட்மேன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘டாவ்ன் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’, ‘வார் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மேட் ரீவ்ஸ், இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ’ட்வைலைட்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரசித்தி பெற்ற ராபர்ட் பேட்டின்சன், இத்திரைப்படத்தில் பேட்மேனாக நடித்திருக்கிறார். இதுவரை வெளிவந்த பேட்மேன் திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளமையான பேட்மேன்

இளம் வயதில் தாய் தந்தையை இழந்த மிகப்பெரும் பணக்கார இளைஞனான ப்ரூஸ் வெய்ன், தன்னிடம் இருக்கும் பண பலத்தையும் உடல் பலத்தையும் கொண்டு குற்றங்களை எதிர்த்துப் போராடும் பேட்மேனாக வலம்வருவதுதான் பேட்மேன் கதாபாத்திரத்தின் அடிப்படை தாத்பரியம். சூப்பர் பவர் எதுவும் இல்லாமலேயே சூப்பர் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்த பெருமை, பேட்மேன் கதாபாத்திரத்துக்கு உண்டு. இதுவரை திரைப்படங்களில், பெரும்பாலும் பேட்மேன் கதாபாத்திரங்கள் நிதானமான சிந்தனையுடன் கண்ணியமாக நடந்து கொள்ளும் வகையிலேயே காட்டப்பட்டுவந்தன. ஆனால், தற்போது வெளியாகவுள்ள ‘தி பேட்மேன்’ திரைப்படத்தில், ப்ரூஸ் வெய்ன் பேட்மேனாக உருவெடுத்து 2 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. இதில் பேட்மேன் பலவிதமான மனக்குழப்பங்களுக்கும், இன்ஸோமேனியா நோயால் சிறிதளவு பாதிக்கப்பட்ட, படபடப்பு நிறைந்த இளைஞனாக வரவிருக்கிறார். பேட்மேன் காமிக்ஸ் புத்தகங்களான ‘பேட்மேன்: இயர் ஒன்’, ‘பேட்மேன்: தி லாங் ஹாலோவீன்’ ஆகியவற்றின் தாக்கத்தில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரிட்லர் - பென்குயின்

இத்திரைப்படத்தில் பேட்மேன், தன்னுடைய வழக்கமான எதிரிகளில் ஒருவரான ‘ரிட்லர்’-ஐ எதிர்த்து களமாட உள்ளார். புதிர் போட்டு கொலை செய்யும் ரிட்லரை, அவரின் புதிர்களுக்கான விடைகள் மூலமே மடக்கிப் பிடிப்பார் பேட்மேன். ரிட்லர் வரும் கதைகளில், பேட்மேனை ஒரு அதிரடி சாகசவீரனாக மட்டுமல்லாமல் சிறந்த துப்பறிவாளராகவும் பார்க்கலாம். அதேசமயம், பேட்மேனின் இன்னொரு வில்லனான பென்குயின் எனப்படும் கோபல்பாட் கதாபாத்திரமும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. கோபல்பாட் முழு பென்குயின் கதாபாத்திரமாக மாறுவதற்கு முன்னிருக்கும் நிலையில், இத்திரைப்படத்தில் வருவார் என்று ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கு, மேலும் 2 பாகங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாக்கிட திட்டம் வைத்துள்ளது டிசி நிறுவனம். அதனுடன் ஒரு ஸ்பின் ஆஃப் டிவி தொடரும் உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பென் அஃப்லெக் விலகல்

இதற்குமுன் பேட்மேன் கதாபாத்திரத்தில் 2016-ம் ஆண்டு ‘பேட்மேன் vs சூப்பர்மேன்’ திரைப்படம் மூலம் பேட்மேனாக அறிமுகமான பென் அஃப்லெக், வரவிருக்கும் பேட்மேன் திரைப்படத்தை இயக்குவார் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இடையில் அஃப்லெக் இத்திரைப்படத்திலிருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டது. பென் அஃப்லெக் உருவாக்கிய கதையில், டிசி காமிக்ஸின் முக்கியமான வில்லன் கதாபாத்திரமான டெத்ஸ்ட்ரோக் பேட்மேனோடு மோதுவதுபோல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. பேட்மேன் காமிக்ஸின் புகழ்பெற்ற ‘ஆர்கம் அஸைலம்’ தொடரைப் பின்னணியாகக் கொண்டு, இந்தத் திரைக்கதையை உருவாக்கிவந்தார் அஃப்லெக். இனிவரும் காலங்களில் இந்த கதையையும் திரையில் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

டிசி நிறுவனம் ‘டிசி ஃபேன்டம்’ என்ற பெயரில் இன்றைக்கு நடத்தி முடித்த நிகழ்வில், தி ராக் நடிக்கும் ‘ப்ளாக் ஆடம்’, ‘கோத்தம் நைட்ஸ் : கோர்ட் ஆஃப் அவுல்ஸ்’ அனிமேட்டட் திரைப்படம், ‘சூசைட் ஸ்குவாட்’ வீடியோ கேம், ‘பேட் வுமன்’ தொடரின் 3-வது சீசனின் ட்ரெய்லர்கள் என்று அடுத்தடுத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

ஒருபுறம் மார்வெல் காமிக்ஸின் பெரும்பலமான ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்பட தொடரின் கதை முடிவடையும் தருவாயில் இருப்பதால், இச்சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு டிசி காமிக்ஸ் தன்னிடமிருக்கும் சக்தி வாய்ந்த கதைகளை திரைப்படங்களாக மாற்றி, ரசிகர்களைக் கவரும் வியூகத்தை மிகச்சரியாக வகுத்து வருகிறது என்று காமிக்ஸ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சூப்பர் ஹீரோக்கள் ஏன் தடுமாறுகிறார்கள்?

x