அந்த மாடுகளுக்கு அம்மா போல் நடித்ததை மறக்கவே முடியாது!


‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ படங்களுக்குப் பிறகு சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித் திரைக்கு விஜயம் செய்திருக்கிறார் ரம்யா பாண்டியன். “நல்ல கதை, சிறந்த நிறுவனம் ஆகியவற்றுக்காக காத்திருப்பதில் தவறில்லை” என்று சொல்லும் இந்தத் தமிழ்ப் பெண், காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டி.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் நடித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வாய்ப்பு எப்படி அமைந்தது. இதில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?

பிக்பாஸில் நான் நடிக்கவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் வீட்டில் எப்படியிருப்பேனோ அப்படித்தான் அங்கேயும் இருந்தேன்.

சூர்யா சார் - ஜோதிகா மேடம் இணைந்து தங்களுடைய 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் இதுவரை 14 சிறந்த படங்களைத் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு படமும் இந்த சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்துவதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று செய்தி சொல்லும் நல்ல பொழுதுபோக்குப் படங்களாக இருக்கும். இந்தப் படமும் அப்படியொரு படம் தான்.

இதில் வீராயி என்கிற கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்துள்ளேன். ‘ஜோக்கர்’ படத்திலும் கிராமத்துப் பெண் வேடம்தான் என்றாலும் அதில் ரொம்ப பேசியிருக்க மாட்டேன். அமைதியான, வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பேன். ஆனால், இந்தப் படத்தில் நிறைய பேசி நடித்திருக்கிறேன். அதாவது, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. துளி மேக்கப் கூட போடாமல், கிராமத்துப் பெண்கள் மஞ்சள் குளிப்பதுபோல் நானும் மஞ்சள் குளித்ததுடன் சரி.

இரண்டு காளை மாடுகள் இந்தப் படத்தில் மவுன சாட்சிகள் போல் வருகின்றன. அந்த மாடுகளுடன் அவற்றின் அம்மாவைப் போல் நடித்ததை மறக்க முடியாது. ஏனென்றால், படப்பிடிப்பில் கலந்துகொண்ட 30 நாட்களும் அந்த மாடுகளுக்கும் எனக்கும் பாசம் உருவாகிவிட்டது. படம் பார்க்கும்போது எனக்கும் மாடுகளுக்கும் எவ்வளவு பிணைப்பு இருந்தது என்பதை உணர முடியும்.

படப்பிடிப்புக்கு முன்னர் மாடுகளுடன் எப்படிப் பழகினீர்கள்... இது மிருகவதை தொடர்புள்ள கதையா?

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, சிவகங்கை பக்கத்தில் படப்பிடிப்பு நடக்கவிருந்த மல்லல் என்கிற கிராமத்துக்கு என்னை அழைத்துப் போய்விட்டார்கள். அங்கேயே ஒரு வீட்டில் தங்கிக்கொண்டு, அந்த இரண்டு மாடுகளுக்கும் காலையில் எழுந்து, தீவனத் தண்ணீர் காட்டுவது, பிறகு கடலை மிட்டாய் கொடுப்பது என்று பழக வைத்தார்கள். என்னை விடுங்கள்; இதில் என்னுடைய கணவராக நடித்துள்ள மிதுன் மாணிக்கம், 6 மாதங்கள் அந்த மாடுகளுடன் பழகி, தினசரி குளிப்பாட்டி, உணவு வைத்து, மேய்ச்சலுக்கு அழைத்துப்போய் என்று மாட்டுக் கொட்டிலிலேயே வாழ்ந்திருக்கிறார்.

இது மிருகவதை தொடர்புள்ள கதையா என்று கேட்டீர்கள். நிச்சயமாக இல்லை. கிராமத்துத் தம்பதியான எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால், அந்தக் காளை மாடுகளுக்கு வெள்ளை, கருப்பு என்று பெயர் வைத்து எங்கள் குழந்தைகள் போலவே வளர்க்கிறோம். ஒருநாள் எங்கள் மாடுகள் காணாமல் போகின்றன. அவற்றைத் தேடி அலைகிறோம். அது எப்படி அரசியலாக மாறுகிறது. அறியப்படாத, கண்டுகொள்ளப்படாத ஒரு வறட்சியான கிராமம் நோக்கி ஊடகங்கள் ஏன் ஓடி வந்தன என்பதுதான் கதை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமும் சிரித்துக்கொண்டே இருந்தீர்கள். அதுதான் உங்கள் ரியல் லைஃப் கேரக்டரா? அந்த நிகழ்ச்சி முடிந்து ஒன்றரை வருடம் ஆகப்போகிறது... வேறு பட வாய்ப்புகள் வரவில்லையா?

ஆமாம். ஆனால், சினிமா என்று வரும்போது ஒரு ‘வர்சடைல் ஆக்ட’ராக என்னை நான் வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக நல்ல கதாபாத்திரங்கள் வரும்வரை காத்திருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நானும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வாய்ப்புகள் கொட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன?

வாய்ப்பு வரும் என்று வெட்டியாக காத்திருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன். ‘ஜோக்கர்’ படத்துக்கு வந்த பாராட்டுகள், விமர்சனங்களுக்குப் பிறகு நான் ஒரு நடிகையாக பிஸியாகிவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எப்போதும் எதற்காகவும் நான் தளர்ந்து போனதில்லை. அந்தப் படம் தேசிய விருது பெற்றதும் ஒரு நம்பிக்கை வந்தது. அதன்பிறகு நடித்த ‘ஆண் தேவதை’க்கு சரிவரத் திரையரங்குகள் கிடைக்காமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வெளியானதால், நல்ல படமாக இருந்தும் கவனம் பெறவில்லை. நானும் பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காமல் நடிப்பு பயிற்சி எடுக்கப் போய்விட்டேன். பிறகு திரைக்கதை பயிற்சிக்குப் போனேன். நான் சும்மா இல்லாமல் துறுதுறுவெனத் திரிந்ததைப் பார்த்த விஜய் டிவியினர் என்னை ‘குக் வித் கோமாளி’, ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சிகளுக்கு நடுவராக அழைத்தார்கள். அதுவும் நல்ல அனுபவம்தான்.

‘ரா ரா’ பட வெளியீட்டுக்குப் பிறகு உங்களுடைய போட்டோ ஷூட் அதிரடிகள் மீண்டும் தொடருமா?

(விழுந்து விழுந்து சிரித்துவிட்டுச் சொன்னார்) போட்டோ ஷூட் வரிசையாகச் செய்தற்குக் காரணம், கரோனா லாக்-டவுன் தான். சும்மா இல்லாமல் மாடர்ன் டிரெஸ், புடவை என மாறி மாறி என்னுடைய தோற்றங்களை வெளிப்படுத்த விரும்பினேன். சமூக வலைதளத்தில் அது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைக்கவில்லை. இனி, போட்டோ ஷூட் வருஷத்துக்கு ஒருமுறை தான். ஏனென்றால், நான் எதிர்பார்த்தது போலவே நல்ல கதாபாத்திரங்கள் நிறைய வரத் தொடங்கிவிட்டன. அதில் நல்ல டீம் எதுவென்று தேடிப்பிடிக்கிறேன். தற்போது நடித்துவரும் ‘இடும்பன்காரி’ இரண்டு பெண்களின் கதை. ஒரு வெப் சீரீஸிலும் நடிக்கிறேன். விரைவில் சில படங்களின் அறிவிப்பு வரும்.

x