ஒலிம்பிக் வீராங்கனைக்கு தங்கச் சங்கிலி பரிசு : நடிகர் சசிகுமார் சர்ப்ரைஸ்


நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களில் கவனம் ஈர்த்தவர், தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. சில புள்ளிகள் வித்தியாசத்தில் பவானி தேவி பதக்க வாய்ப்பை இழந்தார். இந்தியாவிலிருந்து, தனிநபர் பிரிவு போட்டியில் ஒருவர் ஒலிம்பிக் வரை செல்வதே பெரிய ஆச்சரியமாகப் பார்க்கக்கூடிய காலகட்டமிது.

தமிழகம் திரும்பிய பவானி தேவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாராட்டினார். தற்போது நடிகரும் இயக்குநருமான சசிகுமார் பவானி தேவியை நேரில் சந்தித்து அவருடைய திறமையைப் புகழ்ந்து, அவருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை தற்போது சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிவரும் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியைச் சந்தித்து, தங்கச் செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார். நல்லமனம் வாழ்க” என்று இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

x