சினிமா சிற்பிகள் - 14: சர்ரியலிசத்தின் மூலம் கனவுக்கு உயிரூட்டிய லூயி புனுவல்


லூயி புனுவல்

திரையுலகை நாம் கனவுலகம் என்று சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் கனவும் சினிமாவும் ஒன்றுபோல் இருக்கிறதா? உலகை விழிப்பு நிலையிலேயே பார்த்துப் பழகிவிட்ட மனிதமனம், திரைப்படங்களிலும் லாஜிக், காரண காரியங்கள் என்று எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று. ஆனால், நாம் காணும் கனவுகளுக்கு என்றாவது லாஜிக் இருந்திருக்கிறதா? கடைசியாக நீங்கள் கண்ட கனவை யோசித்துப்பாருங்கள். கோர்வை இல்லாமல், தர்க்கத்துக்குள் அடைபடாமல், ஆனால் முழுமையாக ஒரு அர்த்தத்தை நமக்குப் புரியவைப்பது போல் இருப்பதுதான் கனவு. கனவைக் காட்சிப்படுத்த கலை முயன்றால் என்னவாகும் என்பதன் பதில்தான் சர்ரியலிச கொள்கை.

கனவும் கலையும் ஒன்று சேரும் இடம்தான் சர்ரியலிசம். ஓவியம், கட்டிடக் கலை, கவிதைகள், கதைகள், திரைப்படங்கள் என்று சர்ரியலிசத்தின் வீச்சு மிகப் பெரியது. இந்த சர்ரியலிசக் கொள்கையைப் பயன்படுத்திப் பல இயக்குநர்கள் பல அற்புதமான திரைப்படங்களைக் கொடுத்திருந்தாலும், சர்ரியலிசம் என்ற வார்த்தையைக் கேட்டதும், சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது லூயி புனுவல்தான்.

லூயி புனுவல்

சல்வடார் டாலி - கவிஞர் லோர்க்கா - லூயி புனுவல்

1990 பிப்ரவரி 22-ம் தேதி, ஸ்பெயினில் உள்ள கலாண்டா நகரில் பிறந்தார் புனுவல். நான்கரை வயது இருக்கும்போது, அவருடைய குடும்பம் ஸரகோஸா நகருக்கு மாற்றலாகிவந்தது. அங்கே, கிறிஸ்துவ மிஷனரியில் பள்ளிப் படிப்பைப் பயின்றார் புனுவல். சிறுவயதிலேயே வெள்ளைத் திரை கட்டி, விளக்கு வெளிச்சத்தில் நிழல்களை வைத்துக் கதை சொல்லுவதில் ஆர்வமாக இருந்த புனுவல், குத்துச்சண்டையிலும், வயலின் இசைப்பதிலும் திறமையானவராகத் திகழ்ந்தார்.

1917-ல் மேட்ரிட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் மற்றும் தத்துவம் படித்துத் தேர்ச்சிபெற்றார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, தன்னுடைய சக மாணவர்களான புகழ்பெற்ற சர்ரியலிச ஓவியரான சல்வடோர் டாலி, கவிஞர் லோர்க்காவோடு நெருங்கிய நட்பு புனுவலுக்கு ஏற்பட்டது. நண்பர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

லூயி புனுவல் - சல்வடோர் டாலி

ஃப்ரிட்ஸ் லேங்கின் தாக்கம்

எக்ஸ்ப்ரஷனிசத்துக்குப் புகழ்பெற்ற பிரிட்ஸ் லேங்கின் ‘டெஸ்டினி’ திரைப்படத்தைப் பார்த்த பின்பு, சினிமாதான் தன்னுடைய வாழ்க்கை என்பதை முடிவுசெய்தார் புனுவல். பிரெஞ்சு மொழி இயக்குநரான ஜீன் எப்ஸ்டின் நடத்திய திரைப்படப் பள்ளியில் இணைந்த அவர், மிக விரைவில் எப்ஸ்டினின் இணை இயக்குநராகவும் உயர்ந்தார். எப்ஸ்டினின் குருவான ஏபல் கான்ஸின் ‘நெப்போலியன்’ திரைப்படத்தில் பணியாற்றுமாறு எப்ஸ்டின் பணித்தபோது, புனுவல் அதை மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த எப்ஸ்டின், அவரைத் தன்னுடைய குழுவிலிருந்து நீக்கினார். இதன்பிறகு, பத்திரிகைகளில் சினிமா விமர்சனம் எழுதும் பணியை மேற்கொண்டார் புனுவல். இதுபோக திரைக்கதை எழுதுவதிலும் பல இயக்குநர்களுக்கு உதவி செய்துவந்தார்.

‘அன் ஆண்டலேஷியன் டாக்’ திரைப்படத்தின் பிரஞ்சு மொழி போஸ்டர்

முதல் படைப்பு

தன் நண்பர் டாலியுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தார் புனுவல். தன் கைகளிலிருந்து எறும்புகள் சாரை சாரையாக வருவதுபோல கனவு கண்டதாக டாலி சொல்ல, முழு நிலவை மேகம் வெட்டுவது போல் கண்ட கனவை புனுவல் பகிர்ந்துகொண்டார். இந்த இரண்டு கனவையும் மையக்கருவாக கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்து, 6 நாட்களில் தன்னுடைய முதல் திரைப்படத்துக்கான திரைக்கதையை டாலியுடன் இணைந்து எழுதி முடித்தார் புனுவல். 1929-ம் ஆண்டு ‘அன் ஆண்டலேஷியன் டாக்’ என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். 21 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இத்திரைப்படம், உலகில் உருவாக்கப்பட்ட குறும்படங்களில் மிக முக்கியமானது என்று பல திரைப்பட விமர்சகர்கள் இன்றளவும் போற்றுகின்றனர்.

தன் தாயாரிடமிருந்து பணம் பெற்று இத்திரைப்படத்தை இயக்கினார் புனுவல். அவ்வகையில், உலகில் உருவான சுயதானிய திரைப்படங்களுக்கு முன்னோடி என்றும் இத்திரைப்படத்தைச் சொல்லலாம். இத்திரைப்படத்தில், முழு நிலவை மெல்லிய மேகம் ஒன்று குறுக்காகக் கடந்த அடுத்த விநாடியே, பட்டை தீட்டப்பட்ட சவரக்கத்தி ஒரு பெண்ணின் கண்ணைக் குறுக்காகக் கிழிப்பது போன்ற காட்சி வரும். மனித மனங்களில் அந்தக் காட்சி ஏற்படுத்தும் அச்சத்தையும் அசவுகரியத்தையும் என்றைக்கும் அகற்ற முடியாது. இத்திரைப்படத்தை உருவாக்கும்போதே, படத்தில் எந்த விஷயமும் எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல், எந்தவிதமான விளக்கத்திற்குள்ளும் அடக்க முடியாத வகையில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டுத்தான், திரைக்கதையை வடிவமைத்தனர் புனுவலும், டாலியும்.

இத்திரைப்படத்தை முதல்நாள் திரையிடும்போது பாப்லோ பிக்காசோ, கிறிஸ்டியன் பெரார்ட் போன்ற கலை உலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் வருகைதந்திருந்தனர். சர்ரியலிசம் கொள்கையும், தான் காட்சிப்படுத்தியிருக்கும் அதீத வன்முறையும், பாலியல் காட்சிகளும் பிரச்சினையை உருவாக்கி, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்துடன் இருந்த புனுவல், திரையரங்குக்குச் செல்லும்போது தனது கோட் பாக்கெட்டில் போராட்டக்காரர்கள் மீது பதில் தாக்குதலுக்கு எறிய கற்களை நிரப்பிக்கொண்டு சென்றார். ஆனால், அத்திரைப்படத்துக்கு சக கலைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த வரவேற்பின் தாக்கத்தில், 2-து திரைப்படமாக ‘ஏஜ் ஆஃப் கோல்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இத்திரைப்படத்தில் டாலியுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். ஆனால், இக்காலகட்டத்தில் இடதுசாரி கருத்துகளால் புனுவல் ஈர்க்கப்பட்டார். அதேசமயம் வலதுசாரி சித்தாந்தவாதிகளை டாலி ஆதரிக்க ஆரம்பித்திருந்தார். அரசியல்ரீதியாக மாற்றுக் கருத்து ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். ‘ஏஜ் ஆஃப் கோல்ட்’ திரைப்படம் வெளியானதும், “புனுவல் கத்தோலிக்க மதத்தை இத்திரைப்படம் மூலம் கடுமையாகத் தாக்கியுள்ளார்” என்று அறிவித்தார் டாலி. வலதுசாரிப் போராட்டக்காரர்களால் திரையரங்குகள் சூறையாடப்பட்டன. பிரான்ஸ் அரசாங்கத்தால் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டது. புனுவலுக்கும் கடுமையான மிரட்டல்கள் வந்தன. இந்த சர்ச்சையால் புனுவல் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். இந்தப் புகழ், அவருக்கு அமெரிக்காவில் எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பை வழங்கியது. ஸ்பானிய திரைப்படங்களை எம்ஜிஎம் நிறுவனம் ஆங்கிலத்தில் மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் உறுதுணையாக இருந்தார் புனுவல். எம்ஜிஎம் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இர்விங் தால்பர்க்குடன் கருத்து வேறுபாட்டால், மீண்டும் ஸ்பெயினுக்குத் திரும்பினார் புனுவல்.

‘அன் ஆண்டலேஷியன் டாக்’ திரைப்படக் காட்சி

ஸ்பெயின் உள்நாட்டுப் போர்

1933-ல் ‘லேண்ட் வித்தவுட் பிரெட்’ என்ற சர்ரியலிச கற்பனை ஆவணப்படத்தை இயக்கினார் புனுவல். பெயருக்குக் கற்பனையான ஆவணப்படம் என்று கூறினாலும், அன்றைய காலகட்டத்தில் ஸ்பெயினிலிருந்த விவசாயிகளின் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் இத்திரைப்படமிருந்தது. அப்போதைய ஸ்பெயின் அரசாங்கம் இத்திரைப்படத்துக்குத் தடை விதித்தது. இதற்குப் பிறகு படங்கள் இயக்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட புனுவல், பின்னர் பாரமவுன்ட் பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனங்களில் டப்பிங் பணிகளை மேற்பார்வை பார்க்கும் பணியில் சேர்ந்தார்.

‘அன் ஆண்டலேஷியன் டாக்’ திரைப்படக் காட்சி

மீண்டும் அமெரிக்கா!

1936-ல் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்பு, அவருடைய உயிர் நண்பர்களில் ஒருவரான கவிஞர் லோர்க்கா தேசியவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து 1938-ல் தன் குடும்பத்துடன் அமெரிக்கா வந்து அங்கேயே தங்க முடிவெடுத்தார் புனுவல். அமெரிக்க அரசாங்கத்தின் ‘மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்’ அருங்காட்சியகத்தில் ஆவணப் படங்கள் தயாரிக்கும் பிரிவின் மேற்பார்வையாளராகப் பணிக்குச் சேர்ந்தார். இக்காலகட்டத்தில், டாலி எழுதிய சுயசரிதையில், புனுவல் ஒரு தீவிரமான கம்யூனிசவாதி மற்றும் நாத்திகர் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் அமெரிக்காவின் அரசாங்கத்தில் பெரும் அதிகாரத்தைக் கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆர்ச்பிஷப் பிரான்ஸ் ஜோசப் ஸ்பெல்மேனை எட்டியதும், அவரின் அழுத்தம் காரணமாக வேலையை ராஜினாமா செய்தார் புனுவல்.

‘தி ஃபர்கட்டன்’ (1950)

மெக்சிகோ விஜயம்

1947-ல் பழைய தோழியான டென்னிஸ் டுவால் மூலமாக, மெக்சிகோவில் திரைப்படங்களைத் தயாரித்துவந்த ஆஸ்கர் டான்ஸிகரின் அறிமுகம் புனுவலுக்குக் கிடைத்தது. பின்பு மெக்சிகோவில் திரைப்படம் இயக்கும் படலத்தைத் தொடங்கினார். 1947-ம் ஆண்டு மெக்சிகோவில் அவர் இயக்கிய ‘மேக்னிவிஷியன்ட் கசினோ’ திரைப்படம் தோல்வியடைந்தது. பிறகு, 1949-ம் ஆண்டு ‘தி கிரேட் மேட்கேப்’ என்ற திரைப்படத்தின் மூலம் மெக்சிகோவில் தன் வெற்றியை நிலைநாட்டினார் புனுவல்.

‘த கிரேட் மேட்கேப்’ திரைப்படத்தை இயக்கும்போது விரைவாகத் திரைப்படத்தை இயக்கி முடிக்கும் வழிமுறையை தனக்காக உருவாக்கிக்கொண்டார். 125 ஷாட்களாக படத்தைப் பிரித்து, 16 நாட்களில் படப்பிடிப்பை நடத்திமுடித்தார். கடைசிவரை இந்த பாணியிலான இயக்கத்தைத் தனது அடையாளமாகக் கொண்டிருந்தார் புனுவல். இதன்பின் அவர், 1950-ம் ஆண்டில் இயக்கிய ‘தி ஃபர்காட்டன்’ திரைப்படம் மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மெக்சிகோவின் வறுமையை மிகத் தவறான கண்ணோட்டத்தில் பதிவுசெய்திருக்கிறார் என்று புனுவலின்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால், இத்திரைப்படம் கேன் திரைப்பட விழாவில் புனுவலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. இதற்குப் பிறகு பல திரைப்படங்களை மெக்சிகோவிலிருந்து உருவாக்கினார்.

தன்னுடைய 77-வது வயதுவரை, தொடர்ந்து படங்களை இயக்குவதில் மும்முரமாக இருந்தார் புனுவல். 1972-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘தி டிஸ்க்ரீட் ச்சார்ம் ஆஃப் பூர்ஷாஷி’ திரைப்படம், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது. சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியிருந்த சர்ரியலிசக் கொள்கையைத் தனது படங்களின் மூலம் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்தி, இறுதிவரை தன்னுடைய படங்களில் ஒரு கனவுத் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருந்தார் புனுவல்.

‘தி டிஸ்க்ரீட் ச்சார்ம் ஆஃப் பூர்ஷாஷி’ (1972)

புனுவல் அடிக்கடி கூறும், “கண்ணை மூடிவிட்டால் பார்க்கத் தொடங்கிவிடலாம்” என்பதே, அவரது கலைமேதமையின் திறவுகோல். தன் கனவுகளில் கதைகளைத் தேடி, நமக்களித்த புனுவல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, 1983 ஜூலை 29-ம் தேதி உயிரிழந்தார்.

x