‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் குதிரை முக்கியமான ஓர் திரை அம்சமாகக் கருதப்பட்டது, அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் கர்ணனின் கோபாவேசத்தில் தனக்கும் பங்குண்டு என்பதுபோல், அக்குதிரை தனுஷை சுமந்துகொண்டு கிராமத்துக்குள் நுழையும் காட்சியில், திரையரங்கில் விசில் சத்தம் காதை கிழிக்கும். திரைப்படத்தில் முக்கிய பங்காற்றிய அக்குதிரையின் பெயர் ‘அலெக்ஸ்’. தற்போது அக்குதிரை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று சமூக வலைதளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் அக்குதிரையுடன் தான் நிற்கும் படத்தை பதிவிட்டு, இதயம் நொறுங்கிய எமோஜி ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ‘கர்ணன்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பலரும் என்ன ஆனது என்று கேட்டும் மாரி செல்வராஜிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த எமோஜி அவர் போட்டிருப்பதே அக்குதிரை இறந்து விட்டது என்பதால்தான் என்று பலர் கூறும் நிலையில், புதிய சர்ச்சை ஒன்றும் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததால் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் ஐதராபாத் அப்துல்லாபுர்பேட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் இறந்தது அலெக்ஸ்தான் என்றும் ட்விட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் குதிரை இறந்தது கடந்த மாதம் 11-ம் தேதி.
உண்மை என்னவென்று மாரி செல்வராஜ் விளக்கமாகச் சொன்னால் மட்டுமே வதந்திகள் ஓயும்.