நம்மவர்களுக்கும் வாய்ப்பு குடுக்கலாமே!


தேன்மொழி பி.ஏ., செம்பருத்தி, சித்தி 2 என ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார் உஷா எலிசபெத். அவருடனான உரையாடலில் இருந்து...

எந்தக் காலகட்டத்தில் அறிமுகம் ஆனீங்க... இப்போ கெரியர் எப்படி இருக்கு?

சின்னத்திரையைப் பொறுத்தவரை ‘கனா காணும் காலங்கள்’ தொடர்ல அறிமுகம் ஆனேன். அதுக்கு முன்னால, 2005-ல் இருந்தே சினிமாக்கள்ல சின்னச் சின்ன ரோல்ஸ் பண்ணிட்டு இருந்தேன். குறிப்பிட்டுச் சொல்ற மாதிரினா, ‘எம்’ மகன், வாகை சூடவா, ராட்டினம், அமரகாவியம், ராட்சசன், கடம்பன் படங்களைச் சொல்லலாம்.

நடிக்க வந்து 16 வருஷம் ஆகுது. எனக்கு பெரிய ப்ரேக் கொடுத்த கேரக்டர்னா, ‘பிரியமானவள்’ சீரியல் ஈஸ்வரி கேரக்டர் தான். இன்னைக்கும் நிறைய ஆடியன்ஸ் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாங்க. அதேமாதிரி, 2018-ல் ‘வென்றுவருவான்’ங்கிற படத்துல ஹீரோவுக்கு அம்மாவா, பார்வையற்ற பெண்ணா நடிச்சேன். அது ரொம்ப பவர்ஃபுல்லான ரோல். அதுல, ‘ஆராரோ ஆராரோ’னு ஒரு சாங், இப்பவும் அது வைரல் தான். ‘பிரியமானவள்’க்கு அப்புறமா ஒன் இயர் கேப் எடுத்துட்டு, திரும்ப நடிக்க வந்துட்டேன்.

இப்போ ஒரே நேரத்தில் 3 சீரியல் எப்படி சமாளிக்க முடியுது?

தேன்மொழி பி.ஏ., சீரியல்ல மாமியார் கேரக்டர். ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. ஒவ்வொரு எபிசோட்லையும் நான் இருப்பேன். ஆனா, ஷூட் சீக்கிரமே முடிஞ்சிடும். ஸோ... ஃப்ரீயா தான் இருப்பேன். அந்த நேரத்துலதான் செம்பருத்தி சீரியலில் ஒரு ரீப்ளேஸ்மென்ட் ரோல் நடிக்க வாய்ப்பு வந்தது. சரினு அதுலையும் கமிட் ஆனேன். அதுக்குப் பிறகு, சில வாரங்கள்லயே சித்தி 2 சீரியல்லயும் ஒரு ரீப்ளேஸ்மென்ட் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் கமிட் ஆகிருக்கேன்.

இதுக்கு முன்ன வரைக்கும் ரீப்ளேஸ்மென்ட் ரோல் பண்ணது இல்ல. முதல்முறையா பண்ணும்போது, “இதுக்கு முன்னாடி பண்ணவங்க எப்படிப் பண்ணாங்கனு தெரியல; ஆனா என்னோட பெஸ்ட்டை பண்றேன்”னு சொல்லித்தான் கமிட் ஆனேன். ரெண்டுமே பவர்ஃபுல்லான ரோல். இப்போ நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.

புதுப்புது சீரியல்ஸ் வரும்போது, ஹீரோ - ஹீரோயினும் புதுமுகங்களா இருக்காங்க. ஆனா குணசித்திர நடிகர், நடிகைகளாக அந்த அளவுக்குப் புதுமுகங்கள் வருவதில்லையே?

ஒரு சீரியலில் ஹீரோ - ஹீரோயினாக நடிப்பவர்களை, அடுத்த சீரியலிலும் அதேபோல காட்டினால், பெரிய வேறுபாடு இல்லாமல் முந்தைய கேரக்டர்களைப் போலயே ஆடியன்ஸுக்குத் தோன்ற வாய்ப்பு இருக்கு. ஆனா, குணச்சித்திர வேடங்கள்ல வர்றவங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

தமிழ் சின்னத்திரை இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை, கேரளா, பெங்களூரு, ஐதராபாத் நடிகைகள் வரவுதான் அதிகமா இருக்கு. ஏன்னா... நம்ம ஊர்ல இருந்து ஹீரோயின் ரோல் பண்ண வர்றவங்க ரொம்பக் கம்மியா தான் இருக்காங்க. அதனால வேற வழியில்ல. அதேநேரம், கேரக்டர் ஆர்டிஸ்டையும் கூட வெளிமாநிலங்களில் இருந்து கூட்டிட்டு வரும்போதுதான் கஷ்டமா இருக்கு. எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைச்சிட்டு இருந்தாலும், என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் ரெண்டு மூணு வருஷமா மேக்-அப் போடாத ஆர்டிஸ்ட்டா இருக்காங்க. அவங்களைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கு.

இந்தப் பிரச்சினை தீர ஏதாவது வழியிருக்கா?

இந்த விஷயம் பத்தி சின்னத்திரை நடிகர்கள் யூனியன்ல பேசிருக்கோம். இருந்தாலும் சேனல்களோட முடிவுனு வரும்போது அவங்களும் தலையிட முடியறதில்ல. வெளிமாநில நடிகர், நடிகைகள் நடிக்கக்கூடாதுனு இல்ல. ஆனா, நம்ம ஊர்ல இருக்கிறவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே. அப்படி கொடுக்கும்போது தயாரிப்பாளர்களுக்கும் செலவு குறையும். இது விஷயமா தொடர்ந்து எங்க யூனியன்ல முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. பதவி, பொறுப்பு அப்படிங்கிறத தாண்டி, யூனியன்ல தொடர்ந்து நானும் ஆக்டிவ்வா இருக்கேன். நல்லது நடக்கும்னு நம்புறேன்.

ஆல்பம் சாங்ஸ் பக்கமும் கவனம் செலுத்துறீங்களாமே!

பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி மகளிர் தினத்தையொட்டி ஒரு பாடல் எழுதி, நானே பாடி, டைரக்ட் பண்ணி ஆல்பம் சாங் தயார் பண்ணி வெளியிட்டேன். அடுத்தடுத்து பண்ணவும் ஐடியா இருக்கு. இப்போ 3 சீரியல்ஸ்ல நடிச்சிட்டு இருக்கிறதால நேரம் ஒதுக்க முடியாம இருக்கு. சினிமாவைப் பொறுத்தவரை கிடைக்கிற வாய்ப்பை மட்டும் அக்சப்ட் பண்ணிட்டு இருக்கேன். பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறதால, மலையாள படங்கள்ல நடிக்க ரொம்பவே ஆர்வமா இருக்கு. முதல்முறையா மலையாளத்துல ‘யாழி’ங்கிற படத்துல நடிச்சிருக்கேன். இன்னும் சில வாய்ப்பும் வந்துட்டு இருக்கு.

x