தீபாவளிக்கு வெளிவரும் ரஜினி, அஜித் திரைப்படங்கள்?


தியேட்டரில் படங்கள் வெளியாவதே அரிதாகி வரும் இக்காலகட்டத்தில், ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படமும், அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படமும் திரையரங்கில் மோதிக்கொள்ளப் போகின்றன. கடந்த 2019-ம் வருடம் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படமும் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகி மோதிக் கொண்டன.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல நாட்களுக்கு முன்பே இத்திரைப்படம் இந்த வருடத் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழு அறிவித்துவிட்டது.

இதேவேளையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில், அஜித், ஹுமா குரைஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படம் ஆயுதபூஜை அன்று (அக்டோபர் 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாகத் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதால், அஜித் படங்களுக்கு வழக்கமாக வரும் வசூல் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆயுத பூஜைக்குப் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர் தரப்பு தயங்கி வருகிறது.

கரோனா 3-வது அலை தமிழகத்தைப் பாதிக்காவிட்டால், தீபாவளி சமயத்தில் திரையரங்கில் 100 சதவீத இருக்கைக்கு அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

திரையரங்கத்தில் படங்கள் ரிலீசாகாமல் நஷ்டத்தில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், ஒரேநாளில் 2 பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால், எங்களுக்கு வரும் வசூல் பாதிக்கப்படும். அதனால் 2 படங்களையும் இரு வேறு நாட்களில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசி வருகின்றனர்.

x