சினிமா சிற்பிகள்: 11 திகில் படங்களின் முன்னோடி: பெஞ்சமின் கிறிஸ்டன்சன்


பெஞ்சமின் கிறிஸ்டன்சன்

உலக சினிமாவில் பல வகைமைகளில் திரைப்படங்கள் இருந்தாலும், ஒரு சில வகைமைகள்தான் பெருவாரியான ரசிகர்களைக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு வகைமைதான் பேய்ப் படங்கள். ஆதிகாலம் தொட்டே மனிதனுக்குத் தன்னை மீறிய ஒரு தீய சக்தி இருக்கிறது என்று நம்புவதில் ஒரு ஈடுபாடு இருந்தது. அதன் சமகால நீட்சிதான் பேய்ப் படங்கள்.

பெரும்பாலான பேய்ப் படங்களின் அடிநாதம் ஒன்றுதான். துர்க்குணம் கொண்ட ஆவிகளின் இடத்தில் மனிதன் பிரவேசிக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் மற்றும் ஆவிகள் மனித உடலில் புகுந்துகொண்டால் என்னவாகும் என்பதைச் சுற்றியே பேய்ப் படங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கதைக்களத்தை உலகில் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் பெஞ்சமின் கிறிஸ்டன்சன். ஆதிகாலம் தொட்டு மனிதனுக்குத் தீயசக்திகள் மேலிருக்கும் பயத்தையும் மூடநம்பிக்கைகளையும் தெளிவாக விளக்கும் விதமாக, இவர் இயக்கிய ‘ஹக்சான்’ (1922) திரைப்படம், காலத்தைத் தாண்டி நிற்கும் திகில் படைப்பு.

‘ஹக்சான்’ (1922)

மிஸ்டீரியஸ் X

டென்மார்க்கில் உள்ள விபோக் நகரில் 1879 செப்டம்பர் 28-ல் பிறந்தார் பெஞ்சமின் கிறிஸ்டன்சன். குடும்பத்தில் 12-வது குழந்தையாகப் பிறந்த கிறிஸ்டன்சன், பள்ளிப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பாக மருத்துவம் பயின்றார். மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போதே, மேடை நாடகங்களின் மேல் ஏற்பட்ட காதலால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு, ராயல் டேனிஷ் தியேட்டரில் 1901-ம் ஆண்டு முதல் நாடகக் கலையைப் பயில ஆரம்பித்தார். 1907 முதல் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த கிறிஸ்டன்சன், பகுதிநேரமாக நாடகங்களில் நடித்துக்கொண்டு மற்ற நேரங்களில் ஒயின் வியாபாரியாகவும் வாழ்க்கையை ஓட்டிவந்தார்.

1911-ல் மேடை நாடகங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு தேர்ந்த நடிகராக கிறிஸ்டன்சன் இருந்தாலும், திரைப்பட இயக்கத்தில் அவருடைய ஆர்வம் வளர்ந்துகொண்டேயிருந்தது. அதன் முடிவாக 1914-ம் ஆண்டு ‘மிஸ்டீரியஸ் எக்ஸ்’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார். போரைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அக்காலகட்டத்தில் வெளிவந்த சினிமாக்களைவிட திரைக்கதை, ஒளிப்பதிவு, தொழில்நுட்ப நேர்த்தி என்று அனைத்து வகையிலும் மேம்பட்டதொரு படைப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து 1916-ல் ‘பிளைண்ட் ஜஸ்டிஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் ஐந்தாண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பெஞ்சமின் கிறிஸ்டன்சன்

சாத்தானாக கிறிஸ்டன்சன்

1922-ல் கிறிஸ்டன்சன் இயக்கிய ‘ஹக்சான்’ திரைப்படம், பண்டைய காலத்திலிருந்து மனிதனுக்குள் இருக்கும் தீய சக்திகளின் மேலான மூடநம்பிக்கையைப் பற்றிய கற்பனை கலந்த ஆவணப்படம் என்றே சொல்லலாம். இதை ஆவணப்படம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சூனியக்காரர்கள் பற்றிய திரைப்படமாக இது இருந்தாலும், திரைப்படம் ஆரம்பித்தவுடன் சூனியக்காரர்களைப் பற்றிக் காட்டாமல், பாகம் பாகமாகத் திரைக்கதை பிரிக்கப்பட்டு, பாகம் ஒன்றில் பண்டைய காலத்திலிருந்து சூனியக்காரர்களின் வழிமுறைகள் என்ன, அவர்களது வாழ்வியல் என்ன, மனிதனுக்குத் தீய சக்திகள் மீது இருக்கும் மூடநம்பிக்கைகள் என்ன என்று ஆதாரபூர்வமான படங்கள் மற்றும் தரவுகளுடன் விவரமாக விளக்கிவிட்டு, பாகம் 2-ல் சூனியக்காரர்களின் வாழ்வியல் சித்தரிப்பு காட்சிகளாகக் காட்டப்படுகிறது.

இதேபோல 7-ம் பாகம் வரை திரைக்கதை நீளும். 6-ம் பாகத்தில், பண்டைய காலத்தில் சூனியக்காரர்களைச் சித்திரவதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் காட்டும் காட்சி பயங்கரமாக இருக்கும். இத்திரைப்படத்தில் சாத்தான் கதாபாத்திரத்தை கிறிஸ்டன்சனே ஏற்று அற்புதமாக நடித்திருப்பார். சாத்தான் எப்படி ஒரு மனிதனை ஆட்கொள்ளும், என்னென்ன மாதிரி தீங்கு விளைவிக்கும் என்றெல்லாம் மனிதன் நம்பிய விஷயங்களை மிகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திய இப்படம், திகில் திரைப்படங்களில் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

சாத்தான் வேடத்தில் பெஞ்சமின் கிறிஸ்டன்சன்

அமெரிக்காவில் தடை

‘மாலியஸ் மாலிஃபிக்ரம்’ என்ற பேய், பிசாசு, சூனியக்காரர்களைப் பற்றி கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான ஹென்ரிச் க்ரேமர் என்பவர் எழுதிய புத்தகத்தை 1919-ல் வாசித்த பின்பு, கிறிஸ்டன்சனுக்கு சூனியக்காரர்கள் பற்றியும் அவர்களை வேட்டையாடி தீயிட்டுக் கொளுத்திய சமூகத்தைப் பற்றியுமான ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 1919 முதல் 1921-ம் ஆண்டு வரை ‘ஹக்சான்’ திரைப்படத்துக்கான ஓவியங்கள், தரவுகள், ஆதாரங்கள் ஆகியவற்றைத் திரட்டுவதில் அவர் செலவிட்டார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆப் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடமிருந்து தயாரிப்புச் செலவுகளைப் பெற்ற கிறிஸ்டன்சன், அஸ்ட்ரா பிலிம் ஸ்டுடியோஸ் என்ற படப்பிடிப்பு தளத்தை விலைக்கு வாங்கி, அங்கே ‘ஹக்சான்’ திரைப்படத்தைப் படம் பிடிக்க ஆரம்பித்தார். முழுக்க முழுக்க இரவு நேரங்களிலும் சூரிய வெளிச்சம் உள்வராத மூடப்பட்ட செட்களிலும் மட்டுமே படப்பிடிப்பை நடத்தினார். படத்தைப் பார்க்கும்போது காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளியமைப்பு ஒருவிதமான திகில் உணர்வைக் கொடுப்பதை உணரலாம். இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் ஸ்வீடன் க்ரோனா பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இந்நாள்வரை அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஸ்வீடன் திரைப்படம் ‘ஹக்சான்’தான்.

வெளியான புதிதில் டென்மார்க், ஸ்வீடனில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானதாக இருப்பதாகவும் சித்திரவதை, நிர்வாணக் காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டது. ஏறத்தாழ 46 ஆண்டுகள் கழித்து, 1968-ல் மெட்ரோ பிக்சர் கார்ப்பரேஷன் இத்திரைப்படத்தின் உரிமைகளை வாங்கி, ‘விட்ச்க்ராஃப்ட் த்ரூவ் தி ஏஜஸ்’ என்று பெயர் மாற்றி அமெரிக்காவில் வெளியிட்டது.

சித்திரவதைக் காட்சிகள் - ‘ஹக்சான்’

ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் கிறிஸ்டன்சன்

ஜெர்மனியில் ‘ஹக்சான்’ திரைப்படம் விமர்சனத்துக்குள்ளானாலும், அத்திரைப்படத்தின் மூலம் கிறிஸ்டன்சன் திறமையை உணர்ந்துகொண்ட ஜெர்மன் அரசாங்கத்தின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஊஃபா’விலிருந்து கிறிஸ்டன்சனுக்கு ஜெர்மனியில் படம் இயக்க அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, ‘ஹிஸ் வைஃப், தி அன்நோன்’(1923), ‘தி வுமன் ஹூ டிட்’ (1925) என்ற 2 திரைப்படங்களை ஜெர்மனியில் இயக்கிய கிறிஸ்டன்சன், அடுத்ததாக 1924-ல் மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஸ்டூடியோவுக்காகப் படம் இயக்கித் தருமாறு வந்த அழைப்பை ஏற்று, உடனே அமெரிக்கா கிளம்பினார்.

ஹாலிவுட்டில் அவர் இயக்கிய ‘தி டெவில்ஸ் சர்க்கஸ்’ (1926) என்ற திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ‘மாக்கரி’ (1927) திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது. தோல்வியால் துவண்டுவிடாமல் அடுத்து ‘தி ஹாக்ஸ் நெஸ்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கி, தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொண்டார் கிறிஸ்டன்சன். ஹாலிவுட் ஹாரர் சினிமா வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிற ‘தி ஹான்டட் ஹவுஸ்’(1928), ‘செவன் ஃபுட்பிரின்ட்ஸ் டு சேட்டன்’(1929), ‘ஹவுஸ் ஆஃப் ஹாரர்’ (1929) என்ற 3 திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கினார் கிறிஸ்டன்சன். இதில் ‘ஹவுஸ் ஆஃப் ஹாரர்’ திரைப்படத்தின் பிரதி அழிந்துபோய்விட்டது.

’ஹவுஸ் ஆஃப் ஹாரர்’ திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘தி மிஸ்டீரியஸ் ஐலேண்ட்’ (1929) என்ற திரைப்படத்தை இயக்கினார். அடுத்த பத்தாண்டு காலம் சினிமா இயக்குவதிலிருந்து விலகி, நாடகங்களை இயக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1939-ல், டேனிஷ் மொழியில் ‘சில்ட்ரன் ஆஃப் டிவோர்ஸ்’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கி, 2-வது முறையாகத் திரைப்பட இயக்கப் பணிகளைத் தொடர்ந்தார். அவர் இறுதியாக இயக்கிய ‘லேடி வித் தி லைட் க்ளவுஸ்’ என்ற ஸ்பை - த்ரில்லர் திரைப்படம் பெரும் தோல்வி அடைந்ததால், அதன் பிறகு திரைப்படங்களை இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார்.

ஒரு இயக்குநராக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், ஆகச் சிறந்த நடிகராகவும் அவர் இயக்கிய பல திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கிறிஸ்டன்சன், 1959 ஏப்ரல் 2-ல் தன்னுடைய 79-ம் வயதில் மரணமடைந்தார். இன்று ‘ஈவில் டெட்’, ‘ஆனபெல்’, ‘காஞ்சுரிங்’ போன்ற பல திரைப்படங்கள் மனித மனங்களில் பயத்தை ஆழமாக விதைப்பதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தவர்களில் முதன்மையானவர்.. பெஞ்சமின் கிறிஸ்டன்சன்.

’ஹக்சான்’ (1922)

x