ஆர்மி ஆபீஸர் ஆக ஆசைப்பட்டேன்!- பிரக்யா நாக்ரா


மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in

‘‘எனக்குத் தாய்மொழி பஞ்சாபி. ஆனா, சொந்த ஊர் ஜம்மு. அப்பா ஆர்மி ஆபீஸர். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வெவ்வேறு ஊர்களுக்கு அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் இருக்கும். அப்படித்தான் ஒரு முறை குடும்பத்தோடு சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். அப்போதே எனக்கும் தமிழ்நாடு ரொம்பவே பிடித்துவிட்டது. இங்கு வந்த நேரம் நடிகையாக என்னோட கேரியரைத் தொடங்கிவிட்டேன்!’’ என்கிறார் பிரக்யா நாக்ரா.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ள பிரக்யா நாக்ரா, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 91-வது படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாகியுள்ளார். தனது முதல் திரைப்பட அனுபவம் தொடங்கி அடுத்தடுத்த நகர்வுகள் வரை ‘காமதேனு’விடம் அவர் பகிர்ந்ததிலிருந்து...

ஆர்மி குடும்பம் என்றால் வீட்டில் ராணுவ கண்டிப்பு இருக்கும். சினிமாவுக் கெல்லாம் அவ்வளவு சுலபமாக வர முடியாதே. உங்களது அனுபவம் எப்படி?

 ஆமாம். சினிமாவில் நடிக்கும் ஆசையை வீட்டில் சொன்னதுமே ஆயிரம் கேள்விகள் கேட்டாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு. எனக்கும்கூட ஆரம்பத்தில் அப்பா மாதிரி ஆர்மி ஆபீஸர் ஆகணும்னுதான் ஆசை. ஆனா விவரம் தெரிய ஆரம்பிச்சப்ப, அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு. ஆர்மி ஆபீஸர்னா அவருக்கு ஒரு சீனியர் இருப்பாங்க. அந்த சீனியருக்கு இன்னொரு பாஸ் இருப்பாங்க. எப்படிப் பார்த்தாலும் யாரையாவது சார்ந்துதான் இருக்க முடியும். ஆனா, சினிமா அப்படி இல்லை. இது கிரியேட்டிவ் தளம். இங்கே நிறைய சுதந்திரம் இருக்கு. சாதிக்க இடம் உண்டு. நினைச்சா ஒரு ஆர்மி ஆபீஸரா அழகாக நடிச்சுட முடியும். இந்த மாதிரியான எண்ணம்தான் என்னை இந்த கேரியரைத் தேர்வு செய்ய வெச்சுது.

இவ்வளவு சின்ன வயதில் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடிச்சுட்டீங்க. எந்த வயதில் நடிக்க வந்தீங்க?

பொறியியல் படிச்சு முடிச்சுட்டேன். கல்லூரியில் படிக்கும்போதே விளம்பரப் படங்கள்ல நடிக்கத் தொடங்கிட்டேன். ஒரு சில ஆர்ட் ஃபிலிம்ஸ் முடித்ததும், நிறைய சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனாலும் படிப்பு, அது சார்ந்த தேர்வுகளை மிஸ் செய்ய மனமில்லை. அதையெல்லாம் முடிச்சுட்டு 20 வயசுல முழு நேர நடிப்பு என தீர்மானித்து உள்ளே வந்தேன். கடந்த மூணு வருஷமா அந்தப் பயணம் தொடருது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பல மொழிப் பேசும் மனிதர்களோடு பழகிய அனுபவம் கொண்ட உங்களுக்கு தமிழில் நடிக்க ஆசை பிறந்தது ஏன்?

தமிழக பண்டிகைகள், கலாச்சாரம் எல்லாம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஒரு மொழியில் நாம் நடிக்க வரும்போது முதலில் அந்த மொழியில் சரளமா பேச கத்துக்கணும்னு நினைப்பேன். இப்போதும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருது. ஆனா, எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், ஒரு மொழியை சரளமா பேசும் திறன் ரொம்ப ரொம்ப முக்கியம் என நினைக்கிறேன். அப்படி செய்யும்போதுதான் கதையை, கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு சரியான நடிப்பை வெளிப்படுத்த முடியும்னு நம்புறேன். மொழி தெரியாமல் சமாளித்து நடிக்கும் பாங்கு எனக்கு ஒத்து வராது. இந்த மூணு வருஷத்துல நன்றாக தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். நான் தமிழில் பயணிப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

விளம்பரப் படங்களை தவிர்த்து, தனி ஆல்பம், ஆவணப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறீர்களே..?

 பாடகர் சாம் விஷால் என்னோட நல்ல நண்பர். கடந்த காதலர் தினம் அப்போ ‘கார்குழல் கண்மணி’ என்ற ஒரு காதல் ஆல்பத்தை நாங்க ரிலீஸ் செய்தோம். அது நல்ல ரீச். அதேபோல, ‘என் 4’ என்ற ஒரு டாக்குமென்டரி வகை படத்துலயும் நடிச்சேன். 3 கதைகள் கொண்ட தொகுப்பு அது. ஒரு கதையில் அனுபமாகுமார், இன்னொரு கதையில் கேப்ரியல்லா, மற்றொரு கதையில் நான் என மூன்று விதமாகப் பயணிக்கும் களம். விரைவில் ஓடிடியில் வெளிவரப் போகுது. என்னுடைய திரைப் பயணத்துக்கு இந்த மாதிரியான நடிப்பு அனுபவங்கள் பெரும் உதவியா இருக்குன்னு தான் சொல்வேன்.

அருள்நிதி நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தீர்களே..?

‘எருமசாணி’ யூடியூப் சேனல் குழுவைச் சேர்ந்த விஜய் இயக்கத்தில் ‘டி ப்ளாக்’ என்று ஒரு படம். அதில் அருள்நிதியுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்துல தான் கோவிட் பிரச்சினை உலகம் முழுக்க பெருசா பாதிப்பை ஏற்படுத்திருச்சு. நானும் அப்பா, அம்மாவுடன் இருக்கலாம்னு ஜம்முவுக்குப் போய்ட்டேன். என்னால் அந்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் வேறொரு நாயகி ஒப்பந்தமானார். அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோமேனு இப்ப நினைச்சாலும் எனக்கு வருத்தமா தான் இருக்கு.

ஜீவாவுடன் இணைந்து தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

 சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம். இன்னும் பெயர் வைக்கல. ஒரே ஒரு பாட்டு மட்டும் தான் ஷூட் பண்ணவேண்டி இருக்கு . நிஜத்தில் நான் எப்படியோ அந்த மாதிரி ஒரு பப்ளி பெண்ணாக நடிச்சிருக்கேன். பாலக்காடு பார்டர்ல இருந்து வந்து கோயம்புத்தூரில் செட்டில் ஆன ஒரு மலையாளப் பெண்ணா நடிக்கிறேன். செம எனர்ஜியான கதாபாத்திரம்.

அறிமுக நாயகி பிரக்யாவுக்கு, ஹீரோ ஜீவா ஏதாவது அட்வைஸ் வழங்கினாரா?

வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு வந்ததும் நான் பார்த்த முதல் படமே, ஜீவா நடிச்ச ‘சிவா மனசுல சக்தி’ படம்தான். அந்த நேரத்துல எனக்கு மொழி தெரியாது. சப் டைட்டில் வெச்சு படம் பார்த்தேன். அப்போ இருந்தே அவரோட மிகப் பெரிய ரசிகை 
நான். இன்றைக்கு அவரோட படத்துல அறிமுகமாகிறேன். படப்பிடிப்பில் முதல் நான்கைந்து நாட்கள் அவர்கிட்ட என்னால பேசவே முடியல. அந்த அளவுக்கு படபடப்பு இருந்துச்சு. அப்புறம் சகஜமாகியாச்சு. என்னோட நடிப்பையும், துறுதுறுன்ற பேச்சையும் ஜீவா வெகுவா பாராட்டினார். அதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்?

அடுத்து என்ன பிளான் வெச்சிருக்கீங்க?

ஜெனிலியா, அசின் மாதிரி தொடர்ந்து கலகலப்பான படங்களைத் தேர்வு செஞ்சு நடிக்கணும். ஜீவா படத்துல என்னோட நடிப்பைப் பார்த்த பிறகு நிறைய புதிய கதைகள் வருது. அதேபோல இந்தப் படக்குழுவும்,  “பிரக்யா நல்லா நடிக்கிறாங்க”னு வெளியில என்னைப் பத்திப் பேசுறாங்க. இதெல்லாம் எனக்குக் கிடைச்ச கிஃப்ட்.  என் மீது மத்தவங்க வெச்சிருக்கிற நம்பிக்கையைப் பாதுகாக்கும் அளவுக்கு நல்ல கதைகளா தேடிட்டு வர்றேன். சீக்கிரமே அடுத்த படத்துக்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

படங்கள் உதவி: கேமரா செந்தில்

x