எசமான் நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?


எம்எல்ஏ, எம்.பியில இருந்து கவுன்சிலர் சீட் வரைக்கும்தான் நம்மாட்கள் சாதி ரீதியாக ஓட்டுக் கேட்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ்-அப் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அதன் சாரம் என்னவென்றால், சைமா விருதுக்காக எனது நண்பன் திரு.விருமாண்டி அவர்கள் தான் இயக்கிய க.பெ.ரணசிங்கம் என்ற சினிமாவிற்காக சிறந்த அறிமுக இயக்குனராகும் தேர்வுப் பட்டியலில் இருக்கிறார். அவருக்கு கீழே உள்ள லிங்க்கில் வாக்களித்து மண் சார்ந்த நம் சினிமாவிற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு நண்பர் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோளை டேக் செய்தார். இந்த லிங்க்கை கிளிக் செய்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய தோழர் அதியன் ஆதிரை அவர்களுக்கு ஓட் செய்யுங்கள். நான் எனது ஓட்டை செலுத்திவிட்டேன் என்று.

அப்படி என்ன விருது இது என்கிறீர்களா? சிஐஐஎம்ஏ என்ற அமைப்பு அதாவது, சவுத் இன்டியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சேன்டல்வுட் ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட சினிமா விருதுகளை வழங்கிவருகிறது. விரைவில் இந்த ஆண்டுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அதற்கான நாமினிகளை ரசிகர்களும் தேர்ந்தெடுக்கும் வகையில் ஓட்டெடுப்பு வசதியை தனது இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளது அந்த அமைப்பு. அதற்குத்தான் இத்தனை அலப்பறைகள்.

ஒரு இயக்குநருக்கு ஆதரவாக முக்குலத்தோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் களமாடுகிறார்கள், இன்னொரு இயக்குநருக்கு ஆதவாக தலித் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஓட்டு கேட்கிறார்கள். ஆக, படத்தை விட அதை இயக்கியவரின் சாதிதான் முக்கியம் அப்படித்தானே(ரசிகக்) கண்மணிகளே...

x