வருத்தப்பட்டுத்தான் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகினேன்!


பாரதா

‘செம்பருத்தி’ சீரியலில், வில்லியாக முறைப்பு காட்டி கவனம் ஈர்த்தவர் பாரதா. இப்போது ‘தாலாட்டு’ சீரியலில் நடித்து வருவதோடு, ஆன்லைனில் மேக்-அப் கலை குறித்த வகுப்புகள் நடத்துவதிலும் பிஸியாக இருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி..?

பிறந்து வளர்ந்து, ஸ்கூல் கம்ப்ளீட் பண்ணதெல்லாம் குண்டூர்ல. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். ஆனா, காஸ்ட்யூம் டிசைனிங் பண்றதைவிட மாடலிங் அண்ட் ஆக்டிங்ல தான் எனக்கு ரொம்பவே ஆர்வம் இருந்தது. அப்போ, ‘தேன் மிட்டாய்’ படத்துல ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அடுத்து, ‘நிரஞ்சனா’ மற்றும் 2 தெலுங்கு படங்கள்ல ஹீரோயினாவும், ‘அட்ரா மச்சான் விசில்’, ‘ஈட்டி’, ‘பைரவா ’ படங்கள்ல நாயகிக்கு தோழியாவும் நடிச்சேன்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு எப்படி வந்தீர்கள்?

நான் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனது, ‘ஜோடி நம்பர் ஒன் - சீசன் 9’ மூலமா தான். அதற்கடுத்து 2 தெலுங்கு படங்களை முடிச்சிருந்த நேரம், ஜீ தமிழோட ‘தேவதையைக் கண்டேன்’ சீரியல்ல வில்லி ரோல் பண்ண சான்ஸ் வந்தது. அது 3 வருஷம் நல்ல முறைல போயிட்டு இருந்துச்சு. அடுத்ததா, ‘செம்பருத்தி’ சீரியல்ல வில்லி லீட் ரோல்ல 2018-ல் கமிட் ஆனேன். நிறைய பாராட்டுகளை வாங்கிக் கொடுத்த ரோல் அது. அடுத்ததா, இப்போ ஏப்ரல்ல இருந்து சன் டிவியில் ‘தாலாட்டு’ சீரியல் போயிட்டு இருக்கு. இதுல ரொம்பவே வெகுளியான பொண்ணு கேரக்டர் பண்ணிட்டு இருக்கேன்.

‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து நீங்களே விலகிட்டதா தகவல் பரவியதே... அதுதான் உண்மையா?

எனக்கு மேரேஜ் ஆகிட்டதால விலகிட்டதா பேசிக்கிட்டாங்க. ஆனா, அது உண்மையில்ல. ஏற்கெனவே சொன்னமாதிரி, அதுல நான் பண்ண மித்ரா கேரக்டர் எனக்கு ரொம்பவே பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் காஸ்ட்யூம் டிசைனிங் படிச்சிருக்கிறதால, அந்த கேரக்டருக்கான காஸ்ட்யூம்ஸை நானே டிசைன் பண்ணிக்கிட்டேன். மேக்-அப் வேலைகளையும் கூட நானே ட்ரை பண்ணி கத்துக்கிட்டேன். இருந்தாலும், முதல் லாக்டவுன் நேரத்துல என்னோட ரோலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுறத உணர்ந்தேன். வருத்தமா இருந்ததால அந்த சீரியலில் இருந்து விலகினேன். அதனாலேயே, அந்த கேரக்டரையும் முடிச்சு வச்சிட்டாங்க.

பாரதா

நடிப்புக்கு நடுவே ஆன்லைன் வகுப்புகளும் எடுக்குறீங்களாமே?

காஸ்ட்யூம் டிசைனிங் படிச்சிருக்கேன். மேக்-அப் தொடர்பா டிப்ளோமா கோர்ஸ் முடிச்சிட்டேன். அதை வைத்து லாக்டவுண் டைம்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சிதான், மேக்-அப் அண்ட் காஸ்ட்யூம் டிசைன் தொடர்பா அகாடமி தொடங்கி, ஆன்லைன் கிளாஸஸ் எடுத்துட்டு இருக்கேன். ஷூட்டிங் நேரங்கள் போக, ஓய்வு நேரத்துல கிளாஸ் எடுக்குறேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.

உங்களுடைய கெரியருக்கு ஃபேமிலில எந்த அளவுக்கு பக்கபலமா இருக்காங்க?

மேரேஜுக்கு முன்னாடியும் சரி, அப்றமும் சரி... வீட்டுல ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க. நடிப்புத் துறையில் எனக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்குன்னு ஃபேமிலில எல்லோருக்கும் தெரியும். அதனால முழுமையா ஒத்துழைக்கிறாங்க.

மாற்று மொழி சீரியல்ஸ், வெப்-சீரீஸ் பண்ற ஐடியா ஏதும் இருக்கா?

தெலுங்கு தொடர்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, அடுத்தடுத்து லாக்டவுண் வந்ததால ஒத்துக்கல. வெப்-சீரீஸ்க்கு நிறைய அப்ரோச் பண்றாங்க. டபுள் மீனிங் டயலாக் இல்லாத, முகம் சுளிக்க வைக்காத கேரக்டர்ஸா எதிர்பார்க்கிறேன். அதேநேரம், சீரியல் மட்டுமில்லாம, இப்பவும் சில படங்கள்ல முக்கிய கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்கிறேன். விரைவில் புதிய அறிவிப்புகள் வரும்!

x