‘குக் வித் கோமாளி’ போல் பிரபலமடையும் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கப்பட்டது ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி. தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கியும் கூட, இந்நிகழ்ச்சிகள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தெலுங்கு நிகழ்ச்சியிலிருந்து தமன்னாவை நீக்கிவிட்டு, அனுசுயா என்ற தொகுப்பாளினியை நியமிக்கவுள்ளனராம். பட்ஜெட்டை குறைக்கவே இந்த ஏற்பாடாம்.
நம்ம வெள்ளிக்கிழமை ராமசாமிக்கு ஒண்ணும் பாதிப்பில்லையே..!
‘அண்ணாத்த’, ‘சாணி காயிதம்’ படப்பிடிப்புகளை முடித்த கையோடு, ‘சர்காரு வாரி பட்டா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்பெயினுக்குக் கிளம்பிவிட்டார் கீர்த்தி சுரேஷ். அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளாராம் அம்மிணி.
அங்கே தாராளமா நடிச்சாத்தானே ஏராள வாய்ப்புக் கிடைக்கும்?
மலையாளம், தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழித் திரைப்படங்களில் நடித்தாலும் இசையின் மேலிருக்கும் ஆர்வத்தால், தொடர்ந்து தனியிசைப் பாடல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார் மடோனா செபாஸ்டின். ‘எவர்ஆஃப்டர்’ என்ற குழுவின் ‘நாளே’ என்ற தனியிசைப்பாடலில் நடித்துள்ளார் மடோனா செபாஸ்டின்.
மலையாளக் காணொலி எப்போது தமிழ் பேசுமோ?
நிக்கி கல்ரானியின் தங்கை சஞ்சனா கல்ரானி, போதை மருந்து வைத்திருந்ததால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இப்போது, அவர் மீது மேலும் ஒரு வழக்கைப் பதிந்துள்ளது பெங்களூரு காவல் துறை. கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏசி-யை இயக்கச் சொல்லி, ஓலா டாக்ஸி ஓட்டுநரை மிரட்டியதால் இந்த வழக்காம்!
'ஏசி' போடச் சொன்னதுக்கெல்லாம் ஒரு வழக்காய்யா..."
நடித்து முடித்த பல படங்கள் வெளியாகாமல் சிக்கி நின்றாலும், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார் ஹன்சிகா. தமிழில் ‘மஹா’, ‘பார்ட்னர்’, தெலுங்கில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ‘105 மினிட்ஸ்’ போன்ற படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், ‘ரவுடி பேபி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.
வரிசையா ஓடிடி-யில இறக்கிட வேண்டியதுதானே?