பிசியோதெரபி படித்திருந்தாலும், நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால், முழுநேர நடிகையாக மாறியிருக்கிறார் வைஷூ சுந்தர். ரன், நாயகி சீரியல்களைத் தொடர்ந்து, ‘ராஜா - ராணி 2’-வில் ’பார்வதி’ கேரக்டரில் கவனம் ஈர்க்கும் அவருடன் பேசியதிலிருந்து கொஞ்சம்...
பயங்கரமான டிக்-டாக்கர், பரபரப்பான சீரியல் ஆக்டரா மாறுன கதையைச் சொல்லுங்க!
ஸ்கூல் படிக்கும்போதே நிறைய டிக்-டாக் வீடியோஸ் பண்ணிட்டு இருப்பேன். அதன் மூலமா நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது, ஆல்பம் சாங்ஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்தத் தொடர்புகளை பயன்படுத்தி சீரியல்ஸ்க்கான நிறைய ஆடிசன்ஸ்ல கலந்துக்கிட்டேன்.
அப்போலாம் கிடைக்காத வாய்ப்பு, திடீர்னு ‘ரன்’ சீரியலில் நடிக்க கிடைச்சது. போன் கால் மூலமா தான் நடிக்க கூப்பிட்டாங்க. கோவைல இருந்து சென்னை வந்து சம்பந்தப்பட்ட நபரை சந்திக்கும்வரை, நம்ம ஃபிரண்ட்ஸ் ஏதும் ப்ராங் பண்றாங்களோன்ற சந்தேகத்தோட தான் வந்தேன். ஆனா, உண்மையாவே சீரியல்ல நடிக்க போறேன்னு தெரிஞ்சதும் ரொம்பவே சந்தோசமா இருந்தது.
ஸ்கூல், காலேஜ்லயும் ஆக்டிங்ல ஈடுபாட்டோட இருந்திருக்கீங்க... எப்படி நடிப்பு மேல் இவ்ளோ ஆர்வம்?
நான் ஸ்கூல் படிச்சது புதுக்கோட்டை. காலேஜ் படிச்சது கோவை. பத்தாம் வகுப்புவரை நல்லா படிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் ஆக்டிங், டான்ஸிங் மேல ரொம்பவே ஆர்வம் வந்துடுச்சு. அதுக்கு இடைலயும் ப்ளஸ் டூ முடிச்சிட்டு, இருக்கும்போது தான், எதிர்காலம் பத்தி கேள்வி வந்துச்சு.
பொதுவா நான் அம்மா சென்டிமென்ட் உள்ள பொண்ணு. அவங்க சொன்னதால, பிசியோதெரபி படிச்சேன். அதுக்கு இடையில தான், ஆல்பம் சாங்ஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் பண்ணேன். பிசியோதெரபி முடிச்சாலும், மனசு முழுக்க நடிக்கணும் நடிக்கணும்னே இருந்ததால, வீட்ல அனுமதி வாங்கிட்டு, அதை நோக்கி ஓட ஆரம்பிச்சேன்.
டிக்-டாக் வீடியோக்களுக்காக மொபைல் கேமரா முன் பெர்ஃபாம் பண்றதுக்கும், சீரியலுக்காக பெரிய கேமராக்கள் முன் நடிக்கிறதுக்கும் இடையிலான வேறுபாட்டை எப்படிக் கடந்தீங்க?
ரொம்பவே சிரமமா இருந்தது. ஏன்னா, கேமரா முன்னாடி, அதுக்கான லைட்டிங்ஸ ஃபேஸ் பண்ணி நடிக்கிறதுலாம் ஆரம்பத்துல சுத்தமா புரியல. ஆல்பம் சாங்ஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ் ஷூட்லாம் வேற மாதிரி இருக்கும். ஜாலியா பண்றதால ரொம்ப கஷ்டம் தெரியாது. மொபைல் கேமராவில் டிக்-டாக் பண்றதுனா, ஆங்கிள் வைக்கிறது, ஃப்ரேம் செட் பண்றது எல்லாமே நானாவே இருப்பேன். மேக்-அப்ல பெரிய கவனம் இருக்காது. லைட்டிங்ஸ்னு பார்த்தா, எங்கே வெளிச்சமா இருக்கோ அங்க பண்ணிட்டு போயிடலாம்.
ஆனா சீரியல் நடிக்கும்போது, அந்தச் சூழலே முழுக்க முழுக்க வேற. அதுல ஒவ்வொன்றையும் புரிஞ்சிக்கிட்டு, பழகிக்க ரன், நாயகி, இப்போ ராஜா - ராணி 2 வரை என் கூட நடிச்சவங்களும் நடிக்கிறவங்களும், டைரக்டர்ஸும் தான் ஹெல்ப் பண்றாங்க.
அடுத்தடுத்து தங்கச்சி ரோல் பண்ணிட்டு இருக்கீங்க... எப்போ ஹீரோயின் லீட் ரோல்ல எதிர்பார்க்கலாம்?
எப்போ நடக்கும்னு தெரியல. இப்போ பண்ற கேரக்டரையே ரொம்ப மனநிறைவா தான் பண்ணிட்டு இருக்கேன். இப்போ கூட நான் வெளில எங்கேயும் போனா, ராஜா - ராணில என்னோட கேரக்டரா ‘பார்வதி’ங்கிற பெயரைச் சொல்லித் தான் கூப்பிடுறாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனசுல பதிவாகி இருக்கேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஸோ.. லீட் ரோல் தான் பண்ணணும்னு இல்ல. ஆனா, அப்படி நடக்கணும் இருந்தா.. நிச்சயம் நடக்கும்னு நம்புறேன்.