ராமோஜி பிலிம் சிட்டி, ஊடக நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்


ஹைதராபாத்: ‘ஈ நாடு’, ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் தொழிலதிபருமான ராமோஜி ராவ் சனிக்கிழமை (ஜூன் 8) காலை காலமானார். அவருக்கு வயது 87.

சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமோஜி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைய அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார். இதனை ஈ நாடு ஊடக குழுமம் உறுதி செய்துள்ளது.

இவர் தான் ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவர். பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுள்ளதோடு, அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "ராமோஜி ராவின் இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்திய ஊடகங்களில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்டவராக அவர் இருந்தார்.

இதழியல் மற்றும் திரைப்படத் துறைகளில் அவருடைய உயரிய பங்களிப்பு அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகளால் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பல புதுமைகள் மற்றும் சிறப்புத் தரங்களை அவர் உருவாக்கினார்.

இந்தியாவின் வளர்ச்சியில் ராமோஜி ராவ் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவருடன் பழகுவதற்கும் அவரின் ஞானத்தால் பலனடைவதற்கும் பல்வேறு வாய்ப்புகள் நான் பெற்றது எனது அதிர்ஷ்டம். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராமோஜி ராவ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா பாஜக தலைவரும் எம்.பி.யுமான ஜி கிஷன் ரெட்டி ராமோஜி மறைவுக்கு வருத்தம் தெரிவித்து சமூகவலைதளத்தில் இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.