ரஜினி சரிதம் - 35 காதல் வளர்ந்த கதை!


லதாவுடன் ரஜினி

சௌகார் ஜானகியின் வீட்டில் நடந்த ‘தில்லு முல்லு’ படப்பிடிப்பின் போது, ரஜினியைச் சந்தித்துப் பேட்டி எடுத்தார் லதா. சினிமாவைத் தாண்டி பொதுவான விஷயங்களை இருவரும் அதிகமாகப் பேசினார்கள். அந்த உரையாடலில், இருவரின் சிந்தனைகளும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தன. திருமணம் பற்றிய லதாவின் கேள்விக்கு, “உங்களைப்போல் ஒரு பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்துகொள்ளத் தயார்” என்று ரஜினி அளித்த பதில், லதாவின் இதயத்துள் காதலை அரும்பச் செய்தது.

பொங்கிய நாணத்துடன் நேராகத் தன்னுடைய அக்காள் சுதாவிடம் வந்தார். “ரொம்ப தேங்க்ஸ் சுதா... உன்னாலத்தான் ரஜினியை பேட்டி எடுக்க முடிஞ்சுது. ரொம்ப நல்ல இன்டர்வியூ. இப்போ என் மனசே மாறிப்போச்சு” என்றார். தங்கையை கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்தார் அக்காள் சுதா. ‘சாதுனியாக ஆகப்போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தவளிடம் எப்படி திடீர் மாற்றம் என்று நினைத்த சுதா, ”மனசு மாறிப்போச்சுன்னா... என்னடி அர்த்தம்?” என்று மடக்கினார். அப்போது, தன் உள்ளத்தில் காதல் துளிர்த்தது பற்றி கூறாமல், “ஒரு நல்ல மனுசனைப் பார்த்தேன்” என்றார் லதா.

இப்போது சுதாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. எதற்கும் லதாவைக் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண்போகவில்லை. ரஜினியின் அழைப்பை ஏற்று, ‘காளி’ படத்தின் ப்ரிமியர் காட்சிக்குச் சென்று வந்தபிறகு, லதாவின் முகத்தில் தனித்ததொரு மலர்ச்சியைக் கண்டார் சுதா. இந்த முறை அக்காவிடம் லதாவால் மனதில் கிடந்ததை மறைக்க முடியவில்லை. “ரஜினி எனக்குப் புரப்போஸ் பண்ணியிருக்கார் அக்கா... எனக்கும் அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘வீட்டுக்கு வந்து பேசலாமா?’ன்னு கேட்கிறார்” என்றார். சுதா பெற்றோரிடம் விஷயத்தை எடுத்துச் சென்றார்.

எதிர்ப்பும் ஏற்பும்

வீட்டில் பூகம்பம் வெடித்தது. “லதாவை நேரா என்னோட முகத்தை நேருக்கு நேரா பார்த்து சொல்லச் சொல்லு... உன்னை மாதிரி அவளுக்கும் சுதந்திரம் கொடுத்துத்தானே வளர்த்துருக்கேன்?” என்று வெடித்தார் அப்பா ரங்காச்சாரி. இதுதான் சரியான தருணம் என்று நினைத்த லதா, அப்பாவின் எதிரே தைரியமாக வந்து நின்றார். “அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்குப்பா… எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நான் தெரிஞ்சுக்கிட்ட வரைக்கும் ரஜினி நல்ல கேரக்டர்ப்பா.” என்று சொன்னார்.

“ நல்லவர்ன்னு நீ சொல்ற... ஆனால் ரஜினி ‘நர்வஸ் பிரேக் டவுன்’ வந்து 2 மாசம் ட்ரீட்மென்ட் எடுத்துருக்கார். எல்லா பத்திரிகையிலயும் செய்தி வந்ததே, நீயும் படிச்சேதானே... நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இதேமாதிரி ஹெல்த் ப்ராப்ளம் வந்தா... நீ தான் மனசளவுல கஷ்டப்படணும். அதை மனசுல வெச்சுக்கோ. அதையும் மீறி ரஜினிதான்னு முடிவு பண்ணிட்டியானா எங்கள மறந்துடு” என்று ஒரே போடாகப் போட்டார் அப்பா.

அடுத்து வந்த நாட்களில், லதாவுடன் முகம் கொடுத்து பேசுவதையே அம்மாவும் அப்பாவும் தவிர்த்தார்கள். வீட்டில் கனத்த அமைதி. லதாவுக்குப் பெற்றோரின் கவலையும் பிடிவாதமும் புரிந்துவிட்டது. அவர்களுடன் சண்டைபிடித்து கஷ்டப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். என்றாலும் பெற்றவர்களா, ரஜினியா என்கிற தீவிர மனப்போராட்டம் அவரை படுத்தி எடுத்தது.

சில நாட்கள் நீடித்த குழப்பத்துக்குப் பின்னர், லதா உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். “என்னோட மனசுல இருந்ததை மறைக்காமல் ஓபனா உங்ககிட்ட சொல்லிட்டேன். இனிமே உங்க முடிவுதான். அதுக்காக எங்கூட பேசாம இருக்க வேணாம்” என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டார். இப்போது லதாவின் பெற்றோர் இறங்கி வந்தார்கள்.

“அத்திம்பேருக்கு போன்போட்டு வரச்சொல்லு.. டிஸ்கஸ் பண்ணுவோம்” என்றார் லதாவின் அப்பா. அவர் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைந்தார் ஒய்.ஜி.மகேந்திரா. ‘மிஸ்டர் ரஜினி உங்களைப் பார்த்து முறைப்படி பேசணும்கிறார்… என்ன சொல்றேள்? வரச்சொல்லட்டுமா, வேணாமா..?” என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.. மறுநாளே லதா வீட்டில் அந்தச் சந்திப்பு நடந்தது.

குருவின் ஆசியும் அறிவுரையும்

தன்னுடையை வாழ்க்கைத் துணை இவர்தான் எனத் தெரிந்தபிறகு, விருப்பத்தைத் தள்ளிப்போட விரும்பவில்லை ரஜினி. ‘காளி’ ப்ரிமியர் காட்சி முடிந்த அடுத்தநாளே, நண்பரும் சக நடிகருமான ஒய்.ஜி.மகேந்திராவின் உதவியை நாடிவிட்டார். அவரை அழைத்த ரஜினி, “லதா சொன்னாங்களா... நான் அவங்கள கல்யாணம் செய்துகொள்ள விரும்பறேன்” என்றார். “வீட்ல அதுதானே இப்போ டாபிக். நீங்க ரெண்டுபேரும் விரும்பறீங்க. இதுல இனிமே முடிவெடுக்க வேண்டியது உங்க ரெண்டுபேரோட பேரன்ட்ஸ்தான். நாளைக்கே லதா பேரன்ட்டை மீட் பண்ண ஏற்பாடு செய்றேன். நீங்க எப்ப வரணும்னு டைம் சொல்லிடுறேன். அவங்க கொஞ்சம் ஆர்த்தொடாக்ஸ். நேரம் காலம் பார்ப்பாங்க.. ஷூட்டிங்ல இருந்தா பிரேக் டைம்ல வந்துட்டுப்போயிடுங்க. கடவுள் முடிவு அதுதான்னா, கண்டிப்பா உங்க மேரேஜ் நடக்கும்” என்று ஒய்.ஜி.மகேந்திரா ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டுப்போனார்.

தனியாக லதா வீட்டுக்கு வந்த ரஜினியிடம், “வீட்ல உள்ள பெரியவாள்கிட்டப் பேசினீங்களா?” என்றார் லதாவின் அப்பா. “ நீங்க ஓகேன்னு சொன்னா உடனே பெங்களூர் போய் அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு அண்ணனை அழைச்சுட்டு வந்துருவேன். அவர்தான் எனக்கு எல்லாமே. அப்பாவை அலையவைக்க வேண்டாமேன்னு பார்க்கிறேன்” என்றார் ரஜினி.

“இதுல நாங்க என்ன சொல்றதுக்கு இருக்கு மிஸ்டர் ரஜினி... தன்னோட வாழ்க்கையை லதா தேர்ந்தெடுத்திருக்கா. அவளை நம்புறோம். அந்த நம்பிக்கையை உங்ககிட்டயும் எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லி, காபி கொடுத்து அனுப்பிவிட்டார்கள் லதா வீட்டில். இவர்கள் அப்ஜெக்‌ஷன் சொல்கிறார்களா... இல்லை, ஆசிர்வாதம் செய்கிறார்களா என்று புரியாமல் சற்றே குழம்பிப் போனார் ரஜினி.

மோப்பம் பிடித்த நிருபர்

அந்தக் குழப்பத்தைப் போக்கினார் லதா. “இனி உங்க வீட்ல வந்து என்னைப் பார்த்து ஓகே சொன்னால் போதும்” என்றார். அப்போது ‘தில்லு முல்லு’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. தனக்கு ஷூட் இல்லாத ஒருநாளில், லதாவைப் படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்துக் கொண்டுவந்தார் ரஜினி. நேரே பாலசந்தரின் முன்னால்போய் நின்று.. “சார்… மீட் மிஸ் லதா. இவங்களத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றார். “ரொம்ப சந்தோஷம். அவங்க வீட்ல சம்மதம் வாங்கியாச்சா?” என்று ரஜினியைப் பார்த்து கேபி கேட்டதற்கு, “எஸ்... சார்.” என்று பதில் சொன்னவர் லதா.

அப்போது அவரிடம், “இவன் கொஞ்சம் கோவக்காரன். கையை ஓங்கிடப்போறான். நீதான்மா பார்த்து நடந்துக்கணும்” என்று சொல்லிவிட்டு, ரஜினியைப் பார்த்தார். ரஜினி அப்போது வெட்கப்பட்டு நின்றார். தூரமாக நின்று ‘தில்லு முல்லு’ படப்பிடிப்புத் தளத்தை நோட்டம்விட்டுக் கொண்டிருந்த பிரபல பத்திரிகையின் அந்த நிருபர், ஒரு பெண்ணுடன் வந்துபோன ரஜினியைப் பார்த்துவிட்டார். “அந்தப் பெண் யார்... ஏன் இருவரும் ஒன்றாக கேபியை சந்திக்க வந்தார்கள்” என்றெல்லாம் படக்குழுவினரைத் துருவத் தொடங்கினார் நிருபர். தனக்குக் கிடைத்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ரஜினியை நிழல்போல தொடர ஆரம்பித்தார். இந்தச் செய்தி ரஜினி காதுக்கு வந்தாலும் பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர் பக்குவப்பட்டிருந்தார்.

விரும்பிய பெண்ணின் வீட்டிலும் சம்மதம் கிடைத்துவிட்டது. குருவிடமும் சொல்லியாகிவிட்டது. இனி, வீட்டார் சம்மதம்தான் பெறவேண்டும் என அன்றே பெங்களூருவுக்குப் பறந்த ரஜினி, அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார். “அண்ணனை அழைச்சிட்டுப்போய் பேசிட்டு வந்துடுப்பா.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்லி மகனை அணைத்துக் கொண்டார் அப்பா ரானோஜி.

ஆனால், அண்ணன் சத்யநாராயணா, “என்னப்பா சொல்றே... பொண்ணு நம்ம கேஸ்ட் இல்லேங்கிற... சொந்தத்துல எவ்வளவு பொண்ணுங்க இருக்காங்க?” என்று தயங்கினார். லதாவைப் போலவே ரஜினியும் இந்த சமயத்தில் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து அண்ணனிடம் சொன்னார். “நான் நல்லா இருக்கணும்னு நினைச்சா, லதா நம்ம வீட்டுக்கு மருமகளா வர்றதைத் தடுக்காதீங்க”

தம்பியின் தடாலடியை சிறுவயதிலிருந்து பார்த்து வரும் அண்ணன், “உனக்கு சரின்னு தோனிட்டு... சரிப்பா... பேசறதுக்கு நான் வர்றேன். பெண்ணைப் பார்த்துட்டு அபிப்ராயம் சொல்றேன்” என்றார்.

மறுநாளே சென்னை வந்து, லதாவையும் அவருடைய பெற்றோர்களையும் பார்த்தார் சத்ய நாராயணா. அந்த முதல் சந்திப்பிலேயே, அவருக்கு லதாவையும் அவருடைய குடும்பத்தாரையும் ரொம்பவே பிடித்துப்போய் விட்டது. அவரும் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.

அதன்பிறகு, கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லதாவின் சகோதரர் ரவிச்சந்தருக்கு (ரவி ராகவேந்தர்) ரஜினி - லதா திருமணம் முடிவாகியிருக்கும் தகவலைச் சொன்னார் அப்பா ரங்காச்சாரி. உடனே, சென்னை வந்து ரஜினியைச் சந்தித்தார் ரவிச்சந்தர். அவரும், ‘இவரைவிட நம்ம சகோதரிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்’ என்ற முடிவுக்கு வந்து, தனக்கும் பூர்ண சம்மதம் என்றார்.

எல்லா மேகங்களும் விலகிவிட்டன. ரஜினியும் லதாவும் தொலைபேசி வழியாக காதலை வளர்த்து வந்தார்கள். நாட்கள்... மாதங்களாக ஓடிக்கொண்டிருந்தன. 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், ஏதோ ஒரு முட்டுக்கட்டை. லதா வீட்டில் மீண்டும் குழப்பம்… லதா - ரஜினி திருமணம் நடக்குமா என்கிற சந்தேகம். அந்த சமயத்தில் ரஜினிக்காக லதா வீட்டாரிடம் பேசினார் தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர்!

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

x