சினிமா சிற்பிகள் - 6: ஃப்ரிட்ஸ் லேங்- இருள் திரையின் தந்தை


உலகில் பல்வேறு மொழி சினிமாக்கள் இருந்தாலும், சர்வதேச அளவில் ஹாலிவுட் சினிமாக்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது. புதுமையான கதைக்களம், வியக்கவைக்கும் தொழில்நுட்ப உத்தி என ஹாலிவுட் திரையுலகம் எதை அறிமுகப்படுத்தினாலும் அது உலக அளவிலான திரையுலகில் எதிரொலிக்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்பில் வளர்ந்தது ஹாலிவுட். அந்த வகையில், ஜெர்மனியைப் பூர்விகமாகக் கொண்ட இயக்குநர் ஃப்ரிட்ஸ் லேங் (Fritz Lang) உருவாக்கிய ஹாலிவுட் படங்கள் மூலம் டார்க் ஜானர் மற்றும் நாய்ர் வகைத் திரைப்படங்கள் உலகம் முழுக்க பரவின.

எக்ஸ்ப்ரஷனிஸ வடிவம் கொண்ட திரைப்படங்களை, ராபர்ட் வைய்ன் எப்படி உலகம் முழுக்க பிரபலப்படுத்தினார் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ‘தி கேபினட் ஆஃப் டாக்டர் கேலிகாரி’ படத்தின் மூலம் எக்ஸ்ப்ரஷனிஸ தத்துவத்தை சினிமாவில் விதைத்தது ராபர்ட் வைய்ன் என்றால், அதன் நீட்சியான டார்க் ஜானர் மற்றும் நாய்ர் வகைத் திரைப்படங்களை ஜெர்மனியிலிருந்து உலக சினிமாவின் மையப்புள்ளிக்கு நகர்த்திவந்தவர் ஃப்ரிட்ஸ் லேங். 1936 முதல் 1956 வரை அவர் எடுத்த படங்கள் அனைத்தும், இன்றைக்கு நாய்ர் வகைப் படங்கள் எடுப்பவர்களுக்குப் பாடமாக இருக்கின்றன என்றே சொல்லலாம்.

உலகம் சுற்றிய கலைஞன்

1890 டிசம்பர் 5-ல் வியன்னா நகரில், கட்டுமான நிறுவன உரிமையாளரான ஆன்டோன் லேங் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் ஃப்ரிட்ஸ் லேங். தனது பள்ளிப் படிப்புக்குப் பிறகு கட்டுமானப் பொறியியலில் பட்டப்படிப்பு படித்த லேங்குக்கு ஓவியக்கலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் நீட்சியாக, 1910-ல் உலகைச் சுற்றிப்பார்க்க ஒரு பெரும் பயணத்தை மேற்கொண்டார். ஜெர்மனியிலிருந்து கிளம்பி ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவின் முக்கிய இடங்களுக்குச் சென்ற லேங், இறுதியில் பாரிஸ் வந்து அங்கே ஓவியக்கலை மாணவரானார்.

இந்தச் சூழ்நிலையில் முதல் உலகப்போர் ஆரம்பித்துவிட, ஜெர்மனி திரும்பிய லேங் ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் போரிட்டார். இந்தப் போரில் ஏற்பட்ட காயத்தில் வலது கண்ணில் பார்வையை இழந்தார். அவரது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் தாக்கம் அவரின் வாழ்நாளின் இறுதிவரை அவரைத் துன்புறுத்தியது. காயத்துக்கான சிகிச்சையிலிருக்கும்போது, போர் தந்த மன அழுத்த நிலையில் திரைப்படங்களுக்கான மூலக் கதைகள் பற்றி தனக்குத் தோன்றியவற்றை எழுத ஆரம்பித்தார். 1918-ல் லெப்டினென்ட்டாக இருந்தவர் அந்தப் பதவியிருந்து விடுவிக்கப்பட்டு, ராணுவத்திலிருந்து வெளியேறினார்.

அதன்பின், மேடை நாடகங்களில் நடித்தவர் பிறகு, ‘டெக்லா ஃபிலிம்’ நிறுவனத்தில் திரைக்கதை ஆசிரிய ராகப் பணியில் சேர்ந்தார். அங்கே சிறிது காலம் பணிபுரிந்துவிட்டு, ஜெர்மன் அரசாங்கத்தின் ‘ஊஃபா’ தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராகவும் பின்பு ‘நீரோ ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பல படங்களை இயக்கினார். எக்ஸ்ப்ரஷனிஸ கருத்தியலைப் பயன்படுத்தி லேங் இயக்கிய ‘டாக்டர் மாபுஸ் தி கேம்ப்ளர்’ (1922), ‘தி நிபுலங்க்ஸ்’(1924) போன்ற படங்கள் இன்றளவும் போற்றிப் புகழப்படுகின்றன. அவரது ஆரம்பக்காலத் திரைப்படங்கள் பெரும்பாலும் 4 முதல் 5 மணி நேரம் நீளம் கொண்டவையாக இருந்ததால், இரண்டு பாகங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டன.

‘ஊஃபா’-வை உலுக்கிய ‘மெட்ரொபொலிஸ்’

லேங் தன்னுடைய இரண்டாவது மனைவியான தியா வான் ஹர்போவுடன் இணைந்து பல கதைகளை எழுதி, அவற்றைத் திரைப்படங்களாக எடுத்தார். இவர்களின் கூட்டணியில் உருவான திரைப்படங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமான படைப்பாகக் கருதப்படுவது ‘மெட்ரோபொலிஸ்’(1927) திரைப்படம். டிஸ்டோபியன் வகை அறிவியல் புனைகதையைக் களமாகக் கொண்ட இத்திரைப்படம், அக்காலகட்டத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தயாரித்ததைத் தொடர்ந்து, ஊஃபாவின் நிதிநிலையே தரைமட்டமாகும் நிலைக்குச் சென்றது. அக்காலகட்டத்தில் இத்திரைப்படம் பொருளாதார ரீதியாகப் பெரும் தோல்வியடைந்தாலும், பின்னாட்களில் பெரும் திரைப்படைப்பாக அங்கீகாரம் பெற்றது.

ஆரம்பகால முழுநீளத் திரைப்படங்களில் மிகப் பிரம்மாண்டமான செட்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படமாக ‘மெட்ரொபொலிஸ்’ கருதப்படுகிறது. வசனம் பேசும் திரைப்படங்கள் வர ஆரம்பித்த காலகட்டத்தில், லேங் இயக்கிய ‘எம்’ (1931) திரைப்படம் சைக்கோ/சீரியல் கொலையாளி கதைகளுக்கான வழிகாட்டும் கையேடாக இன்றும் கருதப்படுகிறது. குழந்தைகளைக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை மையமாகக் கொண்டு நகரும் இத்திரைக் கதையின் தாக்கத்தை, இன்றும் பல படங்களில் நம்மால் உணர முடியும். இத்திரைப்படத்தில் எக்ஸ்ப்ரஷனிஸ காட்சியமைப்பை நவீனக் காலத்துக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்தியிருப்பார் லேங். கண்ணாடியைப் பயன்படுத்திச் சூழலின் பிரதிபலிப்புகளுக்கு இடையே கதாபாத்திரங்கள் இருக்குமாறு ‘எம்’ திரைப்படத்தில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஹிட்லருக்குப் பிறகு...

1932-ல் லேங் இயக்கிய ‘தி டெஸ்டமென்ட் ஆஃப் டாக்டர் மாபுஸ்’ திரைப்படம், 1933-ம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராகப் பொறுப்பேற்றபின் தடை செய்யப்பட்டது. ஹிட்லரின் தலைமைக் கொள்கை பரப்பாளரான கோயபல்ஸ், இத்திரைப்படம் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்று அறிவித்து படத்துக்குத் தடை விதித்தார். பொதுவெளியில் இத்திரைப்படத்துக்குத் தடை விதித்தாலும், லேங்கைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த கோயபல்ஸ், திரைப்பட இயக்கத்தில் லேங்குக்கு இருந்த திறமையை வெகுவாகப் பாராட்டி, ‘ஊஃபா’-வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாஜிகளுக்கு ஆதரவான படங்களை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தன் தாய் ஒரு யூதர் என்பதால், தனக்கும் நாஜி கட்சியினரால் ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் இருந்த லேங், கோயபல்ஸுடனான சந்திப்பு முடிந்த அன்று மாலையே பாரீஸுக்குத் தப்பிச்சென்றார். இக்காலகட்டத்தில் அவரது மனைவியும் எழுத்தாளருமான தியா வான் ஹர்போவ், நாஜி கட்சியில் சேர்ந்து  தீவிரம் காட்ட ஆரம்பித்ததால், அவரை விவாகரத்து செய்தார் லேங். பாரீஸுக்குத் தப்பிச்சென்ற லேங் அங்கே ‘லிலியோம்’ என்ற பிரெஞ்சு படம் ஒன்றை இயக்கினார்.

ஹாலிவுட் வருகை

பாரீஸில் ஒரு படத்தை இயக்கிவிட்டு அமெரிக்காவுக்கு வந்த லேங், அடுத்த இருபது ஆண்டுகளாக ஹாலிவுட்டை ஆண்டார் என்றே சொல்லலாம். ஹாலிவுட்டில் தனது முதல் படமான ‘ஃபியூரி’ வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் நாஜி கட்சிக்கு எதிரான படங்களை இயக்குவதில் மும்மரம் காட்டினார் லேங். அவருடைய ‘மேன் ஹன்ட்’ திரைப்படம் அதற்குச் சிறந்த உதாரணம். ஹிட்லரைக் கொலை செய்வதை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் அது.

தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஹேங்மேன் ஆல்ஸோ டை’ (1943), ‘மினிஸ்ட்ரி ஆஃப் ஃபியர்’ (1944) படங்களும் நாஜி கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தன. தனது காலத்தில் இருந்த இயக்குநர்கள் திரையில் காட்டத் துணியாத கொடூரக் கதாபாத்திரங்களைத் துணிச்சலாகக் காட்சிப்படுத்தினார் லேங். ‘தி பிக் ஹீட்’ (1953), ‘வைல் தி சிட்டி ஸ்லீப்ஸ்’(1956) திரைப்படங்கள் இதற்கு உதாரணம். ஹாலிவுட்டில் லேங் உருவாக்கிய நாய்ர் மோகம் உலகின் பல இயக்குநர்களையும் தங்கள் படங்களில் இந்த முறை கதைசொல்லலைக் கையாளத் தூண்டியது.

இந்தியப் பின்னணியில்...

1945-ல் நாஜி கட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1959-ல் ஜெர்மனி திரும்பிய லேங் ‘தி டைகர் ஆஃப் எஷ்னாபூர்’ மற்றும் ‘தி இந்தியன் டோம்ப்’ என்ற இரண்டு படங்களை எடுத்தார். இந்தியாவில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்ட இந்தப்படங்கள் இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டாலும், இந்தியக் கதாபாத்திரங்களிலும் ஜெர்மானியர்களே நடித்திருப்பார்கள். டார்க் ஜானர்களிலிருந்து விலகி, சற்று மாறுபட்ட கதைசொல்லல் முறையை இத்திரைப்படங்களில் முயன்றிருப்பார் லேங்.

முதல் உலகப்போரில் ஒரு கண்ணில் பார்வை இழந்த லேங், தொடர்ந்து கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர், 1976 ஆகஸ்ட் 2-ல் உயிரிழந்தார்.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களைத் திறம்படப் பயன்படுத்தி பிரம்மாண்ட காட்சிமொழியை எப்படி வெளிப்படுத்துவது என்பதை உலக இயக்குநர்களுக்குக் காட்டி, எக்ஸ்ப்ரஷனிஸ கருத்தியலை எளிமைப்படுத்தி நாய்ர் வகைத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தைக் கட்டமைத்து உலக சினிமா போக்கில் தாக்கம் செலுத்திய ஃப்ரிட்ஸ் லேங் என்றைக்கும் ‘டார்க் ஜானரின் தந்தை’ என்று நினைவுகூரப்படுவார்.

x