நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கணவன், மனைவியாக உள்ள நாங்கள் பிரிகிறோம் என நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில், ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை நான்கு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் பிரியப் போவதாகச் செய்திகள் பரவின. திருமணத்திற்குப் பின் தன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதைச் சேர்த்து சமூகவலைத்தளத்தில் தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிய சமந்தா, சில வாரங்களுக்கு முன் அக்கினேனியை அகற்றிவிட்டு தன் சமூகவலைத்தள கணக்குகளை ‛எஸ்’ என்று மட்டும் மாற்றினார். அப்போதே இவர்கள் பிரிவதாகச் செய்திகள் கிளம்பின. திருமணத்திற்கு பிறகும் மாமனார் நாகர்ஜுனாவின் விருப்பத்தை மீறி சமந்தா தொடர்ந்து நடித்துவருவதுதான் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி என்று பலரும் கூறிவந்தனர்
தொடர்ந்து சமந்தா தனியாக வெளிநாடு சுற்றுலா சென்றது, நாக சைதன்யா பட விழாவில் பங்கேற்காதது, நாக சைதன்யாவுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்தது, ஹிந்தி நடிகர் அமீர்கானுக்கு சமந்தாவின் மாமனார் நாகர்ஜூனா வைத்த விருந்தில் பங்கேற்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகள் இவர்கள் பிரிவதை உறுதி செய்வதாகவே அமைந்தது. ஆனால் இதுபற்றி நேரடியாக இருவரும் எதுவும் கருத்து கூறாமல் இருந்துவந்தனர்.
இந்நிலையில் சமந்தா, நாக சைதன்யா இருவரும் தாங்கள் பிரிவதாக ஒரே மாதிரியான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதில், ‛‛நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நாங்கள் இருவரும், பிரிந்து தனித்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.