உதயநிதியைச் சந்தித்த வடிவேலு: ‘நாய் சேகர்’ தலைப்பு விவகாரம் தீருமா?


வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் அறிவிப்புக்காக சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், “முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்தது மகிழ்ச்சிகரமான விஷயம். மீண்டும் நடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொன்னதை மறக்க முடியாது. அவரை சந்தித்ததிலிருந்துதான் எனக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கிறது” என்று வடிவேலு கூறியிருந்தார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நட்பு ரீதியாக வடிவேலு சந்தித்திருக்கிறார். நட்பு ரீதியான சந்திப்பு என்று வெளியே சொல்லப்பட்டாலும் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர்’ தலைப்பை சதீஷ் நடிக்கும் படத்துக்கும் வைத்திருப்பதாலும், சதீஷ் அத்திரைப்படத்தின் தலைப்பை விட்டுத்தரச் சம்மதிக்காததாலும் இவ்விஷயம் உதயநிதியின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தன் நண்பரின் தனிப்பட்ட பிரச்சனைக்கு உதயநிதி உதவியதாகக் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x