சினிமா சிற்பிகள் - 9: ஜெர்மைன் டுலக் - உலகின் முதல் பெண்ணிய திரைமேதை


ஜெர்மைன் டுலக்

உலக அளவில் திரைப்படத் துறை அன்று முதல் இன்றுவரை ஆண்களின் ஆதிக்கத்தால் நிரம்பியிருக்கிறது. சினிமா உருவான காலகட்டத்திலிருந்தே ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல அற்புதமான திரைப் படைப்புகளை உருவாக்கி, திரை மேதைகளாக மிளிர்கின்றனர்.

சினிமாவின் உருவாக்கம் தொட்டு பெண்கள் திரைத் துறையில் பங்கேற்றாலும், பெண்களுக்கான திரைப்படங்கள் உருவாக சில ஆண்டுக்காலம் தேவைப்பட்டது. பெண்ணியம் பேசும் திரைப்படங்கள் வெகுஜன மத்தியில் வெளியாவதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர்தான் ஜெர்மைன் டுலக். உலகின் முதல் பெண்ணிய திரைப்படத்தை இயக்கிய பெருமையைக் கொண்டவர் ஜெர்மைன் டுலக்.

ஜெர்மைன் டுலக்

பெண்ணிய பத்திரிகையாளர்

பிரான்ஸில் உள்ள அம்மியா என்ற ஊரில், 1882 நவம்பர் 17-ல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜெர்மைன் டுலக். அவருடைய தந்தையின் ராணுவப் பணி நிமித்தமாகப் பல நகரங்களுக்கும் மாற்றலாக வேண்டியிருந்ததால், சிறுவயதிலேயே பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது அவரது குடும்பம். அங்கு தன் பாட்டியின் அரவணைப்பில் விடப்பட்டார் டுலக். அங்கே, அவருக்குக் கிடைக்கப்பெற்ற உயர்தரமான கல்வியின் மூலம் இசை, ஓவியம், நாடகக் கலை ஆகியவற்றிலும் பரிச்சயம் கிட்டியது. பட்டப்படிப்பை முடித்த டுலக், சோஷலிஸக் கொள்கைகளிலும், பெண்ணியக் கொள்கைகளிலும் ஆர்வம் கொண்டு பத்திரிகைத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். பிரான்சின் முதல் பெண்ணிய பத்திரிகையான ‘லா ஃப்ரேன்சஸ்’ இதழில், பல புரட்சிகரக் கருத்துகளை எழுதிவந்தார் டுலக். பிறகு, அதிதீவிரமான பெண்ணியப் பத்திரிகையான ‘லா ஃப்ரோண்’டின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.

இக்காலகட்டத்தில், லூயிஸ் ஆல்பர்ட் டுலக் என்பவரை மணம் முடித்துக்கொண்டார். அதுவரை ஜெர்மைன் ஸ்னைடர் என்று இருந்த அவருடைய பெயர், ஜெர்மைன் டுலக் என்றானது. பத்திரிகைத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் புகைப்படக் கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் நீட்சியாகவே சினிமா துறையில் அவருடைய ஆர்வம் வளர்ந்தது.

‘தி ஸ்மைலிங் மடாம் பூடே’

இத்தாலி சுற்றுப்பயணம்

1914-ம் ஆண்டில், ஜெர்மைன் டுலக்கின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனை நிகழ்ந்தது. அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக இருந்த ஸ்டேஷா நேப்பியர் கவுஸ்காவின் நட்பு கிடைத்ததன் தொடர்ச்சியாக, டுலக்கின் சினிமா ஆர்வம் பலமடங்கு உயர்ந்தது. ஸ்டேஷாவுடன் இத்தாலி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் டுலக். இப்பயணத்தில், சினிமாவின் அம்சங்களைப் பற்றிப் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். அதற்கு முன்பே, நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை விமர்சிக்கும் பணியைப் பத்திரிகையில் செய்துவந்த டுலக்குக்குத் திரைப்படங்களின் நுணுக்கங்களையும் அதன் சூட்சுமங்களையும் அறிந்துகொள்வது பெரும் சிரமமாக இருக்கவில்லை.

இத்தாலியில் சுற்றுப்பயணம் முடிந்து பிரான்ஸ் திரும்பிய டுலக், உடனடியாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவுசெய்தார். பிரெஞ்சு எழுத்தாளரான இரன் ஹிலல்-எர்லஞ்சருடன் இணைந்து, ‘டி.ஹெச். ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். ஹிலல்-எர்லஞ்சரின் எழுத்தில், டுலக்கின் இயக்கத்தில் அந்நிறுவனம் பல திரைப்படங்களைத் தயாரித்தது. எழுத்தாளரும், திரைப்பட விமர்சகருமான லூயி டெலுக்குடன் இணைந்து ஜெர்மைன் டுலக் இயக்கிய ‘ஸ்பானிஷ் ஃபீஸ்டா’ என்ற திரைப்படம், பிரெஞ்சு இம்பிரஷனிஸ சினிமாவின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பல திரைப்பட வல்லுநர்களால் இன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது.

‘தி ஸ்மைலிங் மடாம் பூடே’

உலகின் முதல் பெண்ணிய சினிமா

லாப நோக்கத்துடன் சில வணிகத் திரைப்படங்களை டுலக் தயாரித்தாலும், அப்போது பிரான்ஸில் ஆரம்ப நிலையிலிருந்த சர்ரியலிஸ பாணித் திரைப்படங்களையும் இயக்கி, சினிமாவின் கலை வடிவில் சமரசம் செய்துகொள்ளாமல் இருந்தார். 1922-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘தி ஸ்மைலிங் மடாம் பூடே’ (The Smiling Madame Beudet) என்ற திரைப்படம், பெண்ணியம் பேசும் உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்று போற்றப்படுகிறது. ஈர்ப்பும் நேசமும் இல்லாத திருமண வாழ்க்கையில் மாட்டிக்கொண்ட பெண்ணான பூடே, தன் கற்பனைகளின் மூலம் எவ்வாறு தன்னுடைய உடனடி கவலைகளிலிருந்து விடுபடுகிறாள் என்றும், கற்பனைகள் அவளை நிஜ வாழ்க்கையில் எப்படி மோசமான முடிவுகளை எடுக்க உந்தித் தள்ளுகிறது என்றும் விவரிக்கும் மவுனத் திரைப்படம் இது.

பொருளாதார விடுதலையின்றி கணவனை நம்பி, வீட்டுக்குள் அனுதினமும் அடைபட்டுக் கிடைக்கும் பெண்களின் ஆழ்மனக் கூக்குரலை உலகறிய எதிரொலித்தது இத்திரைப்படம். அதன் பின், 1928-ல் ஜெர்மைன் இயக்கிய ‘தி ஷீஷெல் அண்ட் தி க்ளெர்ஜி மேன்’ என்ற திரைப்படம், ராணுவத் தளபதியின் மனைவி மேல் இச்சை கொள்ளும் பாதிரியாரை மையமாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும்.

எதிர்ப்புக்குப் பணியாதவர்

யாரும் பேசத் துணியாத விஷயங்களைத் தன்னுடைய படங்களின் கருவாக எடுத்துக் கையாண்டதால், பிற்போக்குவாதிகளாலும், மத அடிப்படைவாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் டுலக். அவருடைய கணவரிடமிருந்து பிரிந்த பின்பு, மேரிஆன் கோல்சின்-மால்வி என்ற பெண் இயக்குநருடன் அவர் உறவிலிருந்ததும் பிற்போக்குவாதிகள் டுலக்கை எதிர்க்க இன்னுமொரு காரணமாக இருந்தது.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், பெண்களின் அவல நிலை, சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு, மத அடிப்படைவாதம், பிற்போக்குத்தனங்கள் ஆகியவற்றைத் தன்னுடைய படங்களில் மிக யதார்த்தமாக ரசிக்கும்படி விமர்சித்திருப்பார் டுலக்.

‘தி ஸ்மைலிங் மடாம் பூடே’

பியூர் சினிமா

பிரான்ஸில் உருவான ‘பியூர் சினிமா’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தார் டுலக். பியூர் சினிமா என்பது சினிமா ஒரு தனித்த கலையாக, ஓவியம் மற்றும் இலக்கியம், மேடை நாடகம் என்று எதையும் சாராமல், ஒரு கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், கதாபாத்திரங்களுக்கு முக்கியம் அளிக்காமல், திரையில் ஏற்படும் அசைவுகளையும் நகர்வுகளிலும் மட்டுமே கவனம் செலுத்துவது. கேமராவின் அசைவுகள், கோணங்கள், எடிட்டிங் நுணுக்கங்கள், மான்டாஜ் உத்திகள் மூலமும் ஒரு திரை அனுபவமாக வெளிப்படுவது பியூர் சினிமா. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், திரையில் காட்சிகளைக் காட்ட வேண்டும்; காட்சிகளுக்குக் கதையோ, கதாபாத்திரமோ அவசியமல்ல.

இம்முறையைப் பயன்படுத்தி, ஜெர்மைன் டுலக் இயக்கிய ‘டிஸ்க் 957’ (Disque(s) 957) என்ற குறும்படம் பியூர் சினிமாவுக்கு நல்ல உதாரணம். பழைய கிராமபோன் கருவியில் சுழலும் ஒரு இசைத்தட்டின் காட்சித் தொகுப்பு, பல்வேறு கோணங்களில் வெளிச்சத்தின் வாயிலாகக் காட்டப்படும். இக்குறும்படம் யூடியூபில் கிடைக்கிறது. ‘சினிமா, மற்ற கலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை; சினிமாவே ஒரு தனிப்பெரும் கலைதான்’ என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தார் ஜெர்மைன் டுலக். 1929-ல் பிரான்ஸ் அரசாங்கத்தின் உயரிய விருதான ‘லீஜியன் ஆஃப் ஹானர்’ அவருடைய திரைச் சேவைக்காக வழங்கப்பட்டது. வசனங்கள் கொண்ட திரைப்படங்கள் வரத் தொடங்கியதும், தன் திரைப்படத்தின் கதாபாத்திரங்களைப் பேச வைத்துத்தான் கதையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதில் விருப்பம் இல்லாத டுலக், திரைத் துறையிலிருந்து விலகினார். சின்னச்சின்ன குறும்படங்களை இயக்கும் பணிகளைச் சிலகாலம் மேற்கொண்டார். 1942 ஜூலை 20-ல், பாரிஸ் நகரில் இயற்கை எய்தினார் ஜெர்மைன் டுலக்.

திரைப்படத் துறையில் பெண்களின் ஆரம்பப் புள்ளியாக இருந்த ஆலிஸ் கை ப்ளச்சே போட்டுக்கொடுத்த பாதையை, மிக வலுவானதாக மாற்றியதில் ஜெர்மைன் டுலக்கின் பங்கு அளப்பரியது. 1922-ல் உலகின் முதல் பெண்ணியத் திரைப்படமான ‘தி ஸ்மைலிங் மடாம் பூடே’ வெளிவந்த அந்த காலகட்டத்திலிருந்த பெண்களின் நிலை, இன்னமும் அப்படியே தொடர்வதுதான் பெரும் சோகம்!

x