தியேட்டருக்குத் தேடி வந்த வாய்ப்பு!- அம்மு அபிராமி அசத்தல் பேட்டி


ரசிகா
readers@kamadenu.in

‘ராட்சசன்’ படத்தில் ‘அம்மு’ என்கிற பள்ளி மாணவியாக வந்து அழுத்தமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்தவர் அபிராமி. அந்தப் படத்தின் வெற்றியால் ‘அம்மு’ அபிராமியாக கோலிவுட் இவரை வரித்துக்கொள்ள.. தற்போது வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், ஜித்து ஜோசப், மணிரத்னத்தின் நவரசாவில் ‘இன்மை’, இயக்குநர் ஹரி என வெற்றி இயக்குநர்களின் படங்களில் முக்கியத் தேர்வாக வலம் வந்து கொண்டிருக்கும்  ‘அம்மு’ அபிராமி, காமதேனு மின்னிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லலாமா?

பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அப்பா ஆர்.கே.சுந்தர் ஒரு சவுண்ட் இன்ஜினியர், இசையமைப்பாளர். ‘காலா’, ‘கபாலி’ படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது தனியார் சேனல் ஒன்றில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்தேன். அப்போது என்னை டிவி திரையில் பார்த்தபோது எனக்கே வியப்பாக இருக்கும். பிறகு பள்ளி நாடகங்கள், மைம் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்றேன். அப்போது துளிர்த்த ஆர்வம் மெல்ல மெல்ல வளர்ந்து, என்னை இந்த இடத்துக்குக்  கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

‘ராட்சசன்’ படத்துக்கு எப்படித் தேர்வானீர்கள்?

10-ம் வகுப்பில் 90 பர்சன்டேஜ் மதிப்பெண்கள் எடுத்துத் தேறியிருந்தேன். அதைக் கொண்டாடும் விதமாக எனது வகுப்புத் தோழிகளுடன் சினிமாவுக்குச் செல்ல அம்மா - அப்பாவிடம் அனுமதி கேட்டேன். அப்பா கொடுத்துவிட்டார். அம்மா,  “நான் அழைத்துப்போகிறேன்” என்றார். தோழிகளுடன் போகமுடியவில்லையே என்று முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன். தியேட்டரில் என்னைப் பார்த்த இயக்குநர் ராம்குமார் சார், தனது உதவியாளரை என்னிடம் அனுப்பி, “உங்கள் பெற்றோரிடம் பேச வேண்டும். ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கிறீர்களா?” என்று கேட்டார். நாம் எதை நேசிக்கிறோமோ அதுவே நம்மைத் தேடி வரும் என்பார்கள் இல்லையா... அப்படித்தான் ‘ராட்சசன்’ படத்துக்குத் தேர்வானேன்.

விஜயின் ‘பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்த அனுபவம் எப்படி?

நான் ‘ராட்சசன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, பாலாஜி சக்திவேல் சாரின் ‘யார் இவர்கள்?’ படங்களுக்குத் தேர்வாகி நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அப்பா, விஜய் அண்ணாவின் ‘பைரவா’ படத்துக்கு சவுண்ட் இன்ஜினியராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார். அந்த படத்தின் இயக்குநர் பரதன் சார் நான் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பதை கேள்விப்பட்டு வாழ்த்தினார். அப்போது அப்பா,  “நீயாக பட வாய்ப்புகளை அமைத்துக்கொண்டாய்... ஆனால், ‘பைரவா’ மாதிரியான படத்தில் ஒரு சின்ன ரோல் செய்து பார். கஷ்டப்படுறவங்க இடத்தில் நின்று நடித்துப் பார்... அதுவும் உனக்கு சிறந்த அனுபவமாக அமையும்” என்று சொன்னார். அப்படித்தான் ‘பைரவா’ படத்தில் கிடைத்த வாய்ப்பை பட்டென்று பிடித்துக்கொண்டு நடித்தேன். அப்பா சொன்னது போலவே துணை நடிகர்களோடு கூட்டத்தில், வெயிலில் நின்று நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அப்படித்தான் எனது ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு அனுபவமாக மாறி என்னை வளர்த்துக்கொள்ள உதவியிருக்கிறது.

‘ராட்சசன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ராட்ஷசுடு’, அதேபோல் ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நரப்பா’ இரண்டிலுமே, நீங்கள் தமிழில் செய்த கதாபாத்திரங்களையே செய்திருக்கிறீர்கள். இதை உங்கள் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாமா?

தாணு சாருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். விக்ரம் பிரபு நடித்த ‘துப்பாக்கி முனை’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சாரின் மகளாக நடித்தேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு சார்தான். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தைச் சொல்லும் ‘பூவென்று சொன்னாலும் நீ’ என்கிற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது தாணு சார் வந்திருந்தார். அப்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு “நீ நல்லா வருவேம்மா…” என்று மனம் விட்டுப் பாராட்டினார். ‘அசுரன்’ தொடங்குறதுக்கு முன்னால, வெற்றிமாறன் சார், தாணு சார் ஆபீஸ் வந்தப்போ அந்தப் பாடலை எடிட்டிங் சமயத்துலப் பார்த்துட்டு  “யாரு இந்தப் பொண்ணு... அசுரனுக்கு பயன்படுத்தலாம். என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க”ன்னு சொல்லியிருக்கார். ஆனால், எனக்கு அசுரன் படத்துல நடிக்கப் போறோம்னு தெரியாது. வெற்றிமாறன் சாரை மீட் பண்ணினப்போ, “என்னம்மா வெயிட் போட்டிருக்கே... குறைச்சுட்டு வா”ன்னு சொல்லி அனுப்பினார். பிறகு வெயிட்டை குறைச்சுட்டுப் போனபோது, “வெயிட் பண்ணும்மா சொல்றேன்” என்றார்.

ரெண்டு மாசம் ஓடியிருக்கும், திடீர்னு வெற்றிமாறன் சார் ஆபீஸ்லேர்ந்து போன்!  “நாளைக்கு ஷூட்டிங்... வண்டி வரும் ரெடியா இருங்க”ன்னு. எனக்கோ அப்பாவுக்கோ ஒண்ணும் புரியல. என்ன படம்... என்ன கேரக்டர்ன்னு எதுவும் தெரியல. இருந்தாலும் வெற்றிமாறன் சார் டைரக்‌ஷன். எதுவாயிருந்தாலும் பரவாயில்லைன்னு நினைத்துக் கொண்டு ஸ்பாட்டுக்குப் போனோம்.

போனபிறகு எனக்கும் தனுஷ் சாருக்குமான ஷாட்ஸை எடுக்கத் தொடங்கினார் டைரக்டர்.  தனுஷ் சாரை நான் மாமான்னு கூப்பிடுற மாதிரி... எனக்கு அவர் செருப்புத் தைச்சுக் கொடுக்கிறது மாதிரி எல்லாம் ஷாட்ஸ் எடுத்துட்டேயிருந்தார். அப்புறம், ‘கத்தரிப் பூ அழகி’ன்னு மாண்டேஜ் பாடல் காட்சி எடுத்தார். முதல்நாள் ஷூட்டிங் முடியும்போது தான் அது ‘அசுரன்’ படம், ஃப்ளாஷ் பேக்ல வர்ற தனுஷோட காதலியா நான் நடிக்கிறேங்கிறதே எனக்குப் புரிஞ்சுது.

‘அசுரன்’ படத்தோட தெலுங்கு ரீமேக்ல என் கேரக்டருக்கு பலபேரை செலக்ட் பண்ணியிருக்காங்க.. ஆனால், யாரும் செட் ஆகல. வெங்கடேஷ் சார் எவ்வளவு பெரிய நடிகர். அவரே, “அம்மு அபிராமி தான் இதுக்குக் கரெக்ட்... அவரை கூப்பிடுங்க”ன்னு சொல்லியிருக்கார். இந்த அங்கீகாரத்தையெல்லாம் மேலும் பல நல்ல கேரக்டர்ஸ் பண்ணி காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன்.

தற்போது நடித்துவரும் படங்கள் பற்றி...

ஹரி சார் இயக்கத்தில் அருண் விஜய் சார் நடிக்கும் அவருடைய 33-வது படத்தில் நடிக்கிறேன். ‘கண்ணகி’, ‘பேட்டரி’ என இரண்டு அற்புதமான படங்களில் நடித்து முடிச்சாச்சு. பாலாஜி சக்திவேல் சார் இயக்கத்தில் நடித்துள்ள ‘யார் இவர்கள்?’ படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

x