கண்டிப்பா சைக்காட்டிரிஸ்ட் ஆகிருவேன்!-  ‘பாவம் கணேசன்’ பிரணிகா பளிச்


பகத்பாரதி
readers@kamadenu.in

“எல்லாரும் என்னைய பெரிய பொண்ணுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. நான் இப்போ தான் ப்ளஸ் டூவே முடிச்சிருக்கேன்” என புன்னகைக்கிறார் பிரணிகா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்' தொடரில் நடித்து வரும் அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி..?

சொந்த ஊர் திருச்சி. நான் இப்போ தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கேன். அடுத்து மாஸ் கம்யூனிகேஷன் படிக்கலாம்னு இருக்கேன். எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. தொடர் ஷூட்டிங் இருக்கிறதால இப்போ நாங்க சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்.

 சீரியல் என்ட்ரி குறித்து..?

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயத்துலடிக்டாக் வீடியோஸ் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. அம்மாகிட்ட, “ஃப்ரீ டைம்ல
நான் வீடியோ பண்ணட்டுமா”ன்னு கேட்டேன்.  “நான் தான் வீடியோபோஸ்ட் பண்ணுவேன்; சம்மதமா”னு கேட்டாங்க. நானும் ஓகேனுட்டேன். வீடியோ எடுத்துட்டு அம்மாகிட்ட கொடுத்திடுவேன். அவங்க அதைப் பாத்துட்டு அப்லோட் பண்ணிடுவாங்க. இப்போ வரைக்கும் நான் எடுக்கிற வீடியோவை அம்மா தான் அப்லோட் பண்றாங்க.

அப்படி நான் டிக்டாக் பண்ணி போட்ட முதல் வீடியோவே ரொம்ப ரீச் ஆகிடுச்சு. ஃபாலோவர்ஸூம் அதிகமாக ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி டிக்டாக் மூலமா தான் ஷார்ட் பிலிம்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதே மாதிரி நாங்க எதிர்பார்க்காமல் தான் விஜய் டிவி-யில் இருந்து ‘பாவம் கணேசன்' சீரியலில் நடிக்க என்னை செலக்ட் பண்ணியிருக்கறதா போன் பண்ணாங்க.  யாரோ விளையாடுறாங்கன்னு நம்பாம நாங்க போனை வைச்சிட்டோம். அப்புறம் அருண், அரவிந்த் அண்ணா தான் போன் பண்ணி நிஜமாகவே என்னைய செலக்ட் பண்ணிருக்கறதா சொன்னாங்க. எனக்கு அவ்வளவு ஹேப்பி ஆகிடுச்சு. பின்ன... எந்த ஆடிஷனும் இல்லாம நேரடியாவுல என்னைய செலக்ட் பண்ணாங்க.

 ஆர்ட்டிஸ்ட் ஆகணும்கிறதுக்காக உங்க லட்சியக் கனவையே விட்டுக் குடுத்துட்டீங்களாமே..?

ஆமாங்க... எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணும்னு ஆசை. ஆனா, பத்தாம் வகுப்பு முடிச்சதுமே நிறைய ஷூட்டிங் வர ஆரம்பிச்சது. ஃபர்ஸ்ட் குரூப் எடுத்தா ரொம்ப கவனம் செலுத்திப் படிக்கணும். அடிக்கடி ஸ்கூல் லீவ் போட முடியாது. அதனால எங்க வீட்ல என்னுடைய முடிவைக் கேட்டாங்க. எனக்கு நடிகையாகணுங்கிற ஆசையும் இருந்துச்சு. அதனால வீட்ல சொன்னேன். என் ஆசைக்கு அவங்களும் சம்மதிச்சு, ஈஸியான குரூப்பை எடுத்துக்கச் சொன்னாங்க. பிறகு அக்கவுண்ட்ஸ் குரூப் எடுத்து படிச்சேன். டாக்டர் தான் ஆக முடியலை சைக்காட்டிரிஸ்ட் ஆச்சும் படிக்கணும்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். கண்டிப்பா சைக்காட்டிரிஸ்ட் ஆகிடுவேன்.

‘காமெடி ராஜா கலக்கல் ராணி' ரியாலிட்டி ஷோவில் சூப்பரா நடிக்கிறீங்களே..?

எனக்கு இது வராதுன்னு நான் எதையுமே சொல்ல மாட்டேன். புதுசு, புதுசாக் கத்துக்கிட்டு நடிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால தான் காமெடி ஷோன்னு சொன்ன உடனே ஓகே சொன்னேன். அந்த செட்லயே நான் தான் சின்னப் பொண்ணு. ராமர் அண்ணா, ஜெயசந்திரன் அண்ணான்னு அங்கே நிறைய சீனியர்ஸ் இருக்காங்க. அவங்க கூட போட்டி போடுறது ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. சீனியர் அப்படிங்குற எந்த ஈகோவும் இல்லாம எல்லோரும் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவாங்க. என் கூட ஜோடியா நடிக்கிற வினோத் பாபு அண்ணா எனக்கு பயங்கர சப்போர்ட். ஒவ்வொரு ஸ்கிரிப்ட்லயும் எனக்கான இடத்தை கொடுப்பாங்க. ஐஸ்வர்யா மேடம், மதுரை முத்து சார், பாபா பாஸ்கர் மாஸ்டர்னு மூணு நடுவர்களுமே என்னை பர்சனலா பாராட்டியிருக்காங்க. ஒரு எபிசோடில் டிடி அக்கா மாதிரி ஆங்கரிங் பண்ணி நடிச்சேன். அதைப் பார்த்துட்டு, “கண்டிப்பா விஜய் டிவியில் நீ ஆங்கரிங் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு”ன்னு சொல்லி செட்ல என்னை பாராட்டினாங்க.

 ஃபேமிலி சப்போர்ட்..?

ஆரம்பத்தில் அம்மா மட்டும் தான் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. அப்பாவுக்கு இப்ப வரைக்கும் சின்னதா பயம் இருக்கு. ஆனாலும், என் ஆசைக்கு தடை சொல்லலை. அவருக்கு பிடிக்கலைன்னாலும் எனக்காக சம்மதிச்சு என்னை அனுப்பி வைச்சார். ஷூட் முடியுற வரைக்கும் அம்மா என் கூடவே இருப்பாங்க. இப்போ என்னை பலருக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு. சொந்தக்காரங்க எல்லாம் ரொம்பவே மரியாதை கொடுக்கிறாங்க. அதனால நானும் ஹேப்பி.. அம்மா, அப்பாவும் ஹேப்பி.

வெள்ளித்திரை என்ட்ரி..?

இயக்குநர் சற்குணம் சார் படத்தில் செகண்ட் லீட் ரோலில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் ரிலீஸூக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நிறைய பட வாய்ப்புகள் இப்போ வந்துட்டு இருக்கு. நல்ல கதாபாத்திரத்திற்காக வெயிட் பண்றேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் வெள்ளித்திரையிலும் தடம் பதிச்சிடுவேன்.

x