நல்ல கதைகளுக்கு ‘ஓடிடி’ ஒரு வரப்பிரசாதம்!


படப்பிடிப்புத் தளத்தில்...

“நல்ல கதைகளுக்கு ஓடிடி தளம் இப்போது நல்லதொரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது” என்கிறார், ‘ஓ பேபி’ படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி.

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளால் சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகையில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது.

உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரீக்ஸ் பள்ளியில், ‘அனி மன்ச்சி சகுமன்மலு’ என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதில், சந்தோஷ் ஷோபன் நாயகனாகவும், ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் நாயகியாவும் நடிக்கின்றனர். குக் வித் கோமாளி புகழ் அஸ்வினும் இந்தப் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டடித்த ‘ஓ பேபி’ புகழ் நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இது, இவருடைய 5-வது படம். “தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் அமைந்த பகுதிகளைச் சுற்றி வரும் கதைக் களம். அதனால், நீலகிரியைத் தேர்ந்தெடுத்தோம். 80 சதவீத படப்பிடிப்பை இங்கேயே முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று சொன்னார் நந்தினி ரெட்டி.

தொடர்ந்து பேசிய அவர், “தெலுங்கு சினிமா ஜனரஞ்சகமானது. பாடல்கள், சண்டை காட்சிகள் நிறைவாக இருக்க வேண்டும். தமிழில் எதார்த்த கதைகள் படமாக்கப்படுகின்றன. அதை இங்குள்ள சினிமா ரசிகர்கள் பார்க்கின்றனர், ரசிக்கின்றனர். சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பெல்லாம் சினிமா நட்சத்திரங்கள் வெள்ளித் திரையை மட்டுமே அலங்கரித்து வந்தனர். மக்களும் தியேட்டர்களை மட்டுமே பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால், ஓடிடி தளம் அறிமுகமான பிறகு எல்லாம் மாறிவிட்டது.

இந்தத் தளத்துக்கு வரும் கதைகள் ஜொலிக்கின்றன. ஓடிடி தளம் நல்ல கதைகளுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. தியேட்டர்களை மட்டுமே நம்பி இருந்தவர்களுக்கு ஓடிடி தளம் மாற்றாக அமைந்துள்ளது. இந்தத் தளத்தில் நல்ல கதைகளைக் காணும் வாய்ப்பு, மக்களின் கை விரல் நுனிக்கே வாய்த்திருக்கிறது. இங்கே கதைகள் தான் ஸ்டார்கள். நல்ல கதையில் யார் நடித்தாலும் இங்கு ஹிட்டாகிறது” என்றார்.

உதகையில் பெரும்பாலான பகுதிகள் வனத் துறையின் கட்டுபாட்டில் உள்ளதால், படப்பிடிப்பு நடத்த கெடுபிடிகள் அதிகரித்து சினிமா தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் சினிமா படப்பிடிப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து விட்டது. சினிமாவை நம்பியிருந்த பல நூறு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர்.

ஏ.டி.லாரன்ஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய உதகையில் படப்பிடிப்புகள் நடத்த இடங்களைத் தேர்வு செய்து கொடுக்கும் புரடெக்‌ஷன் மேனேஜர் ஏ.டி.லாரன்ஸ், “ஊட்டியில் பூங்காக்கள், சாலைகள், அரசு கட்டிடங்களில் படப்பிடிப்பு நடந்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதனால், சுற்றுலாவும் வளர்ந்தது. ஆனால், இப்போது ஊட்டியில் படிப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. கடந்த 2006-ல், நகராட்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.50 ஆயிரம் என கட்டணத்தை உயர்த்தியதோடு அனுமதி பெறுவதும் கடினமாக்கப்பட்டது.

ஊட்டியில் பெரும்பாலான பகுதிகள் வனத் துறையின் கட்டுபாட்டில் உள்ளவை. அனுமதி பெறுவது சிக்கலாக உள்ளது. இதற்கு முன்பு, சென்னை தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று, தலைமைச் செயலகத்தில் அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால், தற்போது தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெற்றாலும், உள்ளூர் மாவட்ட வன அலுவலரிடம் படப்பிடிப்பு நடத்த ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்றதும் மீண்டும் சென்னைக்கு சென்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும். முன்பு 3 நாட்களில் அனுமதி கிடைத்த நிலையில், தற்போது அனுமதி பெற 12 முதல் 15 நாட்களாகின்றன.

இதனால், படப்பிடிப்பு நடத்த காலதாமதமாகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால், படத்தின் பட்ஜெட்டும் உயர்ந்து விடுகிறது. மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழலும் ஏற்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் தான், இப்போது யாரும் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் சினிமா என்றால் ஊட்டி என்றிருந்த நிலை மாறி, ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடப்பதே அதிசயமாகி விடும். இந்த நிலை வராமல் இருக்க அரசு, விதிமுறைகளை தளர்த்த வேண்டும். சினிமா படப்பிடிப்பு நடத்த ‘சிங்கிள் விண்டோ’ முறையில் அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.

x