ஹமாரே பாரா படத்துக்கு கர்நாடக அரசு தடை


அன்னு கபூர், ராகுல் பக்கா, மனோஜ் ஜோஷி, அஸ்வினி கல்சேகர் உட்பட பலர் நடித்துள்ள இந்திப்படம், 'ஹமாரே பாரா'. கமல் சந்திரா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

அதை படக்குழு மறுத்திருந்தது. இதற்கிடையே தங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததாக அன்னு கபூர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்தப் படம் நேற்று (ஜூன் 7-ம் தேதி) வெளியானது. ஆனால், இந்தப் படம் வெளியானால் மாநிலத்தில் வகுப்புவாதப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சர்ச்சைக்குரிய படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சிகளை மாநிலத்தில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரையரங்குகள், தனியார் சேனல்கள் உள்ளிட்ட எதிலும் ஒளிபரப்ப அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, இந்தப் படத்துக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் புனேவை சேர்ந்த அசார் தம்போலி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2 காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். படக்குழு ஏற்றுக் கொண்டதால் படத்தை அங்கு திரையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

x