வந்துட்டார்யா... வந்துட்டார்!


வடிவேலு

அன்றாட அழுத்தங்களுக்கு இடையே நம்மில் பலரின் வடிகாலாக இருப்பவர் வடிவேலுதான். வயது வேறுபாடின்றி அனைவர் மனதிலும் இடம்பிடித்த வடிவேலு எனும் மகா கலைஞன், நடிக்க விழுந்த ‘ரெட் கார்டு’ காரணமாக வீட்டுக்குள் முடங்கிப்போனார். அவர் வீட்டுக்குள் இருந்தாலும், அவர் ஏற்கெனவே நடித்திருந்த நகைச்சுவைக் காட்சிகள்தான் தமிழர்களின் மகிழ்ச்சி வறட்சிக்கு இப்போதும் தீனி போடுகின்றன. இந்த நிலையில், ’மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு’ என்ற செய்தி காதில் தேனாய் வந்து பாய்ந்திருக்கிறது.

‘தலைநகரம்’ இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர்’ படத்தில் நாயக அவதாரம் எடுக்கிறார் வடிவேலு. ஒரு நடிகனின் மீள்வருகையை மொத்த ரசிகர்களும் கொண்டாடுவதே, வடிவேலு ஏற்படுத்தியிருக்கும் அசாத்திய கலைவீச்சுக்கான அத்தாட்சி!

சிங்கமுத்து

பகைமையைக் கடந்த திறமை

மீண்டும் நடிக்கப் புறப்படும் சந்தோஷம் வடிவேலுவுக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதைவிட மிகுதியாகவே ஒட்டுமொத்த மக்களுக்கும் இருக்கிறது. அங்கேதான் மகா கலைஞனாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு எனும் சிரிப்பு அரசன்.

வடிவேலுவின் திரைப்பங்களிப்பு என்பது வெறுமனே அவரை மட்டுமே சார்ந்தது இல்லை. தன்னைச் சுற்றி சின்னச் சின்ன காமெடியன்களை வைத்துக்கொண்டு குழு மனநிலையில் அவர் செய்யும் குறும்புகள் திரையில் சிரிப்பை அள்ளும். அவரால் வாழ்வு பெற்ற கலைஞர்களும் இங்கு ஏராளம். ஆரம்பகாலத்தில் சிங்கமுத்துவுடன் அவர் செய்த காமெடிகள் அத்தனையும் சிரிப்பு மத்தாப்பு. நிலம் தொடர்பான விவகாரம் ஒன்றில் சிங்கமுத்துவுடன் பிரச்சினை ஏற்பட்டு அந்தக் கூட்டணி முறிந்துபோனது.

‘காமதேனு’ மின்னிதழுக்காக சிங்கமுத்துவை ஒருமுறை சந்தித்தபோதும்கூட, வடிவேலுவின் நடிப்புத்திறனை சிலாகித்தே சொன்னார். “வடிவேலு நல்ல மனிதனா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நல்ல நடிகன். இப்போதும்கூட வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். எதிரியாக இருந்தாலும் வடிவேலு திறமைசாலி. திறமைசாலியோடு சேர்ந்து நடிப்பதுதான் புத்திசாலி நடிகனுக்கு அடையாளம்” என்றே குறிப்பிட்டார் சிங்கமுத்து. தன் வாழ்நாள் எதிரியிடமிருந்தும்கூட இப்படி ஒரு அங்கீகாரம் வருமென்றால், அதற்கு வடிவேலு இந்தக் கலைத் துறையில் நிகழ்த்தியிருக்கும் அற்புதங்கள்தான் காரணம்! எதிரியையும்கூட தன்னை ரசிக்கவும், புகழவும் வைப்பதெல்லாம் கலையின் உச்சம். அது இயல்பாகவே வடிவேலுவுக்கு வாய்த்தது.

சக நடிகர்களுக்கு உறுதுணை

இப்போதும் வடிவேலு கூட்டணியில் பத்துக்கும் அதிகமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். அல்வா வாசு, நெல்லை சிவா உள்ளிட்ட சிலரின் மறைவுக்குப் பின், மிச்சம் இருக்கும் நகைச்சுவை நடிகர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் தனக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறார் வடிவேலு. இந்த 2-வது இன்னிங்ஸில் அவர்களை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அவர் வியூகம் வகுத்துவருகிறார்.

“புகழ்பெற்ற ’கிணத்தைக் காணோம்’ காமெடிக் காட்சியில் போலீஸாக இருக்கும் நெல்லை சிவாவிடம் பிராது கொடுக்கும் வடிவேலு, பல படங்களில் அதகளம் செய்யும் அல்வா வாசு ஆகியோர் இருந்திருந்தால், வடிவேலுவின் மீள் வருகை குறித்து ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். நெல்லை சிவா கலையார்வத்தால் திருமணம்கூட செய்துகொள்ளாதவர். ஒருவேளை, வடிவேலு நடித்துக்கொண்டே இருந்திருந்தால் அல்வா வாசு, நெல்லை சிவா இருவருமே புத்துணர்ச்சியுடன் வலம்வந்திருக்கக் கூடும்” எனத் தன் நண்பர்களை நினைவுகூர்கிறார் போண்டா மணி.

போண்டா மணி

எப்போதுமே தன்னோடு நடிக்கும் துணை நகைச்சுவை நடிகர்களின் குடும்பச்சூழலை உள்வாங்கி, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய வடிவேலு தயங்கியதே இல்லை. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட போண்டா மணிக்கு, இலங்கைத் தமிழர் என்பதாலேயே பெண் கிடைக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட வடிவேலு படப்பிடிப்பில் இருந்தபோதே காஸ்ட்யூமர் சலபதி செட்டியார், தன் மகளுக்கு வரன் தேடுவது குறித்துக் கேள்விப்பட்டு போண்டா மணியை அழைத்துப்போய் பெண் கேட்டார். அப்படி நடந்ததுதான் போண்டா மணியின் திருமணம்! இதை இப்போதும் நன்றியோடு நினைவுகூர்கிறார் போண்டா மணி.

வாழ்வு தந்த வடிவேலு

வில்லனாக வேஷம்கட்டி நாயகர்களிடம் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த வெங்கல் ராவையும், தமிழில் இணை காமெடியன் ஆக்கியது வடிவேலுவின் சாதனை. “தலையில் இருந்து கையை எடுத்தால் இந்த மொட்டை சங்கை கடிச்சுருவான்” என அவருக்காக வசனம் பேசி ஒரு காத்திரமான வில்லனாக, டூப் ஆர்ட்டிஸ்டாக இருந்தவரைக் காமெடியனாக்கி அழகுபார்த்தவர் வடிவேலு. வெங்கல் ராவின் அரைகுறைத் தமிழையே நகைச்சுவையாக்கும் வித்தை வடிவேலுவுக்கு வாய்த்திருந்தது.

தமிழும், தெலுங்கும் கலந்து ஒருவிதமாக வெங்கல்ராவ் பேசியபோது, “உனக்குத் தெரிந்ததைப் பேசு. உடல்மொழிக்கு மொழி தேவையில்லை. மொழி மிஸ்ஸாகும்போது, உடல்மொழியில் பேலன்ஸ் பண்ணிக்கலாம்” எனச் சொல்லிக்கொடுத்து, வெங்கல் ராவின் வெற்றிக்கு வழிவகுத்தவர் வடிவேலுதான். “வயதாகிவிட்டது. முன்புபோல் டூப் வேடத்தில் நடிக்க முடியவில்லை. உதை வாங்க தெம்பு இல்லை. ஏதாவது வாய்ப்புக்கொடு சார்... “ என வெங்கல் ராவ் வைத்த கோரிக்கையே, இதைச் சாத்தியப்படுத்தியது.

வெங்கல்ராவ்

இதுகுறித்து ‘காமதேனு’ மின்னிதழிடம் பேசிய வெங்கல் ராவ், “60 வயது கடந்துவிட்டது. மூட்டு வலி இருக்கிறது. தோள்பட்டை வலி இருக்கிறது. டூப் போட்டெல்லாம் இனி நடிக்க முடியாது எனும் சூழலில்தான் வடிவேலு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் கொடுத்தார். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் எப்போதோ ஆந்திராவில் கூலி வேலைக்குப் போயிருப்பேன். காரணம் என்னோடு ஃபைட்டராக, டூப் ஆர்ட்டிஸ்டாக சினிமாவுக்கு வந்தவர்கள் யாருமே இப்போது ஃபீல்டில் இல்லை. வடிவேலு சார் பரபரப்பாக நடித்துவந்த காலம் வரை எனக்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. அதன் பின்னர் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளுக்குப் போய் தான் சமாளித்துவந்தேன். கரோனா காலத்தில் அதற்கும் வேட்டு விழுந்துவிட்டது. வடிவேலு மீண்டும் நடிப்பது பலநூறு கலைஞர்களை வாழவைக்கும்” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சொன்னார்.

இன்ப வெள்ளத்தில் இணை நடிகர்கள்

வடிவேலுவுக்கு இருந்த ரெட் கார்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதுமே, வடிவேலு கூட்டணியினர் மதுரைக்கு நேரடியாகப் போய் அவரைச் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கிங்காங், போண்டா மணி, வெங்கல் ராவ், பாவா லெட்சுமணன், விஜயகணேஷ், சுப்புராஜூ, திருப்பாச்சி பெஞ்சமின், முத்துக்காளை என ஒரு குழுவே சென்றிருக்கிறார்கள்.

இத்தனை பேருக்கும் வாழ்வு கொடுத்ததில் வடிவேலுவின் பங்களிப்பு மிக அதிகம். வடிவேலு நடித்துக்கொண்டிருந்தபோது திரையில் அவருக்கு பக்கவாத்தியமாக வந்த இவர்கள், வடிவேலுவுக்கு விழுந்த ரெட் கார்டால் ஊர்ப்புறக் கலைநிகழ்ச்சிகள் தொடங்கி, கடைத் திறப்புகள்வரை கலந்துகொண்டு வாழ்க்கையை ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போது கரோனா 2-வது அலைக்குப் பின் திரையரங்குகளின் திறப்பு, வடிவேலுவின் ரீ என்ட்ரி ஆகியவை இவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளன.

பாசக்கார அண்ணன்

இணை நடிகர்கள் வடிவேலு வீட்டுக்குப் போனபோது, அவர் மீண்டும் நடிக்கவருவது குறித்து பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லையாம். ஆனால், பல நாள் இறுக்கம் தளர்ந்து அவரது முகம் மிகவும் பிரகாசமாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர் வடிவேலு கூட்டணியினர். வழக்கம்போலவே விருந்து உபசரணைகளிலும் தன் பாசத்தை மொத்தமாகக் கொட்டியிருக்கிறார் வடிவேலு.

“அண்ணே, ஒரு போட்டோ...” எனக் குழுவினர் கிளம்பும்போது கோரஸாகக் கேட்க, “இன்னும் என்ன செல்போனில் போட்டோ எடுத்துக்கிட்டு... பெரிய கேமராவுல கேமராமேன் நம்ம எல்லாரையும் படம் எடுப்பாரு. டைரக்டர் ஷாட் ரெடி... ஆக் ஷன்னு சொல்லுவாரு. கிளம்புங்க” என சிரித்துக்கொண்டே, அவர்களை வழியனுப்பி இருக்கிறார் வடிவேலு.

அப்புறம் என்ன... இனி, அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்! ரசிகர்கள் மனமெங்கும் மகிழ்ச்சி அலை பொங்கட்டும்.. டும்...டும்...

x