ரஜினிகாந்த் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்


‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர்

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. வழக்கமாக, நடிகர்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களுக்குப் பாலாபிஷேகம் செய்வது ரசிகர்கர்களின் வழக்கம். இதை எதிர்த்துப் பால் முகவர்கள் சங்கம் தொடர்ந்து குரெலுழுப்பி வரும் நிலையில், வழக்கமான பாலாபிஷேகத்தைக் கைவிட்டு புதிய முறையை கையிலெடுத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். நடுரோட்டில், பட்டாக்கத்தி கொண்டு ஒரு ஆட்டின் தலையை ஒரே வெட்டில் துண்டித்து, ரத்தம் பீறிடும் ஆட்டின் உடலை எடுத்து ரஜினியின் ‘அண்ணாத்த’ போஸ்டர் மேல் ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். இந்த கோர நிகழ்வைக் கண்டித்து பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

ரஜினி போஸ்டருக்கு ரத்த அபிஷேகம்

அதில் கூறியிருப்பதாவது, ‘இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதைத் தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படம் பேனர் முன்பு, நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டாக்கத்திக் கொண்டு வெட்டி, பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ காட்சி, சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொதுமக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்

மேலும் இது மிருகவதை தடைக்குள்ளும் அடங்கும். கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாகச் செய்யும் நாடு இது. கசாப்புக் கடையில் கூட மறைவாகத்தான் ஆட்டை அறுப்பார்கள். ஆனால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில், இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களைக் கண்டித்துத் தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x