“மௌனத்தை தகர்த்திடுவோம்”: ஜோதிகாவின் திரைப்படத்தால் நடந்த நன்மை


ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மூலம் ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்து குற்றவாளியும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தங்களது 9 வயது மகளைக் கடந்த 2020-ம் ஆண்டு கணவரின் மாமா வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். சுமார் ஐந்து மாதங்கள் கழித்து சிறுமியைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தாய் வீட்டில், தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் வரும் காட்சிகளைச் சிறுமி பார்த்துள்ளார். அதில் தாயிடம் எதையும் மறைக்கக்கூடாது என்ற வசனம் வரும் காட்சிகளைக் கண்ட பின்பு, தனது அம்மாவிடம் உறவினரான கணேசன் தன்னை வீட்டில் வைத்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தாக தெரிவித்துள்ளார் சிறுமி. உடனே இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்கு நிலுவையிலிருந்தது.

இந்நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி ராஜலட்சுமி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டிருக்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஜோதிகா தனது பதிவில், “மௌனத்தை தகர்த்திடுவோம். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக உரிமைக்குரல் எழுப்பும்போது தனக்கே தெரியாமல் அவள் அத்தனைப் பெண்களுக்குமான உரிமைக்குரலை எழுப்புகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.

x