அடுத்த இலக்கு மீடியா அகாடமி!


அகிலா

சன் டியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ சீரியலில் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் அகிலா. 17 வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நன்கு அறியப்படும் முகமாக இருக்கும் இவர், வெற்றிகரமான ‘மீடியா தொழில்முனைவோர்’ என்பது பலருக்கும் தெரியாத தகவல். இவை குறித்தெல்லாம் அவரோடு பேசியதிலிருந்து...

எத்தகைய எதிர்பார்ப்புடன் உங்களோட கெரியரை ஸ்டார்ட் பண்ணிங்க?

ஆங்கரிங்ல இருந்துதான் என்னோட மீடியா லைஃப் ஸ்டார்ட் ஆச்சு. அப்போ, எதிர்பார்ப்புன்னு பெருசா எதும் இல்ல. ஜஸ்ட் ட்ரை பண்ணலாமேங்கிற எண்ணத்துல தான் நுழைஞ்சேன். ஆனா, அடுத்தடுத்து சீரியல், மூவி, ஆங்கரிங்னு வாய்ப்புகள் வந்துச்சி; கமிட் ஆனேன். நிறையப் பேர் வாய்ப்புகளை தேடிட்டு இருக்கும்போது எனக்கு அது தானாவே அமைஞ்சிது. இந்தச் சேனல், அந்தச் சேனல்னு பார்க்கல. நேர்மையா என்னை அப்ரோச் பண்ணாங்க, அதை நானும் சின்சியரா பயன்படுத்தினேன்.

அபியும் நானும் அனுபவம் எப்படி இருக்கு?

அபியும் நானும் சீரியலை பொறுத்தவரை, தமிழில் எடுக்கப்பட்டு, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகுது. அப்படியான சீரியலில் ஒரு நாள்கூட தவிர்க்க முடியாத நெகட்டிவ் லீட் கேரக்டர் பண்றேன். இதுல நிறைய குழந்தை நட்சத்திரங்களோடு நடிக்கிறேன். அனைவருமே ஆக்டிங்ல வயசு வித்தியாசம் இல்லாம பின்னி எடுக்குறாங்க.

டிக்-டாக், ரீல்ஸ் மூலமா சீரியல், சினிமாக்களில் நுழையும் புதுமுகங்களுக்கு ஈடாக, உங்களையும் அவற்றில் பார்க்க முடிகிறதே... குறிப்பா, குழந்தை நட்சத்திரங்களுடன் நீங்கள் நடிக்கும் ரீல்ஸ் ரொம்பவே வைரல் ஆகிறதே?

டிக்-டாக்ல எனக்கு ஜஸ்ட் அக்கவுண்ட் மட்டும்தான் இருந்துச்சு; அதுல எந்த வீடியோவும் பண்ணதில்ல. அதன் மூலமா என்னை வெளிக்காட்டிக்க நான் பெருசா ஆர்வம் காட்டியதில்ல. ஆனா, இப்போ இருக்கிற டிஜிட்டல் மயத்துல அதையெல்லாம் தவிர்க்க முடியாத சூழல் உருவாகி இருக்கில்லையா! ஸோ... ஷூட்டிங் ஸ்பாட்ல சேர்ந்து நடிக்கிற குட்டீஸ் கூட பிரேக்ல இன்ட்ரஸ்டிங்கா என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான், அந்த ரீல் வீடியோஸ் பண்ணோம். அது எல்லோருக்கும் பிடிச்சு வைரல் ஆகுதுன்றது ரொம்ப சந்தோஷம்தான்.

சோஷியல் மீடியாவில் இப்போ ட்ரெண்டியா இருப்பது, சின்னத்திரை ஸ்டார்ஸோட யூடியூப் சேனல்ஸ்தான். உங்களுக்கும் அதில் ஆர்வம் இருக்கா?

நிச்சயமா இருக்கு. ஆனா, பார்வையாளர்களோட நேரத்தை வீணடிக்கும் வகையில் எந்த வீடியோவும் பண்ணக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். கத்துக்கிட்டதை வைத்து என்னென்ன இன்னோவேட்டிவா செய்ய முடியுமோ அதையே வீடியோவா பண்ண நினைக்கிறேன். அண்மைலகூட கிருஷ்ண ஜெயந்திக்கு 50 குழந்தைகளை வெச்சு ஒரு டிஜிட்டல் ஈவன்ட் பண்ணேன்; மனசுக்கு நிறைவா இருந்துச்சு.

பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடிச்சிருக்கீங்க. ஆனா, இப்ப பெரிய இடைவெளி இருப்பதாகத் தெரிகிறதே?

2014 வரை வாரம் ஒரு படம் ரிலீஸ் ஆகும்னு சொல்ற அளவுக்கு அடுத்தடுத்து படங்கள் பண்ணேன். எல்லா கேரக்டருமே பேசப்படும் வகையில் இருந்துச்சு. ஆனா, அதன் பிறகு பெரிய பிரேக். இது நானா எடுத்துக்கிட்டது இல்ல. எனக்கான சரியான ரோல் இன்னும் தேடி வரலன்னுதான் நினைக்கிறேன். வந்தா நிச்சயம் நடிப்பேன்.

மீடியா துறை தொடர்பா நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திட்டு இருக்கீங்க போலயே?

ஆமா. ‘ஐடியா செல்லர்’ என்ற நிறுவனத்தை 15 வருஷமா நடத்திட்டு இருக்கோம். அதில் என் கணவரோடு சேர்ந்து, டிவி நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் ஃபிலிம்ஸ், விளம்பரங்கள், ஈவன்ட் மேனேஜ்மென்ட்னு பண்ணிட்டு வர்ரோம். கிட்டத்தட்ட எல்லா சேனல்களுக்குமே பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரிச்சுக் கொடுத்திருக்கோம். அடுத்த கட்டமா என்னோட அனுபவத்தையும், நான் படிச்சிருக்கிற விஷயங்களையும் வெச்சு, மீடியா தொடர்பான அகாடமி ஒன்றை தொடங்கலாம் என்ற எண்ணம் இருக்கு. ஒரு ஆர்டிஸ்ட்டா இருப்பதைவிட, அகாடமிஸ்ட்டாக இருக்கவே விரும்புறேன்.

x