ஒரே தலைப்பில் 2 திரைப்படங்கள் : வடிவேலு சந்திக்கும் புதிய சர்ச்சை


நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடிக்கவிருக்கும் திரைப்படம் 'நாய் சேகர்'. லைக்கா நிறுவனத் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் இத்திரைப்படம் தயாராகிவருகிறது. சில நாட்களுக்கு முன்பு "கால் வைக்கிற இடமெல்லாம் எனக்குக் கண்ணிவெடி வைத்தது போலிருந்தது" என்று வடிவேலு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். அவர் கூறியது போலவே, இப்பொழுது அவர் நடிக்கும் திரைப்படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கும் திரைப்படத்துக்கும் நாய் சேகர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வடிவேலுவின் 'நாய் சேகர்' திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த பிறகுதான், சதீஷ் ஏற்கெனவே இதே பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியானது. கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திடம், இத்தலைப்பை விட்டுத்தருமாறு வடிவேலு கேட்டதாகச் செய்தி வெளியானது. ஆனால் இன்று, சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. இதிலிருந்து வடிவேலுவுக்குத் தலைப்பை விட்டுத்தர கல்பாத்தி எஸ் அகோரம் தயாராக இல்லை என்பது தெளிவானது. இதைத் தொடர்ந்து 'வடிவேலுவின் நாய் சேகர்' அல்லது 'ஒரிஜினல் நாய் சேகர்' என்ற பெயரில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தை வெளியிடலாமா என்ற ஆலோசனையில், லைக்கா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

x