கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
ஆகஸ்ட் 23 முதல், 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுமதி கிடைத்திருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் அமர்க்களமாகத் தொழிலைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால், முதல் நாள் அன்று பாதி திரையரங்குகள்கூட திறக்கப்படவில்லை. ரசிகர்களும் அப்படியொன்றும் ஆர்வமாகத் திரையரங்குகளில் குவிந்ததாகத் தெரியவில்லை.
உள்ளங்கைக்குள் அடங்கும் செல்போன்களில், ஓடிடி தளங்கள் மூலம் நினைத்த படத்தைப் பார்க்கிற வசதி வந்திருக்கும் நவீன யுகத்தில், திரையரங்குக்குப் போய் படம் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் குறைந்திருப்பதாகவும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழல் திரையரங்க உரிமையாளர்களிடம் புதுவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனிமேல் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வர மாட்டார்களா என்று கவலையில் இருக்கிறார்கள் அவர்கள். இரு தரப்பின் எதிர்பார்ப்புகள் என்ன, நிலவரம் என்ன? பார்க்கலாம்!
முதலில் சினிமா ரசிகர்களிடம் பேசினோம்.
ஐடி துறையில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த கிஷோர் குமார் கூறுகையில், “நான் கண்டிப்பாகத் தியேட்டருக்குப் போவேன். ஏன்னா நம்ம மாதிரி ஊர்ல இருக்கிற ஒரே பொழுதுபோக்கு அதுதான். நிறைய நாடுகளுக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம் சினிமாவைத் தாண்டி பார்ட்டி, டிராமா, மேஜிக் ஷோ, ஸ்டேண்ட் அப் காமெடி என்று ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. நம்மூரில் தியேட்டர் மட்டும்தான் பிரதான பொழுதுபோக்கு. இந்த ஊரடங்கிற்குப் பிறகு தியேட்டர்களில் குறைந்த விலை டிக்கெட்களை எல்லாம் ஒழித்துக்கட்டி விட்டார்கள். மறைமுகக் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. 120 ரூபாய்க்குக் குறைந்து டிக்கெட்டே இல்லை எனும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
தியேட்டர்கள் ரொம்ப நாளாக மூடியிருந்ததால் ஏற்பட்ட, நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன். பேச்சுலர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், குடும்பஸ்தர்களால் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நிறைய நிறுவனங்களில் ஊதிய வெட்டு வேறு நடந்திருக்கிறது. இதில் தியேட்டருக்குச் செலவு செய்ய காசு யாரிடம் இருக்கும்?” என்றார்.
“நானும் என் நண்பர்களும் சேர்ந்து நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட ஓடிடி தளங்களுக்குக் கூட்டாகப் பணம் செலுத்தியிருக்கிறோம். மாணவர்கள் என்றால் சலுகை விலையில் சந்தா தருகிறார்கள். அதில் ஏதாவது படம் மிஸ்ஸானாலும், அடுத்த நாளே டெலிகிராம் ஆப்பில் வந்திடும். என்ன… அதில் பெரிதாக சவுண்ட் எஃபெக்ட் கிடைக்காது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பார்த்திடுவோம். சமீபத்துல வெளியான புதுப் படங்களை அப்படித்தான் பார்த்தேன். அதனால தியேட்டரை எல்லாம் நான் பெருசா மிஸ் பண்ணல...” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சிவா.
இன்னொரு மாணவரான சபரி, “காலேஜ் பசங்க இப்ப அப்படித்தான் சொல்லுவாங்க. காலேஜ் திறந்ததும் பாருங்க, கிளாஸைக் கட் அடிக்கணும்ங்கிறதுக்காகவே தியேட்டருக்குக் கும்பல் கும்பலாப் போவாங்க. கேங்கா போகும்போது, படம் மொக்கையா இருந்தாலும் ஜாலியாத்தான் இருக்கும். லவ் பண்ற பசங்கள்லாம் ஜோடியா தியேட்டருக்குப் போகாம இருக்கவே முடியாது” என்று சிரிக்கிறார்.
“செல்போன்ல படம் பார்க்கிறதே பழக்க மாகிடுச்சு. இனிமேல் சின்னப் படங்கள் எதையும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கிற மனநிலையில நான் இல்ல. ரொம்ப முக்கியமான படங்கள், பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்களின் படங்களைத்தான் பார்க்கணும்னு இருக்கிறேன். ஓடிடி தளங்கள்ல வெளிவந்தாலும்கூட, பெரிய படங்களைத் தியேட்டரில் தான் பார்ப்பேன். ஏன்னா ஒரு செலிபிரேஷன் மூட், மாஸ், என்டர்டெய்ன்மென்ட் வேண்டும் என்றால் அது தியேட்டரில்தான் கிடைக்கும்” என்கிறார் நெல்லையைச் சேர்ந்த ஸ்ரீராம்.
குடும்பஸ்தரான மணிகண்டனோ, “நாங்க எல்லாம் 80’ஸ் கிட்ஸ் சார். திருச்சியில ‘அவதார்’ படம் பார்த்திட்டு 3டி எபெக்ட் சரியில்லைன்னு, மதுரை குரு தியேட்டர்ல மறுபடியும் படம் பார்த்தவன். என்னதான் இப்ப ஓடிடி-யில படம் பார்த்தாலும், தியேட்டர் அனுபவம் அதுல கிடைக்கிறதில்ல. இடையில போன் வந்தா பாஸ் பண்றோம். பாத்ரூம் போக பாஸ் பண்றோம். காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட பாஸ் பண்றோம். அதுக்குள்ள படம் பார்க்கிற ஆர்வமே போயிடும். ஒரு படம் ஓடிடி-யிலும் தியேட்டரிலும் ஒரே நேரத்தில் வந்தா, ஓடிடி-க் குக் காசு கட்டியிருந்தாலும் பரவாயில்லை… நான் தியேட்டருக்குப் போய்தான் பார்ப்பேன். ஆனா, அதிலும் நிறைய பிரச்சினை இருக்கு. பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் கொள்ளை தாங்க முடியல. நான் மட்டும் போனால் பரவாயில்லை. மனைவி, பிள்ளைகளோட தியேட்டருக்குப் போனா 10 நாள் குடும்பத்தை ஓட்டுறதுக்கான காசு ஒரே படத்துல அழிஞ்சிடும். தியேட்டர்காரங்க அதையும் கொஞ்சம் மனசுல வெச்சுக்கணும்” என்றார்.
ரசிகர்கள் எல்லாம் இப்படிச் சொல்கையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவரான ரமேஷ்பாபு என்ன சொல்கிறார்?
“கரோனா முதல் அலையின்போது லாக்டவுன் போட்டார்கள். அப்போதும் இன்று நீங்கள் கேட்பதைப் போல ‘இனி தியேட்டர்கள் அவ்வளவுதானா?’ என்று எல்லோரும் கேட்டார்கள். அவர்கள் பயந்தது மாதிரியே தியேட்டர்கள் திறந்ததும் கூட்டமும் இல்லை. ஆனால், ‘மாஸ்டர்’ படம் வந்தது. மக்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். இத்தனைக்கும் அப்போது மக்களிடையே கரோனா அச்சம் அதிகமாக இருந்தது. இப்போது தடுப்பூசி போட்டு மக்களுக்குத் தன்னம்பிக்கை வந்துவிட்டது. புதிய படங்கள் எதுவும் வெளியாகாததால் தான் தியேட்டர்கள் வெறிச்சோடியிருக்கிறதே தவிர, பெரிய படங்கள் வரத்தொடங்கிவிட்டால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் நிச்சயம் அதிகரிக்கும்” என்றார் ரமேஷ்பாபு.
சினிமா விநியோகஸ்தரும், கோபுரம் ஃபிலிம்ஸ் திரையரங்க உரிமையாளருமான அன்புச்செழியனிடம் இதுகுறித்து கேட்ட
போது, “அடுத்த மாசம் பாருங்க சார். தியேட்டர் களைகட்டும்” என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
கரோனா காலம் எத்தனையோ இயல்பு நிலைகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதையெல்லாம் கடந்து தியேட்டர்கள் மீண்டும் ஜொலிக்கும் என்ற நம்பிக்கை நல்லதுதான். அதேநேரத்தில் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களின் விலையையும், பார்க்கிங் கட்டணத்தையும் குறைக்காவிட்டால் சாமானியர்கள் தியேட்டர்களுக்குத் திரும்பும் வாய்ப்பு குறைவு என்பதையும் திரையரங்க உரிமையாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்!