மிஸ்டர் ஜெகனை மறக்க முடியுமா?


அறுபதுகளில் தமிழ் சினிமா எம்ஜிஆர் - சிவாஜியை மையம் கொண்டிருந்த வேளையில், புதிய இளம் நாயகர்கள் காலடி எடுத்து வைத்தார்கள். இளவட்டத் துடிப்போடு தனித்த பாணியில் பயணத்தை ஆரம்பித்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் எனப் புதிய தலைமுறை நடிகர்கள் பிரகாசிக்கத் தொடங்கினார்கள். அவர்களில், நாயகன், வில்லன், குணச்சித்திரம் என முப்பரிமாணத்தில் ஜொலித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

நாடகத்திலிருந்து வந்த வெங்கி...

சினிமாவுக்கெல்லாம் முன்னோடியான நாடகக் கலை, தமிழ் சினிமாவுக்கு ஜாம்பவான் கலைஞர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறது. 70, 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களில் பெரும்பாலானோர் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். 1965-ல் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நாயகனாக அறிமுகமான ஸ்ரீகாந்தும் மேடை நாடகக் கலைஞராக இருந்தவர்தான். இந்தப் படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி போன்ற நடிகர்களும் அறிமுகமானார்கள். ஒரு படத்தில் அறிமுகமாகி, அதில் கிடைக்கும் புகழ் காரணமாகப் படத்தின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக்கொள்வது அப்போது வழக்கம். ஸ்ரீகாந்துடன் சேர்ந்து அறிமுகமான வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்களே இதற்கு உதாரணம்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், ஸ்ரீகாந்த் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல. வெங்கட்ராமன் என்பதுதான் அவரது இயற்பெயர். சுருக்கமாக வெங்கி. ஈரோட்டைச் சேர்ந்த வெங்கி அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாடகம், சினிமாவில் இருந்த ஈடுபாடு காரணமாக இயக்குநர் கே.பாலசந்தரின் மேடை நாடகக் குழுவில் இணைந்தார். 1966-ல் பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ படம் வெளியாவதற்கு முன்பே, அது நாடகமாக அரங்கேறியது. அதில் ‘ஸ்ரீகாந்த்’ (படத்தில் முத்துராமன் நடித்த கதாபாத்திரம்) என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வெங்கி. அந்த நாடகக் கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றதால், ஒரிஜினல் பெயரைத் துறந்து ஸ்ரீகாந்தாக மாறினார்.

கிடைத்த வாய்ப்புகளில் முத்திரை பதித்தவர்

முதல்படமான ‘வெண்ணிற ஆடை’யில் மனநல மருத்துவராக, ஸ்டைலாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த். அசத்தலாக அறிமுகமாகியிருந்தாலும் தொடர்ந்து நாயகனாக அவரால் நிலைபெற முடியாமல் போனது. தொடர்ந்து பாலசந்தரின் படங்களில் வாய்ப்பு கிடைத்தபோதும் குழு நாயகர்களில் ஒருவர், 2-ம் நாயகர் போன்ற கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். அதனால், ஸ்ரீகாந்த் கவலைப்படவில்லை. கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்தார். எனினும் வாய்ப்பு கிடைக்கும்போது நாயகன் கதாபாத்திரத்திலும் ஜொலித்தார்.

60-களின் பிற்பகுதியில் பாலசந்தர் படங்களிலும், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோர் நாயகர்களாக நடித்த படங்களிலும் ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடித்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியான ‘நாணல்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நவக்கிரகம்’ போன்ற வெற்றிப் படங்களில் பங்கு வகித்தார். ‘எதிர் நீச்சல்’ படத்தில் ‘கிட்டு’ என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை ததும்ப ஸ்ரீகாந்த் நடித்தது இன்றும் சிலாகிக்கப்படுகிறது. குறிப்பாக, செளகார் ஜானகியுடன் ஸ்ரீகாந்த் தோன்றிய ‘அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா...’ காலத்தால் அழிக்க முடியாத எவர்கிரீன் பாடல்.

தமிழ்த் திரையுலகில் மகன், தனது தந்தையையே எதிரியாகப் பாவித்து வளர்பவனாகக் காட்டிய முதல் படமாகவும் 'தங்கப்பதக்கம்’ நிலைபெற்றது. எஸ்.பி.செளத்ரியாக சிவாஜியும் ஜெகனாக ஸ்ரீகாந்தும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள்.

தொடர்ந்து கவனம் ஈர்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த், பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களிலும் வாய்ப்பு பெறத் தொடங்கினார். ‘வியட்நாம் வீடு’ படத்தில் முதன்முதலாகச் சேர்ந்து நடித்தார் ஸ்ரீகாந்த். ‘பிராப்தம்’, ‘ஞான ஒளி’ எனத் தொடர்ந்த இந்தப் பயணம் சிவாஜி-ஸ்ரீகாந்த் என்ற காம்போவாக உருவானது. அதற்கு ‘ராஜபார்ட் ரங்கதுரை’ பாதை அமைத்துக் கொடுத்தது. பாசமே திருவுருவான அண்ணனாக சிவாஜி நடிக்க, பாசமே இல்லாத அடாவடி தம்பியாக, சிவாஜிக்கு இணையாக ஸ்ரீகாந்த் வெளுத்துவாங்கியிருப்பார். அந்தக் கதாபாத்திரம் ஸ்ரீகாந்தை எதிர்மறை கதாபாத்திரத்துக்குரியவராகவும் மாற்றியது.

80-களின் எதிர்மறை நடிகன்

அதன்பிறகும் சிவாஜியின் பல படங்களில் நடித்த ஸ்ரீகாந்துக்குப் பெயரும் புகழும் பெற்றுக்கொடுத்தது ‘தங்கப்பதக்கம்’ படம். தமிழ்த் திரையுலகில் மகன், தனது தந்தையையே எதிரியாகப் பாவித்து வளர்பவனாகக் காட்டிய முதல்படமாகவும் நிலைபெற்றது. எஸ்.பி.செளத்ரியாக சிவாஜியும் ஜெகனாக ஸ்ரீகாந்தும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள். படம் பார்க்கும் ரசிகர்களையே அந்தக் கதாபாத்திரத்தின்மீது கோபம் கொள்ளும் அளவுக்கு ஸ்ரீகாந்த் மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

குணச்சித்திரம், நாயகன், எதிர்மறை கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நிலைபெற்றிருந்த காலத்தில் ‘காசி யாத்திரை’, ‘ராஜநாகம்’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்கள் ஸ்ரீகாந்துக்கு அழியாப் புகழையும் தேடிக்கொடுத்தன. எதிர்மறை கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடித்திருந்தாலும், அவர் அதிகாரபூர்வமாக வில்லனாக நடித்த முதல்படம் ‘பைரவி’. அந்தக் காலத்தில் சினிமாவில் ‘ரேப்’ காட்சிகளில் நடிப்பவரைத்தான் அசல் வில்லனாகப் பார்க்கும் நிலை இருந்தது. அந்தவகையில் ‘ரேப்’ காட்சிகளில் ஸ்ரீகாந்த் நடித்த ‘பைரவி’ அவருக்கு முதல் வில்லன் படம் எனலாம். இந்தப் படத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக மிளிர்ந்தார். இந்தப் படத்தில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அழியாப் படத்தை ரஜினி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

‘பைரவி’ படத்துக்கு பிறகான காலத்தில் ரஜினி-கமல் ஆகியோர் படங்களில் ஸ்ரீகாந்த் மாறி மாறி நடித்திருக்கிறார். 80-களின் இறுதிவரை சினிமாவில் தொடர்ந்து இயங்கிவந்த ஸ்ரீகாந்துக்கு, பிறகு பட வாய்ப்புகள் குறைந்துபோனது துரதிர்ஷ்டம்தான். அதன்பிறகு ஸ்ரீகாந்த் சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் அவருக்குப் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லை.

ஜெயகாந்தனின் வாசகர்

முதல்படமான ‘வெண்ணிற ஆடை’ படத்தில் சேர்ந்து நடித்தது முதலே, ஜெயலலிதாவுடன் நல்ல நட்பில் இருந்தார் ஸ்ரீகாந்த். ஜெயலலிதா முதல்வரான பின்னரும்கூட அவரை ஸ்ரீகாந்த், ‘அம்மு’ என்று அழைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் நட்பு இருந்தது. ஜெயலலிதாவின் முதல்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்ததைப் போலவே அவருடைய கடைசிப்படமான ‘நதியைத் தேடி வந்த கடல்’ படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். சினிமா, நடிப்புக்கு அடுத்து இலக்கியம், படிப்பு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் ஸ்ரீகாந்த். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பில் மூழ்கிவிடுவதும் அவருடைய பழக்கம். குறிப்பாக, எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தின்மீது காதல் கொண்டவர். ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த், அவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்களில் நடித்தது அவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது.

கூர்மையான அவதானிப்பு

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், சினிமா விஷயங்கள் அனைத்தையுமே அத்துப்படியாக வைத்திருந்தார். தன் சமகாலத்து நடிகர் இல்லை என்றாலும் ரஜினி மீது அன்பும் அபிப்ராயமும் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் குறித்து அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்புகூட ரஜினியைப் பார்க்க விரும்புவதாக ‘இந்து தமிழ்’ இணையத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்த அளவுக்கு ரஜினிமீது அவருக்கு பாசம் இருந்தது.

80 வயதில் இருந்த ஸ்ரீகாந்த் வயது முதிர்வால்கூட படுத்த படுக்கையாகவில்லை. அவர் அமரரான அக்டோபர் 12 காலை வரை நன்றாக இருந்தவர், மதியத்தில் இல்லாமல் போய்விட்டார். ஸ்ரீகாந்துக்குப் பெரும் பெயரும் புகழும் தேடித் தந்த ‘தங்கப்பதக்கம்’ படத்தில் தந்தை சிவாஜி, மகன் ஸ்ரீகாந்தை ‘மிஸ்டர் ஜெகன்’ என்றே அழைப்பார். தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெகனை என்றென்றும் மறக்க முடியாது!

x