தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா. 2018-ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோசீவ் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயினில் வசித்துவந்தார்.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா, இப்போது ஒரு செய்தியை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஸ்ரேயாவுக்குப் பெண் குழந்தை பிறந்து ஓராண்டு ஆகப் போகிறது.
ஸ்ரேயாவும் அவரது கணவரும் தங்கள் குழந்தையைக் கொஞ்சி விளையாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், ‛‛2020-ம் ஆண்டு உலகமே ஊரடங்கு காலத்தில் கலக்கத்திலிருந்தபோது எங்களது வாழ்க்கை மிகவும் அழகாக, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மாறியது. எங்கள் வாழ்வில் அழகான தேவதை வந்தார். கடவுளுக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா, கணவருடன் செல்லும் பயணங்களில் தொடர்ந்து போட்டோ, வீடியோவாக வெளியிட்டுவருவார். அப்படிப்பட்டவர், குழந்தை பிறந்து ஓராண்டு ஆகும் நிலையில் இவ்வளவு நாள் ரகசியம் காத்தது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.