பரபரப்பான இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கையில், மனிதர்களுக்கு சில மணிநேரம் இளைப்பாறுதல் தருவதில் நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு முக்கிய இடமுண்டு. இன்றைய சினிமா நகைச்சுவைக் காட்சிகள், வசனங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், மவுனத் திரைப்படக் காலகட்டங்களில், நடிகர்களின் உடல்மொழியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு நகைச்சுவை இருந்தது. அவ்வகை நகைச்சுவைகளைப் பயன்படுத்தி திரைக்கதைகளைக் கட்டமைத்த இயக்குநர்களுள் ஒருவர்தான் பஸ்டர் கீட்டன். அதியற்புதமான நகைச்சுவை நடிகராகவும், ரசிகர்களின் மனதைப் படித்த ஒரு தேர்ந்த இயக்குநராகவும் பிரகாசித்தவர் பஸ்டர் கீட்டன்.
பிறவிக் கலைஞன்
அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில், 1895 அக்டோபர் 4-ல் பஸ்டர் கீட்டன் பிறந்தார். தாய், தந்தை இருவரும் நகைச்சுவை நிகழ்வுகளை நடத்தும் மேடைக் கலைஞர்கள். தனது தந்தை ஜோசப் ஜோ கீட்டன் நடத்தி வந்த மேடை நகைச்சுவை நிகழ்வுகளில், 3 வயதிலிருந்தே பங்குபெற ஆரம்பித்தார் கீட்டன். பஸ்டர் என்பது பொதுவாகக் கேலியாக ஒருவரை அழைக்கப் பயன்படுத்தும் சொல். 18 மாதக் குழந்தையாக இருந்தபோது படிக்கட்டில் உருண்டு எந்தக் காயமும் இல்லாமல் கீட்டன் எழுந்து நின்றதைப் பார்த்து, அவருடைய தந்தையின் நண்பரால் அளிக்கப்பட்ட பெயர்தான் ‘பஸ்டர்’. அன்றிலிருந்து ஜோசப் பிராங்க் கீட்டன், ‘பஸ்டர் கீட்டன்’ என்றழைக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே உடலில் எந்தவிதமான சேதாரமும் ஏற்படாத வகையில், மேடைகளில் மிக ஆபத்தான சாகசங்களைச் செய்வதில் கை தேர்ந்தவராகக் கீட்டன் இருந்தார். இதனால், ‘சேதப்படுத்த முடியாத குட்டிப் பையன்’ என்று மக்கள் மத்தியில் புகழப்பட்டார். மேடை நிகழ்ச்சிகளில், சிறுவயது கீட்டனை அவரது தந்தை தூக்கி எறியும்போது, குதூகலத்தில் சிறுவன் கீட்டனுக்குச் சிரிப்பு வந்துவிடும். ஆனால், தான் சிரிக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பு குறைகிறது என்பதைக் கவனித்த கீட்டன், அதுமுதல் சிரிக்காமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நகைச்சுவைக் காட்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். இதைத் தனது வாழ்நாளின் இறுதிவரை கடைபிடித்தார். உணர்வற்ற முகம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘தி கிரேட் ஸ்டோன் ஃபேஸ்’ என்ற பட்டப்பெயரும் கீட்டனுக்கு உண்டு. ஆனால், தனது அகன்ற கண்கள் வழியாக மனதின் உணர்வுகளை நமக்கு உணர்த்திவிடக்கூடிய மாபெரும் நடிகன் அவர்.
மேடையிலிருந்து திரைப்படங்களுக்கு..
தன்னுடைய 26-வது வயதில், முதல் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் இணைந்து சேவையாற்றினார் கீட்டன். ராணுவ சேவை முடித்து ஊர் திரும்பிய கீட்டனுக்கு அக்காலகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ரோஸ்கோ ஆர்பக்கிளின் நட்பு கிடைத்து, கீட்டனும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1917-ல், ‘தி புட்ச்சர் பாய்’ என்ற சிறிய நகைச்சுவைத் திரைப்படத்தில் தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கினார்.
இயல்பிலேயே திறமை வாய்ந்த கீட்டன், ‘தி ரஃப் ஹவுஸ்’ என்ற திரைப்படத்தை ஆர்பக்கிளுடன் இணைந்து இயக்கினார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த கீட்டன், 1920-ல் ‘ஒன் வீக்’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். அதைத் தொடர்ந்து பல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கி நடித்து சாதனை புரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பிற நகைச்சுவைக் கலைஞர்கள் கீட்டனின் உடல் மொழிக்கும், அவரின் சாகசங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். அவருடைய சாகசக் காட்சிகள் அனைத்தும், மயிரிழையில் கவனம் சிதறினாலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விதத்திலிருக்கும். அப்படியான சாகசங்களைத் திரைக்கதையில் மிகக் கச்சிதமாகப் பொருத்துவது எப்படி என்ற நுணுக்கத்தை அறிந்திருந்ததே, கீட்டனை ஒரு சிறந்த இயக்குநராக வரலாற்றில் நிலைநிறுத்தியது.
வாழ்க்கை சறுக்கல்
புகழின் உச்சியில் இருந்த கீட்டன், 1928-ம் ஆண்டு மெட்ரோ கோல்ட் வின் மேயர் (எம்ஜிஎம்) படத் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநரானார். அக்காலகட்டத்தில், அவருடன் ‘அவர் ஹாஸ்பிடாலிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்த நட்டாலியா தல்மாட்ஜ் என்ற நடிகையைக் கீட்டன் மணம் முடித்திருந்தார். எம்ஜிஎம் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு, பஸ்டர் கீட்டனின் திரைவாழ்க்கை சரிய ஆரம்பித்தது. கீட்டன் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் பல கட்டுப்பாடுகளை விதித்தது எம்ஜிஎம் நிறுவனம். தயாரிப்புச் செலவைக் குறைக்க தன்னுடைய திரைப்படங்களிலும் சமரசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கீட்டன். இதுபோக, கீட்டனை நம்பி மிகப் பெருமளவில் முதலீடு செய்திருந்ததால், அவரை ஆபத்தான சாகசங்கள் செய்வதிலிருந்து விலகிக்கொண்டு ‘டூப்’ கலைஞர்களைப் பயன்படுத்துமாறு அந்நிறுவனம் வலியுறுத்தியது. ‘டூப்களால் சாகசம் செய்ய முடியுமே ஒழிய சிரிப்பை வரவழைக்க முடியாது’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, எம்ஜிஎம் நிறுவனத்திலிருந்து விலகினார் கீட்டன். இந்நிலையில் அவருடைய திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது.
பெரும் சோகத்தில் சிக்கிக்கொண்ட கீட்டன், குடிபோதையில் வாழ்க்கையைக் கழிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2-ம் முறையாக செவிலியர் ஒருவரையும் திருமணம் முடித்தார். அந்தத் திருமணமும் 3 வருடங்களில் விவாகரத்தில் முடிந்துபோக, இறுதியாக தன்னைவிட 23 வயது குறைவான எலோனார் நோரிஸ் என்ற நடன மங்கையை 1940-ம் ஆண்டு மணமுடித்தார். எலோனாரை மணம் முடித்த பிறகு, கீட்டனின் வாழ்வில் மீண்டும் ஒளி திரும்பியது. மீண்டும் எம்ஜிஎம் நிறுவனத்தில் திரைப்படங்களுக்கு நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிக் கொடுக்கும் அன்றாட வேலையில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். புகழ்பெற்ற ‘த்ரீ ஸ்டூஜஸ்’ கூட்டணி நடித்த பல திரைப்படங்களுக்கு, நகைச்சுவைத் துணுக்குகளை எழுதினார் கீட்டன்.
மீண்டெழுந்த கீட்டன்
1940-களுக்குப் பிறகு பல திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும், கவுரவ வேடங்களிலும் நடித்த கீட்டன் அதே சமயத்தில் பல நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிக்கொடுத்து, அத்திரைப்படங்களின் இயக்கத்தை செம்மைப்படுத்தவும் உதவியாக இருந்தார். 1949-ம் ஆண்டுக்குப் பிறகு தொலைக்காட்சியின் பக்கம் கீட்டனின் பயணம் நகர்ந்தது. 1951-ல் ‘லைஃப் வித் பஸ்டர் கீட்டன்’ என்ற தொலைக்காட்சித் தொடர், அமெரிக்கா முழுவதும் பெரும் வெற்றியடைந்தது.
1917 முதல் 1963 வரை, ஏறத்தாழ 45 வருடங்கள் திரைத் துறையில் கீட்டனின் பயணம் தொடர்ந்தாலும் 1920 முதல் 1929 வரை, அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் திரைக்கலையின் உச்சம் என்று பல சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்படுகின்றன. இக்காலகட்டத்தில் அவர் இயக்கிய ‘தி ஜெனரல்’ திரைப்படம், உலகில் உள்ள சிறந்த திரைப்படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு திரைக்காவியம். ‘தி ஜெனரல்’ என்ற ரயில் இன்ஜினை இயக்கும் பொறியாளராக இத்திரைப்படத்தில் நடிப்பிலும், இயக்கத்திலும் புது உச்சம் தொட்டிருப்பார் கீட்டன். ரயில் சக்கரத்தில் உட்கார்ந்துகொண்டே நகருவது, ரயிலுக்கு முன்னால் ஓடி சாகசம் செய்வது, அமெரிக்காவின் தெற்கு மாநிலத்திலிருந்து ஜெனரல் ரயில் இன்ஜினை திருடிக்கொண்டு போகும் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்த படைப்பிரிவை ஒற்றை ஆளாக துரத்திச் செல்வது என்று விறுவிறுப்பான திரைக்கதையில், தன்னுடைய நகைச்சுவைத் திறனைக் குழைத்து ஒரு கலை ஓவியமாக ‘தி ஜெனரல்’ திரைப்படத்தை உருவாக்கினார் கீட்டன். 1952-ல் சார்லி சாப்ளின் இயக்கிய ‘லைம்லைட்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து அசத்தினார் கீட்டன்.
பகடி மேதை
பகடி என்ற நகைச்சுவை வகைமையை மிகச் சிறப்பாகக் கையாண்ட ஒரு சில நகைச்சுவை நடிகர்களில், பஸ்டர் கீட்டனும் ஒருவர். ‘பிறர் மனம் கோணாமல் பகடி செய்வது எப்படி’ என்பதின் உயிரோட்டமான உதாரணம் அவர். இறுதியாக, 1967-ம் ஆண்டு ‘தி ஸ்க்ரைப்’ என்ற குறும்படத்தில் கீட்டன் நடித்தார். அக்காலகட்டத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கீட்டன், தன்னுடைய 70-வது வயதில் மரணமடைந்தார்.
நகைச்சுவை என்றாலே காமெடி பேய்ப்படங்கள்தான் என்ற சிறு வட்டத்துக்குள் மாட்டிக்கொண்ட நம்மூர் திரைக்கலைஞர்களும், நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்பவர்களும், பெண்களை, சிறுபான்மையினரை அவமானமாகப் பேசுவதை நகைச்சுவை என்று கொண்டாடுபவர்களும் பஸ்டர் கீட்டனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்!