ரஜினி சரிதம் - 34 லதாவுடனான முதல் சந்திப்பு!


“சினிமா பயணத்தில் மட்டுமல்ல... என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ரஜினி பற்றி பகிர்ந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள் உண்டு. அவை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட ஆசைப்படுகிறேன்” எனும் ஏவி.எம். சரவணனின் உணர்வுப் பகிர்தல்களை, கால வரிசைப்படி பொருத்தமான அத்தியாயங்களில் முன்னும்பின்னுமாக பார்ப்போம். இப்போது ‘போக்கிரி ராஜா’ படத்துக்குப் பின்னர், ரஜினியின் வாழ்க்கையில் 2 பெரிய திருப்பங்களை நிகழ்த்திவிட்டுப்போன ‘தில்லு முல்லு’ பட நாட்களை நோக்கிப் பயணிக்கலாம் வாருங்கள்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைத் தொடர்ந்து ‘தில்லு முல்லு’ படத்தை கையிலெடுத்தார் கேபி. பல படத்திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்தி வந்த கேபி, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கோல்மால்’ படத்தின் உரிமையை ரஜினியை மனதில் வைத்தே வாங்கினார். ‘கோல்மால்’ படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என அவர் யோசித்தபோது, விசு அவரது தேர்வாக அமைந்தார். அப்போது சமூக நகைச்சுவை நாடகங்களில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார் விசு.

நகைச்சுவையைக் கச்சிதமாகக் கையாள்வது நாடகக் காலம் தொட்டு கேபிக்கு கைவந்த கலை. ஆனால், ஐந்தே வருடங்களில் தனக்கென ஒரு பாணியை சிருஷ்டித்துக்கொண்ட ரஜினியின் அடையாளம் அப்போது அதிரடி, ஆக்ரோஷம், கோபக்கார இளைஞன் என மாறிப்போயிருந்தது. என்னதான் ரஜினியிடம் நகைச்சுவை உணர்வு கொட்டிக் கிடந்தாலும் சட்டென்று ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில், அதுவும் ‘இரட்டை வேட’த் தன்மைகொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது அவரது ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டுமல்லவா? அதற்காக ‘தில்லு முல்லு’ படத்தின் தொடக்கத்திலேயே.. ‘உங்களைச் சிரிக்க வைப்பது மட்டும்தான் எங்களுடைய ஒரே குறிக்கோள்’ என்று ரஜினியை வைத்தே ‘முன்னுரை’ சொல்ல வைத்து, ரசிகர்களை அதற்குத் தயார் செய்திருந்தார் கேபி.

தில்லு முல்லு படத்தில்...

திரைக்கு வெளியேயும் ரஜினியிடம் இழையோடிய இயற்கையான நகைச்சுவை உணர்வையும் உடல்மொழியையும் கண்டே, அவருக்கு முழு நீள நகைச்சுவைக் கதைகளும் கதாபாத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தும் என நம்பினார் கேபி. ஆனால், ரஜினிக்கு அதில் சுத்தமாக நம்பிக்கையில்லை. தயங்கி நின்ற ரஜினியைப் பார்த்து, “உன்னால் முடியும் சிவாஜி... உன் திறமையை நீயே சந்தேகிக்காதே. உன்னிடம் நகைச்சுவை உணர்வு இருப்பதை நீ உணர முடியாது. உன்னைச் சுற்றியிருப்பவர்கள்தான் அதை அனுபவிப்பார்கள். அதைத் திரைப்படத்தில் வெளிக்கொணர்வது எளிது. அதற்கான களம்தான் தில்லு முல்லு” என்று நம்பிக்கை கொடுத்தார்.

அப்படியும் ரஜினியின் முகத்தில் ஒரு சுணக்கம்! “ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்... நீ கதாநாயகன் என்றாலும் உன்னுடைய நகைச்சுவைக்கு அனுசரணையாக தேங்காய் சீனிவாசனும் சௌகார் ஜானகியும் பக்க பலமாக நிற்பார்கள்” என்றார் கேபி. இதன்பிறகு ரஜினி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பளிச்சிட்டது. தனது நகைச்சுவை நடிப்புப் பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் ‘தில்லு முல்லு’ ரஜினிக்கு முக்கிய திருப்பமாக மாறியது.

முதல் சந்திப்பு

2-வது திருப்பம், 1980, செப்டம்பர் முதல் வாரத்தில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட சௌகார் ஜானகியின் சென்னை வீட்டில் நிகழ்ந்தது. அங்கேதான், ஒரு கல்லூரி மாணவியாக லதாவை முதன் முதலில் சந்தித்தார் ரஜினி. முதல் சந்திப்பிலேயே லதாவின் மீது ரஜினிக்கு அபிமானம் உருவாகிவிட்டது. அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் இனிய திருப்பமாகவும் அமைந்துபோனது.

அப்போது சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தார் லதா. கல்லூரி மாணவியாக இருந்தாலும் ஒரு சாதுனியாக மாறி ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் லதாவுக்குள் மேலோங்கியிருந்தது. கல்லூரியின் ‘கல்சுரல் செகரட்டரி’யாக இருந்தார். ‘ஸ்கிராம்பிளர்’ என்கிற பெயரில் வெளிவந்த அந்த ஹவுஸ் ஜர்னலுக்கு கல்சுரல் செகரட்டரிதான் ஆசிரியரும்.

“நீ எடிட்டரா இருந்தா மட்டும் போறாது.. நீ எப்படி வித்தியாசமாக மேகசீன் பண்ணியிருக்கேன்னு நாளைக்கு பலபேர் சொல்லணும். உன்னுடைய அக்காள் கணவர் ஒய்.ஜி.மகேந்திரா ரஜினியுடன் நடிக்கிறார். அவர் மூலமாக, நம்ம மேகசீனுக்கு ரஜினியை ஒரு பேட்டி எடுக்க முடியுமா?” என்று கேட்டார், ஆங்கிலத் துறையின் பேராசிரியர். அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டார் லதா.

அவருக்கும் ரஜினியை சந்திக்க வேண்டும் என்கிற ஓர் உந்துதல் இருந்தது. அதற்குக் காரணம், லதாவின் அப்பா. ‘மூன்று முடிச்சு’ படத்தின் பிரிவியூ காட்சிக்கு போய்விட்டு வந்து, ரஜினியின் ஸ்டைலான நடிப்பை வீட்டிலுள்ள அனைவரிடமும் மனம்விட்டுப் பாராட்டித் தள்ளினார். ஒரு புது நடிகரைப் பற்றி அப்பா சொன்னால் அது சரியாக இருக்கும் என்று திரையரங்கில் போய் ‘மூன்று முடிச்சு’ படத்தைப் பார்த்தார் லாதா. வில்லன் கதாபாத்திரத்துக்கு புதிய பரிமாணத்தை தன்னுடைய நடிப்பின் மூலம் ரஜினி கொடுத்திருப்பதைக் கண்டு அவரும் ஆச்சரியப்பட்டார்.

அதன்பிறகு ரஜினி நடித்த எல்லா படங்களையும் பார்க்கும் வாய்ப்பு லதாவுக்கு அமையவில்லை. ஆனால், ‘முள்ளும் மலரும்’ பார்க்கும் வாய்ப்பு குடும்பத்துடன் அமைந்தபோது, ரஜினியின் மீது, தனி மரியாதையை வரித்துக்கொண்டார்.

ரஜினி குறித்த இந்த அபிமானத்துடன், பேராசிரியரின் சவாலை ஏற்று வென்று காட்டும் உத்வேகத்துடன், தன்னுடைய அக்காள் சுதாவை போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன்னார் லதா. அவர், தன்னுடைய கணவர் ஒய்.ஜி.மகேந்திராவிடம் உத்தரவுபோட, அவருக்கு வேறுவழி இருக்கவில்லை. ரஜினியைச் சந்திக்க இரண்டுமுறை அப்பாய்ன்மென்ட் வாங்கிக்கொடுத்தார் மகேந்திரா. ஆனால், லதாவால் போகமுடியாத சூழல். 3-ம் முறை, “இனி நீ ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் ரஜினியை மீட் பண்ணவேண்டியிருக்கும். இது லாஸ்ட் சான்ஸ். சௌகார் ஜானகி அம்மா வீட்டில் ஷூட்டிங். வெயிட் பண்ணி, பிரேக்ல பேட்டி எடுத்துக்கோ... கண்டிப்பா நானும் கூட வந்து ஹெல்ப் பண்றேன். போனதுமே வேலை முடிஞ்சிடணும்ன்னு மட்டும் நினைக்காதே.. ரஜினி பெரிய ஆர்டிஸ்ட். நாமதான் பொறுமை காக்கணும்” என்று கூறி லதாவுக்கு உதவியாக கூடவே சென்றார் ஒய்ஜி.

அந்த சமயத்தில் தங்களது குலதெய்வமான திருப்பதி வெங்கடாஜலபதிக்கு முடி காணிக்கை செலுத்தியிருந்தார் லதா. தலை சீவிக்கொள்கிற அளவுக்கு முடி வளர்ந்திருந்தது. முதல் நாளே, ரஜினியிடம் என்னென்ன கேள்விகள் கேட்பது என்பதையெல்லாம் பட்டியலிட்டு எழுதிக்கொண்ட லதா, பெருமாளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 11 மணிக்கு சௌகார் ஜானகி வீட்டுக்குப் போய் சேர்ந்தார்.

முதல் தளத்தில் ‘தில்லு முல்லு’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. தரை தளத்தில் இருந்த வரவேற்புக் கூடத்தில் காத்திருக்கும்படி சொன்னார்கள். பொறுமையாகக் காத்திருந்தார். உதவிக்கு வந்த ஒய்.ஜி.மகேந்திராவோ, மச்சினிச்சியை உட்கார வைத்துவிட்டு படக்குழுவுடன் போய் அரட்டையில் கலந்துவிட்டார்.

லதாவை படம் பார்க்க அழைத்த ரஜினி!

லதாவை ரஜினி சந்தித்த நாள் ரஜினிக்கு மற்றொரு வகையிலும் மிக முக்கியமான நாளாக அமைந்துபோனது. ரஜினியுடைய இன்றைய இல்லமான போயஸ் கார்டன் வீட்டை வாங்கிய ரஜினி, அன்றைய தினம்தான் கிரஹப்பிரவேசம் செய்திருந்தார். வீட்டில் உறவினர்கள் சூழ்ந்திருக்க அன்றைக்கே படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் ரஜினி.

ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். வீட்டின் முதல் தளத்திலிருந்து படிக்கட்டுகளில் துள்ளியபடி ஸ்டைலாக இறங்கிவந்தார் ரஜினி. அவர் இறங்கி வருவதைப் பார்த்த லதாவின் மனதில், ‘நீண்ட நெடுங்காலமாக இவரை நமக்கு நெருக்கமாக தெரியுமே என்கிற எண்ணம் எழுந்தது. ரஜினியும் லதாவின் கண்களை ஒருசில நொடிகள் உற்றுநோக்கிவிட்டு, “ஹாய்… ஹலோ… மகேந்திரா வீட்டுப் பொண்ணு நீங்கதானா...” என்று கேட்டு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“கேள்விகள் ரெடியா?” என்றவருக்கு, “ம்ம்..” என்று மென்மையாக பதிலளித்தார் லதா. “இன்டர்வியூவுக்கு தொந்தரவில்லாமல் ஒரு இடம் வேணும்... அதோ அந்த அறை பெட்டர்” என்று சொல்லி லதாவை அழைத்துச் சென்று அமரவைத்த ரஜினி, “இப்போ கேளுங்க...” என்றார்.

“பேட்டி தொடங்குறதுக்கு முன்னால் இதை உங்களுக்குக் கொடுக்கணும்” என்று சொல்லி, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த திருப்பதி பிரசாதத்தை ரஜினிக்குக் கொடுத்தார் லதா. அன்புடன் அதை வாங்கிக்கொண்டார் ரஜினி. அதன்பின்னர், அதுவொரு பேட்டி போலவே இல்லாமல், ஒருவர் குறித்து ஒருவர் தெரிந்துகொள்வது போல இருவரும் பேசிக்கொண்டார்கள். லதாவின் புத்திசாலித்தனமும் அழகும் ரஜினியை சட்டென்று ஈர்த்தன. 30 நிமிடம் நீண்ட அந்த உரையாடலின் இறுதியில், “உங்கள் திருமணம் எப்போது?” என்கிற கேள்வியைக் கேட்டார் லதா.

அதற்கு ரஜினி, “குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது நிச்சயமாக என்னுடைய திருமணம் நடைபெறும்” என்று பதில் அளித்தார். “இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்களேன்” என்று லதா கேட்க, “உங்களைப் போன்ற பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று ரஜினி தடலாடியாக பதிலளித்தார். கிட்டத்தட்ட ரஜினி, லதா மீதான தன்னுடைய காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

இந்த பதிலைக் கேட்டு, லதாவின் முகத்தில் வெட்கம் சட்டென்று இழையோடினாலும், “உங்களுக்கு என் வாழ்த்துகள் சார்” என்று சொல்லி விடைபெற்றார். ஆனால் ரஜினிக்கு, அது லதாவுடனான கடைசி சந்திப்பாக இருந்துவிடக் கூடாது என்கிற தவிப்பு அப்போதே உருவானது. அந்த சந்தர்ப்பம் தனக்குக் கடவுளால் அமைத்துத் தரப்பட்ட வரமாக அமைந்ததாக நினைத்த ரஜினி, இன்னொரு நாளில், “இன்று நான் நடிச்ச ‘காளி’ படத்தோட ப்ரிமியர் ஷோ இருக்கு.. அதுக்கு உங்களை இன்வைட் பண்றேன். நீங்க கண்டிப்பா வரணும்” என்று லதாவை அழைத்தார். அவரும் அதை மறுக்கவில்லை.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

x