சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் ப்ரியாவாக வந்து, தமிழ் ரசிகர்களின் ப்ரியத்துக்குரியவராக மாறியிருக்கிறார் அனகா.
குடும்பப் பெண், மாடர்ன் பெண் என இரு பரிமாணங்களிலும் அழகு, நடிப்பு, நடனம் என அசரடிக்கும் இவருக்கு, ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ தான் அறிமுகப் படம். அதில் ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக வந்து கவனம் ஈர்த்தவர். ‘டிக்கிலோனா’வில் சந்தானத்துடன் ‘பேர் வெச்சாலும்..’ ரீமிக்ஸ் பாடலில் இவர் ஆடிய நடனத்துக்காக நெட்டிசன்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழில் முதல் வரிசை கதாநாயகிகளுக்கான போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் அனகா, காமதேனு மின்னிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கேரளத்திலிருந்து ஆண்டுக்கு 10 கதாநாயகிகளாவது தமிழில் அறிமுகமாகிறார்கள். ஆனால், எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவதில்லை. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
‘நட்பே துணை’ படத்துக்குப் பிறகு 10 படங்களை அன்புடன் மறுத்திருக்கிறேன். நானே தமிழுக்குப் புதுமுகம் எனும்போது நாயகனும் புதுமுகம் என்றால், அதில் கதையும் எனது கதாபாத்திரமும் ‘வாவ்’ என்று சொல்லும்படியாக இருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது. ‘டிக்கிலோனா’வில் எனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். சந்தானம் பிரபலமான நடிகராக இருந்தாலும் இதில் கதையை நம்பியிருந்தது எனக்குப் பிடித்தது. இப்படிப் பார்த்துப் பார்த்து நடித்தால், நம்மை யாராலும் காணாமல் அடிக்க முடியாது. நிச்சயம் நட்சத்திரமாக ஜொலிக்கலாம்.
தமிழில் ‘கனகா’ என்றால் மிகவும் பிரபலம். அதென்ன ‘அனகா’?
சம்ஸ்கிருதத்தில் ‘அனகா’ என்றால் தவறுகள் செய்யத் தெரியாதவள் அல்லது தவறுகளைத் தவிர்ப்பவள் என்று அர்த்தம். அம்மா - அப்பா வைத்த பெயர்தான். ‘மறுதோரா’ குடும்பப் பெயர்.
கோழிக்கோடு எம்ஐடி-யில் எம்.டெக் முடித்த நீங்கள், 1 லட்சம் ரூபாய் ஊதியம் தந்த வேலையை உதறிவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தீர்களாமே... உண்மையா?
ஆமாம்! 1 லட்சத்து 35 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தேன். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோழிக்கோடில்தான். அப்பா - அம்மா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். நான், கோழிக்கோடு கோகுலம் பப்ளிக் ஸ்கூலில் ப்ளஸ் 2 முடித்தேன். பிறகு செங்கனூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ முடித்தேன். பின்னர் கோழிக்கோடு எம்ஐடி-யில் எம்.டெக் முடித்தேன். ‘எம்பேடட் சிஸ்டம்’தான் என்னுடைய மேஜர். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துவிட்டது. ஒரு 6 மாதம் ஓடியிருக்கும். ஆனால், நமக்குப் பிடித்தமானதைச் செய்யவில்லை என்பதை உணர்ந்து, “வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கக் போகிறேன்” என்றேன்.
வீடே குருஷேத்திரக் களம்போல் ஆகிவிட்டது. சிறு வயது முதல் டிவியைப் பார்த்து ஆடிப்பாடி நடித்துக் காண்பித்ததையும் பள்ளி நாடகங்களில் நடித்ததையும் பாராட்டியவர்கள். சினிமா என்றதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு காந்திய வழிமுறையில் எனக்கு வெற்றி கிடைத்தது. அதாவது, பல நாள் பட்டினி கிடந்தேன். அப்பாவும் அம்மாவும் துடித்துப் போய்விட்டார்கள். அவர்கள் என் மீதும் என் திறமை மீதும் வைத்துள்ள நம்பிக்கையை, நான் காப்பாற்றியாகவேண்டும் என்பதுதான் இப்போது எனக்குள்ள கவலை.
ஹிப் ஹாப் ஆதி, சந்தானம் உங்களுடைய கதாநாயகர்களைப் பற்றிக் கொஞ்சம்..?
ஆதியிடம் இசைத்திறமை மட்டுமல்ல; நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர், டைரக்டரும் உண்டு. அவ்வளவு சோவியல். சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவானவர் என்று தெரியும். ‘டிக்கிலோனா’வில் நகைச்சுவைக்கு என்று ஒரு நடிப்பு, சீரியஸான காட்சிகளுக்கென்று ஒரு நடிப்பு என்று மிரட்டிவிட்டார்.
கேரளத்திலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் நாடகப் பயிற்சி பெற்றவர்களாக, கலைக்குழுக்களில் பங்கேற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்?
அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். நடனம் ஆடத் தெரிந்தாலே நடிப்பும் தெரிந்துவிடும். தியேட்டர் அனுபவத்துடன் வருபவர்களை நான் வரவேற்கிறேன். ஆனால், சினிமாவுக்கு நடிப்பு பற்றிய உத்திகள் எதைப்பற்றியும் அதிகம் அறிந்துகொள்ளாமல் வருவது, இயக்குநர் கேட்கும் நடிப்பைக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை நேச்சுரல் ஆக்டிங் என்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகர் எந்த மொழியில் நடிக்கிறாரோ அந்த மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும். நமக்கு யாரும் ப்ராம்டிங் செய்யக்கூடாது என்று நினைப்பேன். தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்துகொண்டாலும் வசனங்களை நானே படித்து உணர்ந்து நடிக்க நினைக்கிறேன். அதற்காக தமிழ் மொழியை வாசிக்கக் கற்றுக்கொண்டு, தமிழ் காமிக்ஸ் புத்தகங்களைத் தற்போது எழுத்துக் கூட்டி வாசித்து வருகிறேன்.
உங்கள் ஊரான கோழிக்கோடு அருகில்தான் சமீபத்தில் ‘நிபா’ வைரஸ் பரவியது. அப்போது என்ன நினைத்தீர்கள்?
‘நிபா’ கேரளத்துக்கு புதிதல்ல. நிபா தொற்றைக் கையாள்வதில், கட்டுப்படுத்துவதில் எங்களுக்குப் பெரிய அனுபவம் உள்ளது. ‘வைரஸ்’ என்கிற படத்தையே எடுத்துக்காட்டியிருக்கிறோம். இந்தமுறை வைரஸ் பரவியபோது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடாதே என்று கவலை ஏற்பட்டு விட்டது. தவிர, சிறுவயதில் வவ்வால்கள், கிளிகள் கடித்த கொய்யா பழங்களை தோட்டத்து மரத்தில் பறித்துச் சாப்பிடுவேன். தற்போது வவ்வால்கள் கடித்த பழங்களில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று செய்திகள் வந்தபோது மனதுக்குள் அச்சம் பரவியது. சிறு குழந்தைகள் பறவைகள், வவ்வால்கள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது.
தற்போது எத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்?
மலையாளத்தில் மம்மூட்டி நடித்துவரும் ‘பீஷ்ம பர்வம்’ உட்பட 3 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். தமிழில் 2 படங்கள். அவற்றை, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்தான் அறிவிக்கவேண்டும் என்று எனக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!