ஓ.டி.டி. உலா: சிரித்து ஆக வேண்டும்


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

திரைப்படம், ஆவணப்படம், வலைத்தொடர் ஆகியவையே ஓடிடி படைப்புகளாக அடையாளம் காணப்படுகின்றன. ஆனால், அப்படி எந்த வரையறைக்கும் உட்படாது, எல்லா வயதினரும் தத்தம் ரசனைக்கேற்ப பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க ஓடிடி-யில் ஏகப்பட்ட அம்சங்கள் உண்டு. கிச்சுகிச்சு மூட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் அவற்றில் ஒன்று.

‘LOL எங்க சிரி பார்ப்போம்’ என்ற நகைச்சுவைப் போட்டி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் வீடியோவில் அண்மையில் வெளியானது. ‘பிக் பாஸ்’ பாணியிலான 24 கேமராக்கள் பொருத்தப்பட்ட வீடு. 6 மணி நேரப் போட்டியில் 10 பங்கேற்பாளர்கள் மோதுகிறார்கள். விதிமுறை எளிமையானது. போட்டியாளர் மற்றவரைச் சிரிக்கவைத்தாக வேண்டும்; எதிராளியோ சிரித்துவிடக்கூடாது. போட்டியில் தொடர்ந்து தங்கள் பங்கேற்பை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். கமுக்கமாய் இருந்தால் வெளியேற்றப்படுவார்கள். போட்டியில் வெல்பவருக்குப் பரிசுத் தொகையுடன் ‘LoL சூப்பர் சிரிதாங்கி’ என்ற பட்டமும் வழங்கப்படும்.

மாயா கிருஷ்ணன், அபிஷேக் குமார், ஹாரத்தி, பிரேம்ஜி அமரன், பவர் ஸ்டார் சீனிவாசன், ஷ்யாமா ஹரிணி, புகழ், பாகி, விக்னேஷ் காந்த், சதீஷ் என சினிமா, தொலைக்காட்சி, யூடியூப் பிரபலங்கள், அமேசானின் நிலையக் கலைஞர்கள் எனக் கலவையான போட்டியாளர்கள் இதில் இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் நடுவர் மற்றும் தொகுப்பாளர்களாக மறைந்த நடிகர் விவேக், ‘மிர்ச்சி’ சிவா இருவரும் பங்கேற்றிருக்கிறார்கள்.

மறைவுக்குப் பின்னர் நடிகர் விவேக் திரையில் காணக்கிடைக்கும் நிகழ்ச்சி என்பதால், அவரது வழக்கமான நகைச்சுவை காட்சிகளில் புன்னகைக்க மறந்து மனதை கனக்க வைக்கிறார். உடன் தோன்றும் சிவா, தனது வழக்கமான அசட்டு நகைச்சுவைத் துணுக்குகளால் தோரணம் கட்டுகிறார். தலா 20 சொச்ச நிமிடங்களில் 6 அத்தியாயங்களில் இந்த ‘எங்க சிரி பார்ப்போம்’ நகைச்சுவை போட்டித் தொடரின் முதல் சீஸன் அமைந்துள்ளது. போட்டியின் விதிமுறைகளையும் 10 பங்கேற்பாளர்களை யும் முழுமையாக உள்வாங்குவதற்குள் 2 அத்தியாயங்கள் கடந்துவிடுகின்றன.

வறட்சியான நகைச்சுவை, போட்டியாளர்களின் கொணஷ்டைகள் என முதல் 3 அத்தியாயங்களைக் கடத்துவதற்குச் சற்று பொறுமையும் பிரயத்தனமும் தேவைப்படுகிறது. அதன் பின்னரான கடைசி 3 அத்தியாயங்களில் ஆட்டம் சூடுபிடிக்கிறது. அமேசானின் ‘காமிக்ஸ்தான்’ தமிழ் நிகழ்ச்சியில் பிரபலமான அபிஷேக்கும் ஷ்யாமாவும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள். முன்னவர் சமாளித்துவிட, பின்னவர் ஏமாற்றிவிடுகிறார். மாயா, விக்னேஷ் காந்த், புகழ், சதீஷ், ஹாரத்தி போன்றவர்கள் தங்கள் தனித்திறமையால் நிகழ்ச்சியைத் தாங்குகிறார்கள். பிரேம்ஜி, பாகி, பவர்ஸ்டார் ஆகியோர் பெயருக்கு வந்து செல்கிறார்கள். ஓடிடி தளம் எனும் துணிச்சலில் நகைச்சுவையின் பெயரில் முன்வைக்கப்படும் உருவக்கேலிகளும், அருவருப்பான வசனங்களும் எரிச்சல் தருகின்றன.

விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் ‘சிரிச்சா போச்சு...’ பாணியில் தொடங்கினாலும் விதவிதமான போட்டிகளால் கலகலப்பு சேர்க்கிறார்கள். ஆனால், அவற்றில் பலதும் மனதில் நிற்கவில்லை என்பதுதான் சோகம். அமேசான் படைப்பு என்பதால் காட்சிக்குக் காட்சி சுவாரசியமான உபரித் தகவல்களைத் திரையில் சொடுக்கி மேலும் அறிந்துகொள்ள முடிகிறது. அதில் விவேக் தொடர்பான சுவாரசியங்களும் உண்டு.

***

வீடெனப்படுவது...

பெருந்தொற்று காலத்தின் திரைத்துறை சவால்களைப் பொருட்படுத்தாது, சிறப்பான திரைப்படங்களைத் தருவதில் மலையாளப் படவுலகினரின் பாணி மெச்சத்தக்கது. அந்த வகையில் மனித உணர்வுகளை நெகிழ்வாகக் கூராயும் மற்றுமொரு மலையாளப் படைப்பாக அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது ‘ஹோம்’ திரைப்படம்.

தலைமுறை இடைவெளியால் விலக்கம் கண்ட தனது இரு மகன்களின் டிஜிட்டல் உலகுக்குள் தானும் சஞ்சரிக்க விரும்புகிறார் ஒரு பாசத் தந்தை. அதற்கான முயற்சியில் ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்கள் என சற்றும் பரிச்சயமில்லாதவற்றில் அடியெடுக்கிறார். அந்த முனைப்பு வினையாகிப் போனதில், மூத்த மகனுடனான விலக்கம் வெடிப்பாக மாறுகிறது. அதன்பின் அக்குடும்ப உறவுகளுக்கு இடையிலான தடுமாற்றம் இயல்புக்குத் திரும்பியதா, அப்பாவி தந்தை தனது தவிப்புகளிலிருந்து மீண்டாரா, பிள்ளைகள் அவரைப் புரிந்துகொண்டனரா என்பதைப் பூத்தொடுப்பது போன்ற அழகான காட்சிகளின் வாயிலாகச் சித்தரிக்கிறது ‘ஹோம்’ திரைப்படம்.

மூத்த மகனான ஆன்டனி ஒரு சினிமா இயக்குநர். தனது முதல் படைப்பை வெற்றிகரமாக தந்துவிட்டு, அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதி முடிக்க தடுமாறுகிறார். படைப்பூக்கத்துக்கு உகந்த இடமென தன் வீடு தேடி வருகிறார். இரண்டாவது மகன் சார்லஸ் வளரும் யூடியூபர். இவர்களின் தந்தை ஆலிவர் ட்விஸ்ட், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்துவந்தவர். அத்தொழில் நலிந்ததும் புதிய தலைமுறைக்கான மாற்றங்கள் எதையும் அறியாது முடங்கியவர். கூடவே, தோளுக்கு வளர்ந்த மகன்களுடன் நெருங்க முடியாது தவிக்கிறார். இவர்களுடன் ஆலிவரின் சுகவீனமான தந்தை, மனைவி ஆகியோரும் அந்த வீட்டில் உண்டு. இந்த ஐவரையும் வைத்து சுவாரசியமான ‘ஃபீல் குட்’ சினிமாவைத் தந்திருக்கிறார் இயக்குநர் ரோஜின் தாமஸ்.
ஐவருக்குமே உரிய இடம் வழங்கப்பட்டிருந்தபோதும் மூத்த மகனாக வரும் நாத் பாஷி, தந்தையாக நடித்திருக்கும் இந்திரன்ஸ் ஆகிய இருவர்தான் மொத்த படத்தையும் தாங்குகிறார்கள். அதிலும் மகன் மீதான பாசத்திலும், தன் மீதான கழிவிரக்கத்திலும், புறக்கணிப்பின் வலியிலும் தவிக்கும் இடங்களில் இந்திரன்ஸின் உடல்மொழி அலாதியாக வெளிப்படுகிறது. மகனிடம் ஸ்மார்ட்போன் எதிர்பார்த்துக் காத்திருப்பது, அதன் மூலமே அவனது எதிர்காலத்துக்கு உலை வைத்ததை எண்ணி குமைவது, மகன் காரைக் கழுவும்போது அவனது புன்னகையை எதிர்பார்த்து ஏமாறுவது என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மனிதர் அசுர நடிப்பில் விளாசுகிறார்.

மூத்த மகனாகத் தோன்றும் ஸ்ரீநாத் பாஷியின் அளவான நடிப்பு, ‘2கே கிட்’ வார்ப்புகளை அசலாய் பிரதிபலிக்கும் நல்சென், இவர்களின் தாயார் குட்டியம்மாவாக நடித்திருக்கும் மஞ்சு பிள்ளை, அப்பச்சனாக வரும் கைநகரி தங்கராஜ் ஆகியோரும் சிறப்பான தேர்வுகள். மனநல மருத்துவராக வரும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாபு கதாபாத்திரத்தில் பிரசங்கத் தொனி தென்பட்டாலும், மனநல ஆலோசனை தொடர்பான சமூகத்தின் மனத்தடைகளையும் படம் உடைக்கிறது.

அந்த வரிசையில் தலைமுறை இடைவெளி, மெய்நிகர் உலகுக்கும் நிதர்சனத்துக்குமான அகழி, சாதாரணர் மீதான அசாதாரணர்களின் அழுத்தம், மடல் விரிக்கும் குடும்ப உறவின் பல்வேறு தடுமாற்றங்கள், இருபுறமும் கூரான சமூக ஊடகங்களின் விபரீதம், ஸ்மார்ட் போனுக்கு அடிமையானதை உணராத இளம் தலைமுறை... என பலவற்றையும் படம் கூராய்கிறது.

படம் நெடுக முறுவலிக்கச் செய்யும் நகைச்சுவையுடன் குடும்ப உறவுகளின் மேன்மையைப் பறைசாற்றும் ‘ஹோம்’, குடும்பத்தாரோடு சேர்ந்து ரசிக்க உகந்த படைப்பு!

x