ஆர்யன் கானுக்காக ஆஜராகும் ‘காஸ்ட்லி’ வழக்கறிஞர்


சதீஷ் மானேஷின்டே - ஆர்யன் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். 23 வயதான ஆர்யன் கான், ஷாருக்கானின் மகன் என்பதால், இந்த வழக்கு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே என்பவர் ஆஜராக உள்ளார். ஆர்யன் கானுக்காக இவர் ஆஜராகப் போகிறார் எனத் தெரிந்ததும் இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.

சதீஷ் மானேஷின்டே, பாலிவுட் சம்பந்தமான பல முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றிபெற்றவர். கர்நாடக மாநிலம் தார்வாத் பகுதியில் பிறந்த சதீஷ் மானேஷின்டே, மும்பையில் சட்டம் பயின்றவர். இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மெலானியிடம் 1983-ல் ஜூனியராக பணியாற்றினார்.

ராம் ஜெத்மெலானி - சதீஷ் மானேஷின்டே

10 ஆண்டுகள் ராம் ஜெத்மெலானியோடு பயணித்த சதீஷ் மானேஷின்டே, பின்னர் தனியாக வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். பல முக்கிய அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பல பிரபலங்களின் வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டு, இந்தியாவின் பிரபலமான கிரிமினல் அட்வகேட் என்ற அந்தஸ்தை சதீஷ் மானேஷின்டே பெற்றார்.

இதனால், பாலிவுட்டின் முக்கிய புள்ளி என்ற நிலைக்கு சதீஷ் மானேஷின்டே உயர்ந்தார். குறிப்பாக, 1993-ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கிய சஞ்சய் தத்துக்கு இவர்தான் ஜாமீன் பெற்றுக்கொடுத்தார்.

சஞ்சய் தத் மீது 2007-ம் ஆண்டு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு ஆதரவாக பணியாற்றிய வழக்கறிஞர் குழுவில் இவரும் இருந்தார். இதன் பிறகு, சல்மான்கான் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழந்த வழக்கில் ஆஜராகி அவருக்கு ஜாமீனும் பெற்றுத் தந்தார்.

சஞ்சய் தத் - சதீஷ் மானேஷின்டே

சதீஷ் மானேஷின்டே இந்தியாவில் இருக்கும் காஸ்ட்லியான வழக்கறிஞர்களில் ஒருவர். இவர் ஒருமுறை ஆஜராவதற்கு ரூ.10 லட்சம் வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

சதீஷ் மானேஷின்டேவை அணுகுபவர்கள் சமூகத்தில் முக்கிய புள்ளியாக இருப்பதால், அவர்களுக்கு இந்தக் கட்டணம் கஷ்டமாக இருக்கப் போவதில்லை. முக்கிய பிரபலங்களுக்கு வழக்கறிஞராக மட்டும் இல்லாமல், பிரபலமான மற்றும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பல வழக்குகளை இவர் கையாண்டுள்ளார்.

குறிப்பாக, மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயா நாயக் வழக்கு, புக்கீ சோபன் மேத்தா வழக்கு, சோட்டா ராஜனின் மனைவி சுஜாத்தா நிக்கல்ஜின் ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற வழக்கு, ராக்கு சாவத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ள சதீஷ் மானேஷின்டே, மீண்டும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகனுக்காக ஆஜராக உள்ளதால், இந்த வழக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் எனச் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

x