இப்போ சந்தோஷம்தானே ருக்மணி சேச்சி!?


மோகன்லாலைப் பார்க்க வேண்டும் என அழும் ருக்மணி பாட்டி

வயோதிகத்தை 2-ம் குழந்தைப் பருவம் என்பார் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர். ஆம்! முதியவர்களின் உலகமே குழந்தைகளின் மனநிலைக்குச் சென்றுவிடுகிறது. அப்படித்தான் ருக்மணி பாட்டியின் கனவும். அவருக்குத் தன் மனம் கவர்ந்த நாயகன் மோகன்லாலைத் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது பெருங்கனவு.

தனது விருப்பத்தை அவர் அழுதுகொண்டே முன்வைக்கும் காணொலி, சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அதைப் பார்த்துவிட்டு, நடிகர் மோகன்லாலே அவரிடம் வீடியோ கால் மூலம் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மோகன்லால்

நடிகர் மோகன்லாலுக்கு ரசிகர்கள் இல்லாத மலையாளிகளின் இல்லமே இல்லை எனலாம். வயது வித்தியாசமின்றி அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். அப்படித்தான் ருக்மணி பாட்டியும்!

திருச்சூரைச் சேர்ந்த ருக்மணி பாட்டி, இளம் வயதிலிருந்தே மோகன்லாலின் தீவிர ரசிகை. யூடியூபர் ஜோபியின் மூலம்தான் ருக்மணி பாட்டியின் காணொலி வெளியானது. முதியோர்களின் வாழ்வை ஆவணமாகப் பதிவு செய்துவரும் ஜோபி ஒரு ஆட்டோ ஓட்டுநரும்கூட. அவரது ஆட்டோவில் ஒருமுறை பயணம் செய்திருக்கிறார் ருக்மணி. முதல் சந்திப்பிலேயே அவர் மோகன்லாலின் தீவிர ரசிகை என்பதை உள்வாங்கிக்கொண்டார் ஜோபி.

ஆட்டோ பயணத்தின்போதே ஜோபியிடம், “எனக்கு மோகன்லாலை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறார் ருக்மணி. உடனே ஜோபியும், “சரி... அதையே வீடியோவில் சொல்லுங்கள்” என கேமராவை ஆன் செய்தார். ருக்மணி பாட்டி, தான் மோகன்லாலின் அதிதீவிர ரசிகை எனச் சொல்லிவிட்டு, “நான் சாவதற்குள் அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்” என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பாட்டியின் இந்தப் பாசமழை காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ருக்மணி பாட்டியிடம் பேசும் மோகன்லால்

ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அந்தக் காணொலி, நடிகர் மோகன்லாலில் கவனத்துக்கும் போனது. பாட்டியின் நேசத்தில் குளிர்ந்துபோன மோகன்லால், உடனே ஜோபியைப் பிடித்து ருக்மணி பாட்டியிடம் வீடியோ காலில் பேசினார். அந்தக் காணொலி தான் இப்போது வைரல் ஆகியிருக்கிறது!

“என்னைப் பார்க்க வேண்டும் என ஏன் அழுதீர்கள்?” என மோகன்லால் கேட்க, பாட்டியோ, “டிவியில் உங்கள் படம் ஓடும்போது கண் இமைக்காமல் டிவிப் பெட்டியின் முன்னே இருப்பேன். இதனால் என்னைப் பலரும் மோகன்லால் என்றே கேலியாகக் கூப்பிடுவார்கள். ஆனால், நான் ஒருமுறையாவது என் இறப்புக்குள் அவரை நேரில் பார்த்துவிடுவேன் எனச் சொல்வேன். என்னை ஒருமுறையாவது சந்திப்பீர்களா?” என ஒரு குழந்தையைப் போல் கேட்டார்.

உடனே மோகன்லால், “கரோனா காலம் முடியட்டும். நிச்சயமாக நேரில் வந்து பார்க்கிறேன்” என்றார். பாட்டி மகிழ்ச்சியுடன் தலையசைத்ததுமே, “என்னை நேரில் பார்க்கப்போவதாக நீங்கள் சொன்னபோது உங்களைக் கேலி செய்தவர்களிடம், நானே உங்களை அழைத்துப் பேசியதைச் சொல்லுங்கள்” எனச் சொல்ல, பாட்டிக்குப் பரம சந்தோஷம்!

இதுகுறித்து ‘காமதேனு’ மின்னிதழிடம் பகிர்ந்துகொண்டார் ருக்மணி பாட்டி. “மோகன்லால் நடித்த முதல் படத்தில் இருந்து எல்லாப் படங்களின் டைட்டிலையும் என்னால் சொல்ல முடியும். அவரே என்னிடம் பேசியதை மறக்க முடியாது. ‘நல்லா இருக்கீங்களா?’ என என்னிடம் பாசமாகக் கேட்டார் மோகன்லால். ’உங்க வயசு என்ன?’ எனக் கேட்டுவிட்டு, ‘அய்யோ பெண்ணிடம் வயசு கேட்கலாமா?’ எனச் சிரித்த அவர், ‘சேச்சியிடம் (அக்கா) கேட்கலாம்’ எனச் சொன்னார். கடைசியில், ‘இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ எனக் கேட்டுவிட்டு சிரித்தார்” என்று சொல்லும் ருக்மணி பாட்டியின் குரலில் அத்தனைக் குதூகலம்!

தன் மனம் கவர்ந்த கலைஞன் தன் வீட்டுக்கு வரும் நாளுக்காகக் காத்திருக்கிறார் ருக்மணி பாட்டி. ‘லாலேட்டன்’ அதையும் நிறைவேற்றுவார் என நம்பலாம்!

x