இந்த வாய்ப்பெல்லாம் இன்ஸ்டாவால் வந்தது!


ஸ்ருதி செல்வம்

விஜய் டிவி-யின் ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் யாழினியாக வந்த ஸ்ருதி செல்வத்தை, ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. ‘தாழம்பூ’, ‘அரண்மனைக் கிளி’ சீரியல்கள் மூலம் தொடர்ந்து கவனம் பெற்றார். பிறகு ஜீ தமிழின் ‘யாரடி நீ மோகினி’யில் இந்தியும் தமிழும் கலந்துபேசும் மாடர்ன் பெண்ணாக, ‘சிம்ரன்’ கதாபாத்திரத்தில் வந்து இளசுகளின் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ்களில் இடம்பிடித்தார். அதன் விளைவு… தற்போது வெள்ளித்திரையில் முதல் வாய்ப்பு. நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘3.33’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ருதி செல்வம். விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், அவருடன் காமதேனுவுக்காக ‘சிட் சாட்’டியதிலிருந்து...

உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Small Town Girl With Big Dreams’ என்று புரொஃபைல் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஊர், குடும்பப் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...

பூர்விகம் சேலம். பிறந்தது சென்னையில். ஆனால், வளர்ந்தது முழுக்க குஜராத், டெல்லின்னு இந்தி பேசுற பல மாநிலங்கள்ல. அப்பா இந்திய விமானப் படையில் ‘வாரன்ட் ஆஃபீசர். சிபிஎஸ்சி பள்ளிகள்ல படிச்சதால வடக்கிந்திய பெண் மாதிரி நல்லா இந்தி பேசுவேன். இதைப் பார்த்த எங்கப்பா, “நம்ம மொழிய நீ மறந்துடக்கூடாது”னு சொன்னதோட, என்னை கோயமுத்தூருக்கு அனுப்பி ஏரோநாட்டிகல் சயின்ஸ்ல இன்ஜினியரிங் முடிக்க வெச்சார்.

அந்த 4 வருடமும் இந்தியை மறந்துட்டு, சக மாணவர்களுடன் தமிழில் பேசிப் பழகினேன். சின்ன வயசுலேர்ந்து நல்லா டான்ஸ் வரும். நான் டான்ஸ் ஆடுற விதத்தைப் பார்த்துவிட்டு என்னை காலேஜ்ல டான்ஸ் செக்ரெட்டரியாகப் போட்டாங்க. செகண்ட் இயர் படிக்கும்போது என்னோட சீனியர் அண்ணா ஒருத்தர், “நீ ரொம்ப போட்டோஜெனிக்கா இருக்கே.. என்னோட குறும்படத்துல நடிச்சுக் கொடு”ன்னு கேட்டார். அப்படித்தான் தொடங்கியது நடிப்பு என்ட்ரி. அப்புறம் பல குறும்படங்கள்ல நடிசேன். என்னை ரொம்ப ஃபேமஸ் ஆக்கியது ‘மைபோட்ட கண்ணாலா...’ மியூசிக் வீடியோதான். அது, 2017-ல் 12 மில்லியன் ஹிட்ஸ் அடிச்சது.

விஜய் டிவி-க்குள் எப்படி வந்தீர்கள்?

டிகிரி முடிச்சபிறகு ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம், பிரச்சினை இல்லாத வேலை. அங்கேயும் பலபேர், “நீங்க டிவி, சினிமாவுக்கு ட்ரை பண்ணலையா?”ன்னு கேட்டாங்க. சரி.. நம்ம அதிர்ஷ்டத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்ன்னு போட்டோஷூட் பண்ணி இன்ஸ்டாகிராம்ல என்னோட படங்களை போஸ்ட் பண்ணத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைப் பார்த்துதான் விஜய் டிவியிலேர்ந்து அழைப்பு வந்தது.

முதல்ல ஆங்கர் பண்ணக் கேட்டாங்க.. ஆனா, அதுல எனக்கு விரும்பம் இல்ல. அதனால, “எனக்கு சீரியல்ஸ் இருந்தா சொல்லுங்க”ன்னு கேட்டேன். அதுக்கப்புறம் சீரியல் ஆடிசனுக்கு கூப்பிட்டாங்க.. வந்து கலந்துக்கிட்டேன். 2 மாதம் கழித்து நான் செலக்ட் ஆன விஷயத்தைச் சொன்னாங்க. முதல் சீரியல்யே 2 கதாநாயகிகளில் ஒருத்தராக நடிக்கிற வாய்ப்பு அமைந்தது. விஜய் சீரியல்களுக்கு அப்புறம் ஜீ தமிழ் சீரியல்.

சீரியல் உலகத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

உங்க திறமை, உழைப்பைப் பொறுத்து அங்கே ஏற்றம் இறக்கம் எல்லாமே நடக்கும். இரண்டையுமே ஒரேமாதிரி எடுத்துக்கணும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் என்னுடைய கேரக்டருக்கு பெரிய வரவேற்பு. 90 எபிசோட் போனதே தெரியல. இந்த சமயத்துலதான் கரோனா முதல் அலை ‘லாக்டவுண்’ வந்தது. சேலத்துக்குப் போயிட்டேன்.

அப்போ, இ பாஸ் இருந்தால்தான் எங்கேயுமே போக முடியும். “சென்னைக்கு வந்து உங்க கேரக்டரை கன்டினியூவ் பண்ண விருப்பமா”ன்னு கேட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு, இ பாஸ்போட்டுக்கொண்டு துணிச்சலோட சென்னைக்கு வந்தேன். வந்ததும்தான் சொன்னாங்க, “கோவிட் பரவல் தீவிரமாக இருக்கிறதால நிறையப் பேரை வெச்சு ஷூட் பண்ணமுடியாது. அதனால பாதி கேரக்டர்ஸை குறைச்சுடச் சொல்லிட்டாங்க. அதுல உங்க கேரக்டரும் ஒண்ணு”ன்னு. இதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. ஆனாலும் அடுத்தநாளே மனசை மாற்றிக்கொண்டு, ஃபிட்னஸ்லயும் இன்ஸ்டாகிராம்லயும் கவனத்தைச் செலுத்தினேன்.

‘3:33’ படத்துக்கு எப்படித் தேர்வானீர்கள்? அதில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?

இந்த முறையும் இன்ஸ்டாதான் எனக்கு வழி அமைத்துக் கொடுத்தது. லாக்டவுண்ல நான் பண்ணின எல்லா போட்டோ ஷூட்டுமே இன்ஸ்டால செம ட்ரெண்டிங்! அதைப் பார்த்து வரிசையாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அப்படித்தான் ‘3.33’ படத்தோட ஆடிசனுக்கும் கூப்பிட்டாங்க. அங்க போனா... பாப்புலரா இருக்கிற ஹீரோயின் உட்பட 50 பேருக்கு மேல் வந்திருந்தாங்க. எல்லாருமே அவ்வளவு அழகு; அவ்வளவு திறமை.

ஆடிசன் முடிந்து 2-வது சுற்றில் எனக்கு சாண்டி மாஸ்டரோட டெஸ்ட் ஷூட் பண்ணினாங்க. கடைசியில, “நீங்கதான் நேச்சுரலா நடிக்கிறீங்க”ன்னு சாண்டி மாஸ்டரும் அந்தப் படத்தோட இயக்குநர் நம்பிக்கை சந்துரு சாரும் என்னை ஹீரோயினாத் தேர்வு செய்தார்கள். இந்தப் படம் ஒரு ஹாரர் த்ரில்லர் எக்ஸ்பிரிமென்ட். கதையைக் கேட்டுப் பயந்து நடுங்கிட்டேன். தியேட்டரில் கும்பலாப் பார்த்து பயந்து, கத்தி, அலறிப் பார்க்க வேண்டிய படம். இதுல பிருந்தான்னு நெக்ஸ்ட் டோர் கேர்ள் கதாபாத்திரம் எனக்கு. ஹீரோவுக்கு இக்கட்டான நேரத்துல ரொம்பவே சப்போர்ட் பண்ற ஒரு கேரக்டர். கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் இருவரோடும் நடித்த அனுபவம் எப்படி?

இந்தக் கதையில் பாடல்கள் கிடையாது. அதனால சாண்டி மாஸ்டர்கூட டான்ஸ் ஆடுகிற வாய்ப்பு எனக்கு அமையல. ஆனால், நிறைய டான்ஸ் டிப்ஸ் சொல்லிக்கொடுத்தார். கௌதம் மேனன் சார் கூட எனக்கு காட்சிகள் ஏதும் இல்லை. அவரை ஒருமுறை கூட சந்திக்க முடியல. படம் ரிலீஸ் ஆனதும் கண்டிப்பா அவரை மீட் பண்ணுவேன்னு நம்புறேன். “நீங்க கௌதம் மேனன் தேர்ந்தெடுக்கிற கதாநாயகி மாதிரி இருக்கீங்க”ன்னு இன்ஸ்டால நிறையபேர் வந்து காம்ப்ளிமென்ட் தருவாங்க. அதை இந்த இடத்தில் சொல்லவேண்டும் எனத் தோன்றுகிறது.

x