தெலுங்குத் திரையுலகத்தில் இளம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது 'லைகர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் அவரது பெற்றோர் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூப் நகரில், 'எவிடி சினிமாஸ்' ('எவிடி - ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ்' - AVD Cinemas) என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார்.
இத்திரையரங்கம் திறக்கப்படவுள்ள 24-ம் தேதி கோவாவில் 'லைகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இருப்பதால், தன்னால் திரையரங்க திறப்புவிழாவில் கலந்துகொள்ள முடியாது என்றும் மெகபூப் நகர் மக்கள் அனைவரும் விழாவில் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் காணொலி மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில்,
“ஒரு உலகத்தரம் வாய்ந்த, வசதியான, ஆடம்பரமான திரையரங்க அனுபவத்தைத் தருவதே எங்களது லட்சியம். வரும் செப்டம்பர் 24-ம் தேதி 'லவ் ஸ்டோரி' படத்துடன் ஆரம்பிக்கிறோம். சேகர் கம்முலா காரு இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள். எனது சினிமா வாழ்க்கை, சேகர் கம்முலா காருவிடம் இருந்துதான் ஆரம்பமானது என்பது எனக்குக் கூடுதலான மகிழ்ச்சி. லவ் ஸ்டோரி குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.