திருப்பதி ஏழுமலையான் சன்னிதியில், புலர்காலைப் பொழுதில் சுப்ரபாதம் இசைப்பது வழக்கம். ரஜினியும் லதாவும் திருமண பட்டாடைகளை உடுத்தி அதிகாலை 3 மணிக்கெல்லாம் சன்னிதிக்கு வந்துவிட்டார்கள். அங்கு வெகுசில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே குழுமியிருந்தனர். அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதம் ஒலிக்க... ரஜினி - லதா திருமணம் இனிதே நடந்தது. ரஜினி தாலி கட்டியதும், அவருடைய காலைத் தொட்டு வணங்கினார் லதா. தொடர்ந்து, இரண்டு குடும்பத்து பெரியவர்களிடமும் மணமக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மாலையும் கழுத்துமாக சன்னிதியைவிட்டு வெளியே வந்தபோது... திடீரென அங்கு வந்த ஐந்தாறு செய்தியாளர்களும் சில போட்டோகிராபர்களும் அவர்களைப் படமெடுக்க முன்னேறி வந்துவிட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று காரில் ஏறி இருவரும் சென்னைக்குச் சிட்டாய்ப் பறந்துவிட்டார்கள்.
படப்பிடிப்புக்கு வந்த புது மாப்பிள்ளை!
திருமணம் முடிந்து திருப்பதியிலிருந்து காலை 8 மணிக்கெல்லாம் சென்னை திரும்பிய ரஜினி, 10 மணிக்கு ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்துவந்த ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். கேபி ஆச்சரியப்பட்டுப்போனார். வந்ததும் தனது காலைத்தொட்டு வணங்கிய ரஜினியிடம், “ஏம்பா... இன்னைக்கு நான் வேற சீன்ஸ் எடுத்துக்குவேன்ல... கல்யாணம் முடிஞ்ச கையோட இங்க வரணுமா?” என்றார் கேபி. அதற்கு, “கால்ஷீட் ஆப்சென்ட் - கெட்டப் பழக்கம்னு நீங்கதானே சொல்லித் தந்தீங்க” என்று ரஜினி சொன்னதைக் கேட்டு, “ஐ லவ் யூ மை பாய்” என்றார் கேபி.
ஏழு மாதங்களுக்கு முன்பு கேபியின் ‘தில்லு முல்லு’ படப்பிடிப்பில் மலர்ந்த காதல், தற்போது அவருடைய ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பு சமயத்தில் திருமணத்தில் முடிந்திருப்பதை நல்ல சென்டிமென்ட் ஆகப் பார்த்தார் ரஜினி. அன்றைய படப்பிடிப்பு முடிந்த போது, “ரஜினி... நீ சொன்ன மாதிரியே மேரேஜ் ரிசப்ஷன் வெச்சு எல்லாரையும் இன்வைட் பண்ணிடு. உன்னையும் லதாவையும் தம்பதி சமேதரமா எல்லாரும் பார்த்து வாழ்த்தும்போது அது வழியா கிடைக்கிற ஆசீர்வாதம் திருமண வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். ரிசப்ஷனை எவ்வளவு சிம்பிளா வேணும்னாலும் வெச்சுக்கோ. பொண்ணு வீட்லயும் கலந்துபேசி செய். தனியா அதிரடி பண்ணணும்னு நினைக்காதே” என்று அட்வைஸ் செய்தார் கேபி.
குருவின் அறிவுரையை ஏற்ற ரஜினி, 2 வாரங்கள் கழித்து, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஐந்து நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். பத்திரிகையாளர்கள் உட்பட திரையுலகப் பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்தார். கோலிவுட்டே திரண்டு சென்று ரஜினி - லதா தம்பதியை வாழ்த்தியது. தொழில் போட்டியாளரான கமல், தம்பதி சமேதரமாகச் சென்று வாழ்த்திவிட்டு வந்தார்.
திருமண பந்தம் தந்த மாற்றம்
ரஜினியை மணந்துகொண்ட சமயத்தில் பி.ஏ., இறுதியாண்டு படித்த லதா, திருமணத்துக்குப் பிறகு இரண்டு மாத காலம் கல்லூரிக்குச் சென்று படித்து, தேர்வெழுதி பி.ஏ., பட்டம் பெற்றார். எல்லோரையும் போல், ரஜினியின் வாழ்க்கையிலும் இனிய மாற்றங்களைக் கொண்டுவந்து சேர்ந்தது திருமண பந்தம். மாலை 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்பில் ‘பேக்-அப்’ என்றதும் துள்ளிக் குதித்து வீட்டுக்குத் திரும்பினார் ரஜினி. லதாவின் பெற்றோரும் அவரது அக்காவும் செல்லமாய் அழைத்தது போல் லதாவை ‘ஜில்லு’ என்று செல்லப் பெயர் சொல்லியே ரஜினியும் அழைத்தார். மனைவியின் முயற்சியால் புகை, மது ஆகியவற்றை குறைத்துக்கொண்டு, ஒரே ஆண்டில் அதிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்தார் ரஜினி. பேச்சு, செயல் என அனைத்திலும் நிதானும் பொறுமை என ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு திரையுலகம் வியந்தது. பிரபல பத்திரிகையொன்று ரஜினி - லதா தம்பதி எப்படி மணவாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட, கணவரைப் பேட்டி எடுத்துத் தரும்படி வேண்டுகோள் வைக்க, அதற்கு சம்மதித்து, கேள்விகளையும் தயார் செய்துகொண்டு அமர்ந்தார் லதா. படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய ரஜினியிடம் பேட்டி தொடங்கியது.
“எனக்குப் பதிலாக ஒரு நடிகையைத் திருமணம் செய்திருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்று முதல் கேள்வியைக் கேட்டார் லதா. அதற்கு, “நடிகையும் ஒரு பெண்தானே!” என்று பட்டென பதில் அளித்தார் ரஜினி.
“ஏன் திருமணம் செய்து கொண்டோம்... பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் எப்போதாவது ஏற்பட்டதா?” என்றார் லதா. “உன்னோடு வாழும் இந்த வாழ்க்கையை நினைக்கும்போது, திருமணத்தை ஏன் இவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று எண்ணத்தோன்றுகிறது” என்று பதில் தந்தார் ரஜினி.
என்னதான் மணவாழ்க்கை மகிழ்ச்சியை, குழந்தைச் செல்வத்தைக் கொண்டுவந்தாலும் ஒவ்வொரு மனிதரும் ஒரு தனிமை விரும்பி என்பதை அடுத்த கேள்விக்கான பதிலாகச் சொன்னார் ரஜினி.
அதாவது லதா கேட்ட அடுத்த கேள்வி: “கைநிறையச் செல்வம், மனதுக்குப் பிடித்த மனைவி, சினிமா அள்ளிக்கொடுத்திருக்கும் இந்தப் புகழ்... இவை மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?”
அதற்கு இப்படி பதில் சொன்னார் ரஜினி: “எனக்கான தனிமைத் தன்மையை”.
உண்மை தான். ரஜினி தனிமையின் தலை சிறந்த காதலர். அந்தப் பேட்டியின் இறுதியில், லதா கேட்டார். “மறைக்காமல் சொல்லுங்கள்... என்னிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்று ஏதேனும்..?”அதற்கு ரஜினி, “முன்பின் தெரியாதவர்களிடமும்கூட என்ன ஏது என்று விசாரிக்காமல் கருணை காட்டுகிறாய்” என்று சட்டென்று பதில் சொல்ல... “ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் லதா.
கணவருக்காக மாறிய லதா
ரஜினிக்கு சிக்கன் என்றால் உயிர். அதுவும் சிக்கன் வறுவல் என்றால் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவார். லதாவோ சைவ உணவு முறையில் வளர்ந்தவர். மனைவிக்கு தன்னால் எந்த அசவுகரியமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிக்கன் சாப்பிடுவதைக் குறைத்துகொண்டார் ரஜினி. சிக்கன் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் சொல்லிவிட்டு ஹோட்டலுக்குச் சென்றுவிடுவார்.
கணவர் இப்படிக் கஷ்டப்படுவதை விரும்பாத லதா, ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ரஜினிக்கு மதிய உணவு பரிமாறினார். அப்போது, வறுவல் போன்ற ஒன்றை ரஜினியின் தட்டில் வைத்ததும் டைனிங் ஹால் முழுவதும் வாசனை பரவியது. ரஜினிக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆர்வமுடன் அந்த வறுவலைப் பிட்டுப் பார்த்த ரஜினி, அதை சுவைத்துப் பார்த்ததும் அசந்துபோனார். அது பட்டரில் வறுக்கப்பட்டிருந்த சிக்கன். கொஞ்சம் உப்பும் காரமும் குறைவாக இருந்தாலும் குறைசொல்ல முடியாதபடி வறுவல் இருந்தது. ஆயிரம் கேள்விகளோடு லதாவின் முகத்தைப் பார்த்தார்.
“நானே சமைத்தேன்... எப்படியிருக்கு சிக்கன்?” என்றார் லதா. சிக்கன் சாப்பிடும்போது காரம் தாங்காமல் வந்திருக்க வேண்டிய கண்ணீர், தன் மீது மனைவி தன்மீது கொண்டிருக்கும் காதலின் ஆனந்தக் கண்ணீராக வெளிப்பட்டது ரஜினிக்கு. கண்ணீரைத் துடைத்துகொண்டே , “நீ இதற்காகவெல்லாம் சிரமப்படணுமா ஜில்லு?” என்றார்.
ரஜினியைச் சமாதானப்படுத்திய லதா, “ஹோட்டல் உணவுகள் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் நானே கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டேன். இனி உங்களுக்குச் சிரமம் இருக்காது” என்றார். அதன்பிறகு அசைவ உணவுகளைக் கழுவிச் சுத்தம் செய்யமட்டும் பணியாள் அமர்த்திக்க்கொண்டாரே தவிர, விதவிதமாக அசைவ உணவுகளை செய்யக் கற்றுக்கொண்டு அசத்தினார் லதா. ரஜினி ஒரு கட்டத்தில், “பேசாமல் நான் நடிப்பை விட்டுட்டு ரெஸ்டாரென்ட் வெச்சிடலாமான்னு யோசிக்கிறேன்” என்று மனைவியின் சமையலைப் புகழ்ந்தார்.
ஒவ்வொரு நாளும், “இன்னைக்கு என்ன மெனு ஜில்லு?” என்று ரஜினி ஆர்வமாய் கேட்குமளவுக்கு நான் - வெஜ் சமையலில் அசத்தினார் லதா. “நான் -வெஜ் நீ சாப்பிடமாட்டே... உன்னப் பார்க்க வெச்சு நான் மட்டும் சாப்பிடுறது எனக்கு இடிக்குது. வா உனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறேன்” என்று சொல்லி, அசைவம் சாப்பிடும் நாளில் மனைவிக்கு வித விதமான ஐஸ் க்ரீம்களை வாங்கித் தர அழைத்துச் சென்றுவிடுவார். “நான் மட்டும் ஐஸ் க்ரீம் சாப்பிடுறத நீங்க வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பீங்களா?” என்று கேட்டு ரஜினிக்கும் ஐஸ் க்ரீமை லதா ஊட்டிவிடுவார். அப்போது குளுகுளுப்பு தாங்காமல் ரஜினி முகம் அஷ்ட கோணலாக மாற... அதைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரிப்பார் லதா.
வியாழக்கிழமை என்றால் ரஜினி வீடு ரணகளமாகிவிடும். லதா வீட்டின் வழக்கப்படி அன்று ரஜினி உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து ‘ஆயில் பாத்’ எடுத்தே ஆகவேண்டும். மனைவியின் உத்தரவை மீற முடியாமல் சிறு பிள்ளையைப் போல் வீட்டுக்குள்ளேயே ஓடி ஒளிந்துகொள்ளும் ரஜினியை தேடிக் கண்டுப்பிடித்து எண்ணெய் முழுக்காட்டி ஒரு மணிநேரம் ஊர வைப்பார் லதா. அவரிடமிருந்து ரஜினியால் தப்பிக்கவே முடியவில்லை.
திருமணத்துக்குப் பின், தான் நடிக்க ஒப்புக்கொண்ட கதைகளை மனைவியிடம் சொல்லி அவருடன் டிஸ்கஸ் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார் ரஜினி. ‘நெற்றிக் கண்’ படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடம் ஏற்றிருந்தார் ரஜினி. அப்பா சக்ரவர்த்தி பெண்களின் மீது சபலம் கொண்டவர். அப்பாவைத் திருத்த நினைப்பவர் மகன் சந்தோஷ். அந்தப் படம் வெளியாகி ரஜினியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்த நேரத்தில், ரஜினியை, “ஹலோ மிஸ்டர் சக்ரவர்த்தி” என்று கிண்டலாகக் கூப்பிட்டத் தொடங்கினார் லதா. ரஜினியும் மனைவியுடன் ஜாலியாக அவுட்டிங் செல்லும்போது சாலையில் செல்லும் பெண்களை லுக் விடுவதுபோல் நடித்து லதாவைச் சீண்டுவார். அதற்கு, லதா, “சந்தோஷ் மாதிரி ஒரு மகன் பிறந்து உங்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவான் பாருங்க” என்பார். அன்பும் கலகலப்பும் அரவணைப்பும் பொங்கி வழிந்த லதா -ரஜினி வாழ்க்கை நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது.
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்