“பேய்க் கதையில் லாஜிக் பார்க்கக் கூடாது” என்று ஒரு பேய் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்துவிடுகிறார்கள். அதன்படி லாஜிக் உறுத்தல்களை மறந்துவிட்டு ரசித்தால் காதலும், காமெடியுமான ஃபேன்டஸி பொழுதுபோக்கு அனுபவத்தில் ஆழ்த்துகிறது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம்.
டாப்ஸி பன்னு, ராதிகா சரத்குமார் மற்றும் குடும்பத்தினர் ஜாலி கேடிகள். வழிப்பறி முதல் கொள்ளை வரை ஜமாய்க்கும் அவர்களை, இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடைய பரம்பரை சொத்தான மாளிகை ஒன்றில் பணிக்கு அமர்த்துகிறார். அவரது மூதாதையர் ஆவிகளாகச் சிறைபட்டிருக்கும் அந்த மாளிகையில் டாப்ஸி குடும்பம் நுழைந்ததும் களேபரமாகிறது. தனக்கும் அந்த மாளிகைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக உணரும் டாப்ஸிக்கு, ஒரு கட்டத்தில் மாளிகைப் பேய்கள் பார்வைக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. தாத்தா முதல் பேத்தி வரை டஜன் பேய்கள் குடும்பம் குடும்பமாக அலைகின்றன. அந்த மாளிகையில் அவர்கள் ஏன் அப்படி அலைகிறார்கள், அவர்களால் அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாததன் பின்னணி என்ன, டாப்ஸிக்கும் மாளிகைக்கும் இடையிலான பூர்வஜென்ம தொடர்பு என்ன... எனும் கேள்விகளுக்கு ஆவிகளின் காமெடி கலாட்டா மற்றும் உருக்கமான ஃப்ளாஷ்பேக்குடன் பதில் சொல்கிறது ‘அனபெல் சேதுபதி’.
காமெடிப் பட்டாசு
மாளிகையின் சமையலராக இருந்து ஆவிக் குடும்பத்தில் ஒருவராக அலப்பறை கூட்டும் யோகி பாபுவை மையம் கொண்டே, முதல் பாதி கதை சுற்றுகிறது. அந்த மாளிகையுடன் தொடர்புடைய ஆவி அவர் ஒருவர் மட்டுமே. இதரர் அனைத்தும் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்த ஆவிகள். இது தவிர ‘படையப்பா’ நீலாம்பரி போல, தாத்தா பேயான ஜெகபதி பாபு தனது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். மாளிகையிலிருந்து தப்பிக்கும் திட்டத்துடன் மொத்த ஆவிக் கூட்டத்துக்கும் யோகி பாபு தயவில் அவ்வப்போது எழுப்புதல் கூட்டமும் நடக்கிறது. அவர் டாப்ஸிக்காக ஒவ்வொரு முறையும் முன்கதையைச் சொல்ல முயற்சித்து சொதப்பலில் முடிவதெல்லாம் காமெடிப் பட்டாசு. சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, சேத்தன், மதுமிதா என பேய்ப் பட்டாளத்தின் அறிமுகமும் காமெடியும் பிடிபட சற்று நேரம் எடுத்துக்கொள்கிறது.
டாப்ஸியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு அதிகம் வேலையில்லை. அவருக்கான நகைச்சுவைப் பகுதிகளும் எடுபடவில்லை. வில்லன் ஜெகபதி பாபு ஃப்ளாஷ்பேக்கில் மிரட்டினாலும் பேயான பின்பு ஏனோ பேயறைந்தாற் போல பீதியுடனேயே இருக்கிறார். யோகி பாபுவுக்கு அடுத்தபடியாக, செந்தமிழில் புலம்பும் தேவதர்ஷினி ஈர்க்கிறார். இன்னொரு வில்லனாக சுரேஷ் சந்திர மேனன், காமெடி கதாபாத்திரத்தில் டோலிவுட்டின் ராஜேந்திர பிரசாத் உட்பட ஏராளமான நடிகர்கள் திரைகொள்ளாது வலம் வருகிறார்கள்.
சுவாரசியமான ஃப்ளாஷ்பேக்
ஆரம்பத்தில் ஒரு காட்சியில் மட்டும் யோகி பாபுவை முன்வைத்து லேசாக பயமுறுத்துகிறார்கள். மற்றபடி கிலியூட்டாத கலகல காமெடி பேய்களால், ஹாரர் திரைப்படம் ஃபேன்டஸி வடிவெடுக்கிறது. அதற்கேற்ப பிரம்மாண்ட மாளிகை, அதன் உள்ளலங்காரம் எனக் கலையமைப்பில் சிரத்தையான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். திரைப்படத்தின் பெருவாரி நேரம் ஒரு மாளிகைக்குள்ளாக உழன்றாலும் ஃப்ளாஷ்பேக் சுவாரசியமும், நகைச்சுவைக் காட்சிகளும் அலுப்பூட்டாது காக்கின்றன.
இரண்டாம் பாதியில் தாமதமாகவே விஜய் சேதுபதி கதைக்குள் எட்டிப்பார்க்கிறார். ஆனபோதும் ரொமான்ஸ் மினுங்கும் கண்களும் தன் பாணியிலான வசன உச்சரிப்புமாக சுவாரசியம் தருகிறார். இந்த திரைப்படத்துக்கு ஏன் டாப்ஸி தவிர்க்க முடியாதவர் என்பதற்கும் ஃப்ளாஷ்பேக் கதையே நியாயம் சேர்க்கிறது. அவரது காமெடியான ‘ருத்ரா’ கதாபாத்திரத்தைவிட பின்பாதியில் தோன்றும் ‘அனபெல்’ கதாபாத்திரம் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளிவிழா திரைப்படங்களின் இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன், இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகியிருக்கிறார்.
பேய்க் கதைதான் என்றபோதும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குக்காக, ‘அனபெல் சேதுபதி’ திரைப்படத்தைக் குடும்ப சகிதமாய் ரசிக்கலாம்.
* * *
‘நெட்’: அந்தரங்கம் + ஆன்லைன்= விபரீதம்
ஹைதராபாத் அடுக்ககம் ஒன்றில் வசிக்கும் இளம் ஜோடியின் அன்றாட வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும், தனது சந்தாதாரர்களுக்காக நேரலையாக ஒரு இணையதளம் ஒளிபரப்புகிறது. இதற்காக வீட்டின் சகல மூலைகளிலும் ரகசியக் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறு நகரம் ஒன்றில் செல்போன் கடை வைத்திருக்கும் ராகுல், இந்தக் கட்டண சந்தாதாரர்களில் ஒருவராகிறார். கட்டாயத் திருமணத்தால் உடன் வாழத் தலைப்படும் மனைவியுடன் உடலால் ஒட்டியும் மனதால் விலகியும் வாழ்கிறார். தனக்கான விபரீத ஆறுதலாய் மற்றவர்களின் அந்தரங்கத்தை அறிவதில் முட்டிக்கொள்கிறார்.
அப்படியான முயற்சியின் இணையத் தேடலில், ஹைதராபாத் அடுக்கக இளம் ஜோடியின் அன்றாடம் அவருக்குப் பரிச்சயமாகிறது. ஒரு கட்டத்தில் இந்த ஈடுபாடே ‘லைவ் வீடியோ’க்களுக்கு அடிமையாக்கவும் செய்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை குலைய மனைவியின் சந்தேகத்துக்கு ஆளாகிறார். தொழில் நொடிக்கிறது. இணையத்தில் பெருந்தொகையை இழக்கிறார்.
இவற்றின் மத்தியில் அவர் அன்றாடம் ரசிக்கும் இளம் ஜோடியின் வாழ்க்கையிலும் ஒரு மர்மம் அரங்கேறுகிறது. அதற்கும் பார்வையாளர்களே ரகசிய சாட்சியாகிறார்கள். ராகுல் தானறிந்த ரகசியத்தைப் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணிடம் தெரிவிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையே இருதரப்பிலும் எதிர்பாராதவை அரங்கேற, திரைப்படம் வேறு தளத்துக்குப் பயணிக்கிறது.
இரட்டைக் கதைகள்
இன்றைய இணையவாசிகளுக்கு அவசியமான கதையை எளிமையாகச் சொல்ல முயன்ற வகையில், ‘நெட்’ திரைப்படம் கவர்கிறது. ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்ட வீட்டில் வசிக்கும் அப்பாவிப் பெண், அவளை அனுதினமும் ரசிக்கும் ஆயிரம் கண்களில் அவளுக்காகப் பரிதவிக்கும் ஒற்றை நபர் என தண்டவாள ஓட்டமாக 2 கதைகள் செல்கின்றன. இதில், இணையத்துக்கு அடிமையான ராகுலின் கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. பாராமுகக் கணவனை நேசிக்கும் மனைவியின் தவிப்புகள் படத்தின் இயல்பான காட்சிகளாக வருகின்றன.
கதை நாயகன் ராகுல் ராமகிருஷ்ணா, அவரது மனைவியாக வரும் நவ்நீதா பட்நாயக், அந்தரங்கத்தைப் பறிகொடுக்கும் அபலைப் பெண்ணாக தோன்றும் அவைகா கோர் ஆகியோரின் நடிப்புத் திரைப்படத்தின் பலம். எழுதி இயக்கிய பார்கவ் மச்சார்லா, பகீர் தொழில்நுட்ப விவரங்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அவற்றுடன் பிணைந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதில் தடுமாறியிருக்கிறார். திரைப்படத்தின் மத்தியில் பொறுமையை சோதிக்கும் திரைக்கதை, க்ளைமாக்ஸில் திடுதிப்பென முடிகிறது. இணையத்தின் கோரத்தை மக்கள் மனதில் பதியும் வகையில் இன்னும் நிதானமாக இறுதிக்காட்சிகளின் சம்பவங்களைக் கோர்த்திருக்கலாம்.
உள்ளங்கை ஸ்மார்ட்ஃபோன், தடையற்ற இணைய வசதி, வக்கிரங்களுக்கு வடிகால் தரும் இணையதளங்கள், அவற்றில் ஒளிந்திருந்து வங்கி இருப்பைக் கபளீகரம் செய்யும் பேர்வழிகள் என நடப்பு காலத்துக்குத் தேவையான பாடங்களைச் சொல்லிய வகையில், அவசியமான திரைப்படமாகிறது ஜீ 5-ல் வெளியாகி இருக்கும் இந்த ‘நெட்’.