சினிமாவில் எதற்காக ஒருவரை மக்களுக்குப் பிடிக்கிறது என்பதை யாராலும் அவ்வளவு உறுதியாகக் கண்டுபிடிக்க முடியாது. அப்படிப் பிடித்துப்போய் விட்டால், திரையில் அவர்கள் என்ன செய்தாலும் அதை ரசிக்கவும் வியக்கவும் மக்கள் தயாராக இருப்பார்கள். ரஜினிக்கும் அந்த வரப்பிரசாதம் அமைந்தது. இதை அறிந்துகொண்டதாலோ என்னவோ, ஏவி.மெய்யப்ப செட்டியார், தன்னுடைய மகன்களை அழைத்து “ரஜினியை வைத்து படம் பண்ணுங்கள்” என்றார். ஏவி.எம். சரவணனும் அவருடைய சகோதரர்களும் ‘முரட்டுக்காளை’ படத்தின் மூலம், தங்களுடைய அப்பச்சியின் விருப்பதை நிறைவேற்றினார்கள்.
ரஜினியைப் பற்றியும் முதன் முதலாக ரஜினியை வைத்து தயாரித்த ‘முரட்டுக்காளை’ படம் பற்றிய தமது அனுபவங்களையும், ‘சிவாஜி’ திரைப்படம் வரை ரஜினியை வைத்து தயாரித்த 9 பட அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்தார் ஏவி.எம். சரவணன். அவற்றில், முரட்டுக்காளை அனுபவங்களை இந்த இடத்தில் வாசகர்கள் அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இனி, ஏவி.எம்.சரவணன் பேசுவதைக் கேளுங்கள்.
நட்பின் வயது 40
“சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் எனக்கும் இடையிலான நட்பின் வயதுக்கு 40 வருடங்கள். இந்த 40 வருடங்களில் ரஜினி துளியும் மாறிவிடவில்லை. அவர் எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுபவர். அணுக அவரைப்போல் எளிதான ஒருவரைக் காண்பது அரிது. ஒருமுறை அவர் என்னிட்டம், ‘சார்... நான் உண்மையைப் பேசிப் பழகிவிட்டேன். பணம், புகழ் வந்துவிட்டால் பொய் பேசவேண்டிய நிலைமை வந்துவிடும். பட்டினி கிடந்து கஷ்டப்பட்ட காலத்தில் உண்மையைப் பேசிவிட்டு, வசதியான வாழ்க்கையைக் கடவுள் தந்தபிறகு பொய் பேசுவதற்கு மனம் ஒப்பாது. மனித ஆயுள் அற்பமானது; ஆனால், அற்புதமானது. அதை மனதில் வைத்துக்கொண்டதால் பொய் பேசாமலேயே இருந்து விடலாம் என்பதே என் நிலைப்பாடு’ என்று யதார்த்தமும் தத்துவமும் கலந்து என்னிடம் கூறியிருக்கிறார்.
ரஜினியிடம் எனக்குப் பிடித்த மற்றொரு அற்புதமான விஷயம், அவருடைய தற்சார்பு. பொதுவாக திரையுலகில் வளர்ந்து உச்சம் தொட்ட நடிகர்கள் பலரும் தங்களுடைய கால்ஷீட்டை கவனித்துக் கொள்ள, அதில் அனுபவம்கொண்ட ஒருவரை உதவியாளராக வைத்துக் கொள்வார்கள். அதற்கு ஒரு வசதியான காரணமும் உண்டு. விருப்பம் இல்லாத படங்களைத் தவிர்க்கவும், கொடுத்த கால்ஷீட்டில் குழப்பம் நேரமால் இருக்கவும், அப்படி குழப்பம் நேர்ந்து விட்டால், பழியை கால்ஷீட் மேலாளர் மீது போட்டுத் தப்பித்துக் கொள்ளவும் அவரைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
ஆனால், ரஜினி அப்படியல்ல... தன்னுடைய மற்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ள உதவியாளர்கள் வைத்திருந்தாலும், கால்ஷீட் விஷயத்தைத் தானே நேரடியாகக் கையாள்வார். ஒரு தயாரிப்பாளருக்குத் தேதிகளை முடிவு செய்துவிட்டால், அதைக் கைப்பட தானே எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்து விடுவார். எக்காரணம் கொண்டும் கொடுத்த தேதிகளை மாற்றமாட்டார். வேறு தயாரிப்பு நிறுவனத்தில் அந்த தேதிகளில் ஓரிரு நாட்களை அட்ஜஸ்ட் செய்து கொடுக்கும்படி கேட்டால், சிறிதும் யோசிக்காமல் ‘சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகி அல்லது படத்தின் இயக்குநரிடம் நீங்களே நேரடியாக பேசிக்கொள்ளுங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று சொல்லிவிடுவார். இந்தத் தெளிவு ரஜினியின் நேர்மையிலிருந்து பிறந்த பழக்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லும் ஏவி.எம்.சரவணன், முரட்டுக்காளையில் ஜெய்சங்கர், வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதை ரஜினி ஆச்சரியமாகப் பார்த்த விஷயத்தையும் பகிர்கிறார்.
ரஜினியின் அன்புக் கட்டளை!
“பொதுவாக வில்லனாக நடித்து கதாநாயகனாக உயர்ந்தவர்கள், மீண்டும் வில்லனாக நடிக்கத் தயங்கியதில்லை. ஆனால், ஹீரோவாக நடித்துப் புகழ்பெற்றவர்கள் வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வது அத்தனை எளிதல்ல. அந்த அதிசயம் ‘முரட்டுக்காளை’ படத்தில் சாத்தியமானது. அப்படித்தான் ஜெய்சங்கர் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதை ‘உண்மையாகவா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார் ரஜினி. ஏனென்றால், முன்பின் அறிந்தவர், அறியாதவர் என யாருடைய மனமும் புண்பட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர் ரஜினி. அது அவருடைய கொள்கையும்கூட. ஜெய்சங்கர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்.
150 படங்களில் கதாநாயகனாக நடித்த ஜெய்சங்கரிடம், ‘முரட்டுக்காளை’ படத்தில் வில்லனாக நடிக்க வாருங்கள் என்று நாங்கள் அழைத்தபோது, சட்டென்று தயங்கி மறுத்துவிட்டார். ஆனால், கதையைக் கேட்டபிறகு கதாநாயகனுக்குச் சமமான முக்கியத்துவம் வில்லன் வேடத்துக்கு கொடுக்கப்பட்டிருப்பதை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். இதை அறிந்து, ‘ஜெய் சார் ஒப்புக்கொண்டாரா... ஹி இஸ் ரியலி எ கிரேட் ஆர்ட்டிஸ்ட்!’ என்று புகழ்ந்த ரஜினி, ‘படத்தின் விளம்பரங்களில் ஜெய் சாருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள் சார்' என்று எங்களுக்கு அன்புக் கட்டளையிட்டார்.
கடைகோடிக் கலைஞனிடமும் அன்பு
ரஜினியின் அன்பு என்பது, ஜெய்சங்கரைப் போல சாதித்த கலைஞர்களிடம் மட்டுமல்ல... சினிமாவில் பணிபுரியும் கடைக்கோடி கலைஞனிடமும் உண்டு. அதற்கு உதாரணமாக, ‘முரட்டுக்காளை’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ரயில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்த சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
தென்காசி அருகே மலையும் சமவெளியும் கொண்ட பகுதி. பிரம்மாண்டமான ஆற்று ரயில் பாலம், மலைக் குகையில் ரயில் பாதை என பசுமையான ரயில்வே ட்ராக் செங்கோட்டை நோக்கிச் செல்கிறது. அங்கே, ஓடும் ரயிலில் ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கும் எண்ணத்துடன் வந்தார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். அவர்கள் அந்த ட்ராக்கில் எப்போதெல்லாம் ரயில் வரும் என விசாரித்தபோது, அதிர்ஷ்டவசமாக காலை, மாலை என 2 ரயில்கள் வந்து செல்வது தெரிந்தது. இடைப்பட்ட நேரத்தில் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சண்டையைப் படமாக்கலாம் என்று கூறினார். ஆனால், ‘முரட்டுக்காளை’ படத்தின் பட்ஜெட்டில் சண்டைக்காட்சிக்கு என்று ஒதுக்கிய தொகைக்கு வெளியே செலவு வந்து நின்றது. எஸ்பி.முத்துராமன் தயக்கத்துடன் என்னிடம் கேட்டார். அவரிடம், ‘இதுவரை இப்படியொரு ட்ரெயின் ஃபைட் தமிழ் படங்களில் வந்தில்லை என்று சொல்கிறமாதிரி எடுத்துவிடலாம் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், சண்டைக்காட்சிக்கான செலவை ஏற்கத் தயார்’ என்றோம்.
நான் சொன்னதை மனதில் ஏந்திக்கொண்ட எஸ்பி.எம், சண்டை இயக்குநர் ஜூடோ ரத்தினத்துடன் இரவு பகலாக அமர்ந்து ட்ரெய்ன் ஃபைட் காட்சி எப்படி அமையவேண்டும், என்னென்ன லொக்கேஷன்களைப் பயன்படுத்தப்போகிறோம், கேமராவை எங்கெல்லாம் வைத்துப் படமாக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டார்கள். அன்றைக்கு கிராஃபிக்ஸ் என்பதோ, கிரீன்மேட் என்பதோ, ரோப் ஷாட் என்பதோ எதுவும் கிடையாது. ஓடும் ரயிலிலேயே சண்டைக் காட்சிகளை எடுக்கும்போது உயிருக்கே ஆபத்து என்கிற நிலை. குறிப்பாக, பாலத்தில் ரயில் செல்லும்போது எடுக்கப்பட்ட ஷாட்களில் கர்ணம் தப்பினால் மரணம்தான். ஷாட்களையும் அவற்றுக்கான ஐடியாக்களையும் கேட்ட எனக்கு திருப்திகரமாக இருந்தது. என்றாலும், ‘இதில் ரிஸ்க் அதிகமுள்ள ஷாட்களில் ரஜினிக்கு டூப் போட்டு எடுத்துவிடுங்கள்’ என்று நானே சொன்னேன். சண்டை இயக்குநர் ஜூடோ ரத்தினம், எஸ்பி.எம் என இருவரும் ரஜினியிடம் அதையே சொல்ல, ரஜினி ஒப்புக்கொள்ளவேயில்லை.
‘டூப் போட்டு எடுத்தால், எல்லாம் லாங் ஷாட்களாக வைத்துவிடுவீர்கள். சண்டைக் காட்சியில் சுத்தமாக ஈர்ப்பு இருக்காது. நானே ஃபைட் பண்றேன். அதுதான் ஃபேன்ஸுக்கும் பிடிக்கும்’ என்று பிடிவாதமாக நின்றார். ரஜினியின் பிடிவாதத்தில் எப்போதுமே ஒரு நியாயம் இருக்கும். எஸ்பி.முத்துராமன், ‘ரஜினி... நான் சொல்றதக் கேளுப்பா. ரிஸ்க் ஆகிடும், வேண்டாம் புரிஞ்சுக்க’ என கொஞ்சம் அன்புடன் அதட்டிச் சொல்ல, எப்போதும் எஸ்பி.எம்மின் அன்புக்குக் கட்டுப்படும் ரஜினி, ‘சார் நீங்களே இப்படிச் சொல்லலாமா? எனக்கு ரிஸ்க் ஆகிடும்னு சொல்றீங்களே... எனக்காக டூப் போட்டு நடிக்கிறவரும் உயிருள்ள மனிதர்தானே... அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையா?’ என்று ரஜினி ஒரே போடாய்ப் போட்டார். இயக்குநரும் சண்டை இயக்குநரும் வாயடைத்துப் போனார்கள்.
சக கலைஞர்கள் மீதான அன்பை மனதில் இருத்திய ரஜினியின் பிடிவாதம் வென்றது. முரட்டுக்காளை ரயில் சண்டை காட்சிகளில் ரஜினி தானே ஒரிஜினலாக நடித்தார். ‘முரட்டுக்காளை’ என்கிற தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக, ரஜினியின் துடிப்பும் துள்ளலுமான உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய பெயரை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்ல... அந்த சண்டைக்காட்சி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்பட்டது” என்று நினைவுகளை கிளறிப் பேசினார் ஏவி.எம். சரவணன்.
உண்மைதான்! அதன்பிறகு, ‘முரட்டுக்காளை’ படத்தின் ரயில் சண்டைபோல் இருக்கவேண்டும் என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் உதாரணம் சொல்லக்கூடிய படமாக அமைந்துபோன முரட்டுக்காளை, 1980-ம் வருடம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகி 104 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்