தென்னிந்திய சினிமா ஹீரோக்களும் அவர்களது பட்டப் பெயர்களுக்கும் உலகில் பிரிக்க முடியாத விஷயங்களின் வரிசையில் இடமுண்டு. ஒரு படம் ஹிட் அடித்த அடுத்த நாளே ஹீரேக்களின் பெயர் முன்னாள் ஒரு பட்டப் பெயர் முளைத்துவிடுவது வாடிக்கை. இந்த பெயர் அவருக்கு ‘ஐஸ்’ வைக்க மற்றவர்கள் வைப்பதா, இல்லை அந்த ஹீரோ சொல்லி வைப்பதா, அல்லது ஹீரோவே தனக்குத்தானே வைத்துக்கொள்வதா என்பதும் வாடிக்கையாக இருந்துவரும் கேள்வி.
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமால் இந்த பட்டப் பெயர் கலாச்சாரம் மிக உக்கிரமாக இருக்கும். நம்மூர் தமிழ் சினிமாவில் ‘பவர் ஸ்டார்’ என்றால் நகைச்சுவையாகப் பார்ப்போம். ஆனால் ஏதாவது தெலுங்கு திரைப்படம் ஓடும் திரையரங்கில் ‘பவர் ஸ்டார்’ பெயரைப் பார்த்துச் சிரித்தால், திரும்பி வீடு வந்து சேருவது கஷ்டம். ஏனென்றால் 'பவர் ஸ்டார்' என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்குத் தெலுங்கு பேசும் மாநிலங்களில் மிகப்பெருமளவில் ரசிகர் கூட்டம் உண்டு. இரண்டு தெலுங்கு படக் கதாநாயகர்களின் ரசிகர்களிடையே மோதல், கொலை, என்பது வாடிக்கையான செய்தியாகிவிட்டது டோலிவுட்டில்.
சமீபத்தில், இனி திரைப்படங்களில் தன் பெயருக்கு முன்னால் 'பவர் ஸ்டார்' என்ற பட்டப் பெயரைப் போட வேண்டாம் என பவன் கல்யாண் சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. இந்நிலையில், பவன் கல்யாணின் அக்கா மகன் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளிவரவுள்ள ‘ரிபப்ளிக்’ திரைப்படத்தின் விழாவில் சமீபத்தில் பவண் கல்யாண் பேசிய போது ஏன் தனக்குப் பட்டப் பெயர் வேண்டாமென்று முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார். “நீங்கள் எப்போதெல்லாம் 'பவர் ஸ்டார்' என்று குரல் எழுப்புகிறீர்களோ, அப்போதெல்லாம், 'பவர்' இல்லாமல் எதற்கு 'பவர் ஸ்டார்' என அழைக்கப்பட வேண்டும் என யோசித்துள்ளேன். உங்களால் 'முதல்வர்' என்று அழைக்கப்படுவதற்காக நான் இங்கு இல்லை,” எனக் கோபமாகப் பேசியுள்ளார் பவன் கல்யாண்.
2019-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆந்திராவில் பவன் கல்யாணின் கட்சி போட்டியிட்டு பெரும் தோல்வியைச் சந்தித்தது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோற்றுப் போனார். பெரும் ரசிகர் பட்டாளமிருந்தும், தேர்தலில் படுதோல்வி அடைந்ததால்தான் கோபத்தில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் பவன் கல்யாண் என்று டோலிவுட்டில் பேசிவருகின்றனர்.