ஜேம்ஸ் பாண்ட் 25: உலக உளவாளியின் புதிய படம்!


எத்தனையோ வில்லன்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட உலக மகா உளவாளி ஜேம்ஸ் பாண்டே, சமாளிக்கத் திணறிய ஆகப் பெரும் வில்லனாகியிருக்கிறது கரோனா வைரஸ். 2019 நவம்பரில் வெளியாகியிருக்க வேண்டிய லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை’ (No Time to Die), பெருந்தொற்றுப் பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் பெட்டிக்குள் முடங்கிப்போனது. ஒருவழியாக செப்டம்பர் 30 தொடங்கி அக்டோபர் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் பல்வேறு நாடுகளில் படிப்படியாக வெளியாகிறது.

ஜேம்ஸ் பாண்ட் பட வெளியீட்டை உலகம் முழுக்கவே சகல திரை ரசிகர்களும், கலைஞர்களும் வரவேற்றுக் காத்திருக்கின்றனர். மூடப்பட்ட திரையரங்களுக்கு மீண்டும் ரசிகர்களை இழுத்துவரும் துருப்புச் சீட்டாகவும் பாண்ட் திரைப்படம் கருதப்படுவதே இதற்குக் காரணம். இந்தியாவிலும் தீபாவளி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையை புதிய பாண்ட் படமே தீர்மானிக்க இருக்கிறது. அதற்கேற்ப தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, வங்காளம் என வெவ்வேறு இந்திய மொழிகளிலும் சாகசம் காட்ட வருகிறார் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்!

பட்டையைக் கிளப்பிய பாண்ட் படங்கள்

‘ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான்; ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்’ என்பது புகழ்பெற்ற வாசகம். கேட்க சற்று தட்டையாக தொனித்தாலும், அடிப்படையான இந்த ரசிக எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் நிவர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரமாக இருக்கிறது. 60 ஆண்டுகள், 3 தலைமுறை ரசிகர்கள் என தேசம், கலாச்சாரம், மொழி எல்லைகளை எல்லாம் கடந்தும் பாண்ட் படங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். உலகின் கால்வாசி மக்கள் குறைந்தது ஒரு பாண்ட் படத்தையாவது ரசித்திருக்கிறார்கள் என்கிறது ஓர் உலக ஆய்வு. திரைப்படத் தொடர்களில் அதிகம் வசூலித்ததன் அடிப்படையில் 6-வது இடத்தை ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பிடித்தன.

இயான் ஃபிளெமிங்

உளவாளி பாத்திரம் உருவான விதம்

பிரிட்டிஷ் எழுத்தாளர் இயான் ஃபிளமிங், 1953-ல் உருவாக்கிய கற்பனை உளவாளியின் சாகசக் கதைகளே ஜேம்ஸ் பாண்ட் வரிசைக்கு வித்திட்டன. ‘எம்.ஐ.6’ என்ற ரகசிய உளவு நிறுவனத்தின் ஒற்றனான பாண்ட், லண்டனில் வசித்தபோதும் உலக மக்களைக் காப்பதற்காகக் கண்டங்கள் தாவி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் சாகசங்கள் செய்பவன். 2-ம் உலகப்போர் காலத்தில், தனது கடற்படை அனுபவங்களின் அடிப்படையிலே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை வடிவமைத்தார் இயான் ஃபிளமிங். களத்தில் அப்படியான வாய்ப்புகள் ஏதும் அவருக்கு கிட்டாதபோதும், சாகசங்கள் பல புரியும் தனது வேட்கையை முன்னிறுத்தி அதையொட்டிய கற்பனையைச் சிறகடிக்க விட்டு கதைகளை உருவாக்கினார்.

தான் பார்த்த, கேள்விப்பட்ட, ரசித்த அனைத்து போர்க்கள சாகசக்காரர்களின் விநோதக் கலவையாகத் தனது நாயகனை உருவாக்கினார். தன்னுடைய அபிலாஷைகள், உணவு, உடை ரசனைகள் ஏக்கங்களையும் கற்பனை நாயகனிடம் திணித்தார். அப்படித்தான் கோல்ஃப் விளையாட்டும், சூதாட்டமும் பாண்டுக்கு பொருந்திப்போயின.

உளவாளியாகப் பணியாற்றிய தனது அண்ணன் பீட்டர் மற்றும் அவரது சகாக்களிடமிருந்து, ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தின் தனிப்பட்ட ரசனைகளையும் பாவனைகளையும் உருவாக்கினார் ஃபிளமிங். பெயருக்காக அவர் அதிகம் மெனக்கிடவில்லை; கைவசம் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் ஆசிரியரான அமெரிக்கப் பறவைகள் வல்லுநர் பெயரை அப்படியே சூட்டினார். அதுதான் ஜேம்ஸ் பாண்ட் ஆனது. இயானின் முதல் படைப்பான ’கேசினோ ராயல்’ நாவலை, தேறாது என அதன் பதிப்பாளர் நிராகரித்துவிட்டார். ஃபிளமிங்கின் அண்ணன் பீட்டர் தலையிட்ட பிறகே அதை அச்சேற்றினார்கள்.

ஃபிளமிங் தனது வாழ்நாளில் பாண்ட் சாகசங்களை முன்னிறுத்தி டஜன் நாவல்கள், 2 சிறுகதைத் தொகுதிகள் என எழுதிக் குவித்தார். அவரது மறைவுக்குப் பின்னர், சுமார் அரை டஜன் எழுத்தாளர்களும் பாண்டை நாயகனாக்கி எழுதித் தள்ளினார்கள். நாவலின் பாதிப்பிலான காமிக்ஸ், தொலைக்காட்சித் தொடர், வானொலி ஒலிச்சித்திரங்கள், வீடியோ கேம்ஸ் என பல வடிவங்கள் எடுத்தபோதும் சினிமா உருவாக்கமே அவற்றில் பிரபலமானது.

ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள்...

மை நேம் இஸ் பாண்ட்!’

இப்படி ஸ்டைலாக உச்சரிக்கும் உரிமை ஷான் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரெய்க் என 6 பேருக்கு மட்டுமே இதுவரை வாய்த்திருக்கிறது. இவர்களில் ரோஜர் மூர் அதிகப்படியாக 7 படங்களும், ஷான் கானரி 6 படங்களிலும், டேனியல் க்ரெய்க் 5 படங்களிலும் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளனர். அடுத்தபடியாக பியர்ஸ் பிரான்சன்(4), திமோதி(2), ஜார்ஜ்(1) ஆகியோர் வருகின்றனர். பாண்ட் படங்களை வழக்கமாகத் தயாரிக்கும் இயான் நிறுவனத்துக்கு வெளியே, தனியாக 2 படங்கள் வெளியாகியிருந்தபோதும் அவை கணக்கில் ஏறுவதில்லை.

1962-ல் ஷான் கானரி நடித்த ’டாக்டர் நோ’, ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் கணக்கைத் தொடங்கிவைத்தது. அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டில் மட்டும் ரகம் ரகமான வெவ்வேறு ரகசிய உளவாளிகளின் சாகசங்களை மையமாகக் கொண்ட 22 திரைப்படங்கள் வெளியாகி, ‘டாக்டர் நோ’ படத்துக்கான வரவேற்பைப் பங்குபோட முயன்றன. இந்த ரசிக எதிர்பார்ப்பே அடுத்தடுத்த பாண்ட் படங்களுக்கு வித்திட்டன. அழகான பெண்களுக்கு அடுத்தபடியாக அதிவேகக் கார்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் பாண்டின் நேசிப்புக்கு உரியவை. பாண்டின் துப்பாக்கி, கார், இதர சாதனங்கள் அனைத்தும் புதுமையானவை. ஆபத்து காலத்தில் ஆயுதமாகவும் செயல்படுபவை. பாண்ட் படங்களில் சாகசங்களுக்கு நிகராக இசையும் முக்கியத்துவம் கொண்டது. பாண்ட் திரைப்படங்கள் 2 முறை ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கின்றன.

இதுவரையிலான பாண்ட் படங்களில், ஷான் கானரி நடித்த ’கோல்ட்ஃபிங்கர்’ (1964) திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தலைமுறைகள் தாண்டியும் ரசிக்கப்படுகிறது. அடுத்த இடத்தை டேனியல் க்ரெய்க் நடித்த 'ஸ்கை ஃபால்' வகிக்கிறது. முந்தைய பாண்ட் படங்களில் அதிகம் வசூலித்த பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.

சர்ச்சை நாயகன் பாண்ட்

சர்ச்சைகளின் நாயகன்

2012 லண்டன் ஒலிம்பிக்கில், பிரிட்டனின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக ஜேம்ஸ் பாண்டும் இடம்பெற்றிருந்தார். ஆனால் பழைய நினைப்பிலான அகண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ் பாடுவதாகவும், பெண்களைக் கேவலமாகச் சித்தரிப்பதாகவும், முறை தவறிய பாலியலை ஊக்குவிப்பதாகவும் பாண்ட் படங்கள் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாவதுண்டு.

‘நோ டைம் டு டை’ இயக்குநர் கேரி புகுனகா வார்த்தையில் சொல்வதென்றால், பழைய ஷான் கானரி காலத்து பாண்ட் படங்கள் சாகசத்தைவிட பாலியல் உறவுகளையே அதிகம் சித்தரித்தன. அதற்கேற்ப தனது சகல திரைப்படங்களிலும் பாண்ட் ஒரு பெண் பித்தனாகவே வளைய வருவான். ஒரு கற்பனை நாயகன் என்பதற்கும் அப்பால், சிறார் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சகஜமாகக் காட்டப்படும் குடிப்பழக்கத்துக்கு எதிராகவும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

புதிய படத்தின் கதை

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் அதி தீவிர ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில்தான், ‘நோ டைம் டு டை' படத்தின் கதை அமைந்திருக்கிறது.

தற்காலிகமாக உளவு நிறுவனத்திலிருந்து விலகி ஜமைக்காவில் வழக்கமான உல்லாச ஓய்வை அனுபவித்துவரும் ஜேம்ஸ் பாண்டை வழக்கம் போல கடமை அழைக்கிறது. அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனத்தின் பழைய நண்பன், பாண்டைச் சந்தித்து ஒரு விண்ணப்பம் விடுக்கிறார். அதன்படி காணாமல்போன விஞ்ஞானி ஒருவரைத் தேடிக் கிளம்புகிறார் பாண்ட். அந்த வகையில் வழக்கமான உலக அழிவை விரல் நுனியில் வைத்திருக்கும் எமகாதக வில்லனை, வழக்கத்துக்கு அப்பாற்பட்ட சாகசங்களை நிகழ்த்தி சாதிக்கிறார்.

பாண்ட் பட வரிசையில், அதிகபட்சமாக 6 ஆண்டுகள் இடைவெளியில் வெளியான திரைப்படம் எனும் பெயரையும் ‘நோ டைம் டு டை’ பெறுகிறது. ராமி மாலேக், லீ செய்டக்ஸ், நோமி ஹாரிஸ், லாஷனா லின்ச், ஜெஃப்ரி ரைட், பென் விஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘நோ டைம் டு டை’ படத்தில் டேனியல் க்ரெய்க்...

விடைபெறும் க்ரெய்க்

பாண்ட் பட வரிசையில் 25-வது திரைப்படம், பாண்ட் வரிசையில் நீளமான திரைப்படம் எனும் அடையாளங்களுடன், தொடர்ந்து 5-வது முறையாக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் க்ரெய்க்கின் கடைசி பாண்ட் படம் என்ற அடையாளமும் இப்படத்துக்கு உண்டு. 2006-ல் ‘கேசினோ ராயல்’ திரைப்படத்தில் முதன்முறையாக ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடித்தபோது, பலரும் அவரைக் கிண்டல் செய்தனர். ஆனபோதும் அடுத்தடுத்த படங்களில் தன்னை நிரூபித்ததுடன், 26-வது பாண்ட் படத்துக்கும் டேனியலே வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுமளவுக்கு புகழ் பெற்றிருக்கிறார். எனினும், அவர் நடிக்கும் கடைசி பாண்ட் படம் இதுதான் என்பது முடிவாகிவிட்டது.

லஷனா லின்ச்

அடுத்த பாண்ட் யார்?

அடுத்த பாண்ட் யார் என்ற எதிர்பார்ப்பையும் ‘நோ டைம் டு டை’ திரைப்படத்தின் வர்த்தக உத்திக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் ஒரு வருடம் கழித்தே அடுத்த பாண்ட் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. இங்கிலாந்தின் இன்னொரு ஆணழகனும் பிரபல முன்னாள் மாடலுமான டாம் ஹார்டி சமூக ஊடக ரசிகர்களின் ஏகோபித்த பரிந்துரையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீடிக்கிறார்.

டேனியல் க்ரெய்க் அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில், கறுப்பினப் பெண் ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் இடத்தை நிரப்புவார் எனத் தெரிகிறது. அதற்கேற்ப ஆரூடங்களும் ‘நோ டைம் டு டை’ படத்தில் நடித்திருக்கும் லஷனா லின்ச் எனும் நடிகையைச் சுற்றியே வலம்வருகின்றன!

x