தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படத்துக்குப் பிறகு, சினேகா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வெங்கட்பிரபு நடிக்கவிருக்கிறார். ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’, மலையாளத்தில் ‘பெருச்சாளி’ போன்ற படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது, அருணாச்சலம் வைத்தியநாதன் என்ற புதுப்பெயரில் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்தை பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறும்போது, “இத்திரைப்படம், கணவன் மனைவிக்குள்ளிருக்கும் உளவியல் ரீதியான பிரச்சனையை பேசும் படமாகவிருக்கும். முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கிய சினேகா, நான் கதையை முழுதாக விவரித்தப் பின், சிரித்துக்கொண்டே நானே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். இத்திரைப்படத்தில் சினேகா இதுவரை பார்த்திராத அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்” என்றார்.