இலங்கை திரும்புவதாக உத்தேசம் இல்லை!


லாஸ்லியா

இலங்கையின் திரிகோணமலையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன். அங்கே, தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் அறிவிப்பாளராக சில மாதங்கள் பணிபுரிந்தவர். பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்ற இவர், ஈழத்தில் தனக்கும் குடும்பத்துக்கும் நேர்ந்த கண்ணீர் கதைகளைப் பகிர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நுழைந்தார். தற்போது, ‘ஃப்ரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களின் கதாநாயகியாக கோலிவுட்டில் வெற்றிகரமாக தனது திரை உலாவைத் தொடங்கியிருக்கும் லாஸ்லியா, காமதேனு மின்னிதழுக்காக அளித்த சிறப்புப் பேட்டி.

‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தில் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோருடன் நடிக்கிறீர்கள். இதை அறிமுகப் படமாக தேர்வு செய்யக் காரணம், கதையா அல்லது பிரபலங்களுடன் நடிக்கிறோம் என்பதா?

சத்தியமா கதைதான் காரணம். இந்தப் படத்துக்கு முதன் முதலில் என்னைத்தான் தேர்வு செய்தார்கள். ஆண் - பெண் நட்பைப் பேசும் கதை. 5 கதாபாத்திரங்களை மையப்படுத்தி நகரும் ஜானர். 5 நண்பர்களில் பெண்ணுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது; உடனே ஏற்றுக்கொண்டேன். பிறகு, ஹர்பஜன் சிங், அர்ஜுன் சார், சதீஷ் என பிரபலங்கள் இணைந்ததும் நான் அதிர்ஷ்டசாலியாக மாறிப்போனேன். இதைவிடச் சிறப்பான ஒரு அறிமுகப்படம் அமையுமா என்று இன்னும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

படத்தில் ஹர்பஜனுக்கு நீங்கள் ஜோடியா?

அப்படியும் சொல்லலாம். நான் கல்லூரி மாணவியாக வருகிறேன். ஹர்பஜன், சதீஷ் உட்பட 4 பேர் என்னுடைய சக மாணவர்கள். எங்கள் 5 பேருக்கும் இடையிலான நட்பும், அதில் வரும் பிரச்சினைகளும்தான் கதை. ஹர்பஜன் இதில் ரஜினி ரசிகராக வருகிறார். என்னுடன் அவருக்குப் பாடல் காட்சியும் உண்டு. அவருக்குப் படத்தில் சண்டைக் காட்சியும் உண்டு. இதில், அர்ஜுன் சார் கதாபாத்திரத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாது என்று இயக்குநர் சொல்லிவிட்டார். ஆனால், ஒன்று சொல்லலாம்... அர்ஜுன் சார் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், ஆண் - பெண் நட்பை மதிப்பவர்களுக்கும் அதைத் தூற்றுகிறவர்களுக்கும் ஒரு நல்ல மெசேஜ் சொல்லுகிறார். அது, அவரது இமேஜுக்கு நன்றாகவே பொருந்தும். அது பேசப்படும்.

இலங்கையிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வந்தீர்களா?

இல்லவே இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தேன். ஆனால், தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர்தான் பிக்பாஸ் சீசன் 3.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிவரும் என்று சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முட்டாள்தனமான வாதம். நிச்சயமாக அப்படிக் கிடையவே கிடையாது. பிக்பாஸில் பங்குபெற்ற என்னைவிட அழகான பெண்கள், திறமையான பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்ததா என்ன? அந்த நிகழ்ச்சிக்குள் நீங்கள் எதையும் எதிர்பார்த்துச் செல்லமுடியாது. ஏனென்றால், அங்கே உங்களுக்கு கெட்ட பெயர் வந்தாலும் நல்ல பெயர் கிடைத்தாலும் அதற்கு முழுக்க முழுக்க நீங்களே தான் பொறுப்பு.

அந்த நிகழ்ச்சிக்கு 1 மணிநேரத்துக்கு என்ன கன்டென்ட் வேண்டுமோ... டிஆர்பிக்கு என்னமாதிரியான கன்டென்ட் தேவையோ அதைநோக்கித்தான் அவர்களுடைய கவனம் செல்கிறது. அதை நோக்கித்தான் போட்டியாளர்களை அவர்கள் தள்ளுகிறார்கள். பங்கேற்பாளர்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், சினிமாவுக்கு திறமை முக்கியம்; பாப்புலாரிட்டி அல்ல. பிக்பாஸில் கலந்துகொள்ளும் முன்பே பல திரைப்படங்களின் ஆடிஷனில் கலந்துகொண்டிருக்கிறேன். அதில் ஒன்றில் தேர்வும் செய்யப்பட்டேன். அந்தப் படம் இப்போதுதான் தொடங்கப்பட இருக்கிறது. ‘ஃப்ரெண்ட்ஷிப்’ , ‘கூகுள் குட்டப்பன்’ படங்களில் என்னுடைய நடிப்பைப் பற்றி விசாரிக்கிறார்கள். இந்த இரு படங்களையும் வைத்தே இப்போது எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. விரைவில், நான் நடிக்கும் அடுத்த 2 படங்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்காக அதிகமும் பாராட்டப்படுகிறீர்கள்... உண்மையில் நீங்கள் பேசுவது இலங்கையின் எந்தப் பகுதி வட்டார வழக்கு?

நான் திரிகோணமலை வட்டார வழக்கில் பேசுகிறேன். இலங்கைத் தமிழர் என்றாலே யாழ்பாணத் தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘டிரிங்கோ ஸ்லாங்’ என்று நாங்கள் சொல்லும் திரிக்கோணமலை வட்டார வழக்கு, யாழ்ப்பாண வட்டார வழக்கைவிட அழகான ஓசை உச்சரிப்பு கொண்டது. என்றாலும் யாழ்பாணத் தமிழிலும் பேசி அசத்துவேன். ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்தில் எனக்கு நானே குரல் கொடுத்திருப்பது மட்டுமல்ல... ‘தனியாக நான்’ எனத் தொடங்கும் பாடலையும் பாடியிருக்கிறேன்.

‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமாருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

சின்ன வயதிலிருந்தே இலங்கையில் கே.எஸ்.ரவிக்குமார் சார் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவருடன் நடிக்க வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. கேமரா முன்னால் எப்படி உடல்மொழியை வெளிப்படுத்துவது, ‘கேமரா ஃபேவர்’, ‘லைட்டிங் ஃபேவர்’, ‘அவுட் ஆஃப் ஃபீல்ட் போய்விடாமல் நடிப்பது’ என்று நிறையச் சொல்லிக்கொடுத்தார். அதைவிட முக்கியம், ஒரு அப்பாவைப்போல் அவர் காட்டிய அக்கறையும் பாசமும் மறக்கமுடியாது. அவ்வளவு பெரிய மனிதர் எனக்கும் ஹீரோவாக நடிக்கும் தர்ஷனுக்கும் அவ்வளவு மரியாதை கொடுத்தார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவுக்காக உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?

நிறைய... ஞாயிறு கூட விடுப்பு எடுக்காமல் ஜிம் செல்கிறேன். சினிமாவுக்கு உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதுதான் முதல் தகுதி என்பதை சில மாதங்களிலேயே புரிந்துகொண்டுவிட்டேன். முன்பெல்லாம் நிறையப் பேசுவேன். இப்போது அப்படிப் பேசுவது சரியல்ல என உணர்ந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தையும் இங்குள்ள தமிழ்நாட்டு மக்களாகிய என் உறவுகளிடம் இன்னும் நெருங்கிச் செல்லவும் நினைகிறேன். அதுவரை இலங்கை திரும்புவதாக உத்தேசம் இல்லை!

x