ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தில். ஜெனிஃபர் டீச்சராக அறிமுகமானவர் நடிகை ரேகா. அனைத்துத் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 34 ஆண்டுகளாக ஆசிரியர், மருத்துவர், காவல் அதிகாரி என பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கடவுள் அவதாரங்களில் நடிக்கும் வாய்ப்பு இதுநாள்வரை அவருக்கு வாய்க்கவில்லை. இந்த ஏக்கத்தைப் போக்க, அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் ‘வேப்பிலைக்காரி’ வேடமிட்டு போட்டோஷூட் நடத்தி அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸில் வந்தீர்கள். ‘ரேகாஸ் டைரி’ யூடியூப் சேனலில் சமையல் குறிப்புகளை வெளியிட்டுவந்தீர்கள். அடுத்து அம்மன் அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். எப்படி இதெல்லாம்?
பத்தாம் வகுப்பு முடிச்சதும் சினிமாவுக்கு வந்துட்டேன். கிடுகிடுவென வளர்ந்து பல முன்னணி நடிகர்களோட நடிச்சிட்டிருக்கும்போதே திருமணம் ஆகிடுச்சு. எங்களது ஒரே செல்ல மகள் அபி. ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சு இப்போ நியூயார்க்கில் வசிக்கிறாள். சரி, நம்ம குடும்ப கடமைகளெல்லாம் முடிஞ்சது. திரும்ப சினிமாவுக்கு வரலாம்னு பார்த்தா, இங்க இண்டஸ்ட்ரி டிஜிட்டல் உலகமா மாறி இருந்துச்சு. அதனால வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் 10 நாட்களுக்கு பிக் பாஸ் போனேன். அது முடிஞ்சதும் ரொம்ப போரிங்காக இருந்தது.
நான் சாப்பாட்டுப் பிரியை. வகைவகையான இறைச்சி உணவுகளைச் சமைத்துத் தர ரொம்பப் பிடிக்கும். மகள் அபியுடன் இருந்து அவளுக்கு வாய்க்கு ருசியாக சமைச்சுத் தர ஆசை. அவள் நியூயார்க்கில் இருக்கிறதால ரொம்ப மிஸ் பண்றோம். சரி, அபிக்கு செஞ்சு தர்றதா நினைச்சு சமையல் சேனல் தொடங்கலாமேன்னு சிம்பிளா ஒரு ரிங் லைட் வெச்சு ஷூட் பண்ணினேன். அப்படித்தான் ‘ரேகாஸ் டைரி’ ஆரம்பிச்சது!
அதிலிருந்து வேப்பிலைக்காரியாக மாறியது எப்படி?
என்னுடைய நிரந்தர அடையாளமா ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரம் மாறிப்போனது எனக்குக் கிடைத்த வரம். இருந்தாலும் அந்த ஸ்டீரியோ டைப்பிலிருந்து விடுபடணும்னு நினைச்சேன். கமல், மோகன்லால் போல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கணும்னு எனக்குள்ள ஒரு ஆசை. அதுக்கான வாய்ப்பை மத்தவங்க தராததால, நானே உருவாக்கலாம்னு முடிவெடுத்தேன். ‘வேப்பிலைக்காரி’ அம்மனோட படத்துக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 60 ஆயிரம் கமென்ட்ஸ் வந்திருக்கு. “உங்க படத்தை எங்க வீட்டுல ஃபிரேம் பண்ணி வெச்சுக்குவோம்”னு பலர் பக்திப் பரவசத்தோட கமென்ட் போட்டிருக்காங்க.
உங்களை வேப்பிலைக்காரியாக உருமாற்றியவர்கள் யார்?
ஹர்ஷத்ஜி என்பவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல சுவாரசியமான மேக்ஓவர் செயப்பட்ட பலருடைய புகைப்படங்களைப் பார்த்தேன். அவர்கிட்ட பேசினேன். முதலில், அருந்ததி, பாகுபலி ராஜமாதா மாதிரி மேக்-ஓவர் செய்யலாம்னு அவர் ஐடியா கொடுத்தார். “ஏற்கெனவே செய்தவை வேணாம்… நாமே புதுசா கண்டுபிடிப்போம்”னு ‘வேப்பிலைக்காரி’ கான்செப்ட் பத்தி சொன்னேன். ஆள் அசந்துட்டார். கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மனைப் போலவே அச்சு அசலான மேக்ஓவர் செய்யலாம்னு சேலை, நகை, சூலாயுதம், கிரீடம்னு கவனமா தேர்ந்தெடுத்தோம். கிரீடம், சூலாயுதம் ஆகியவற்றை சையத் வடிவமைச்சு தந்தார். தமிழ், பிரேம் இருவரும் ஃபோட்டோகிராஃபி செய்தார்கள்.
சென்னை அய்யப்பன்தாங்கலில் ஹர்ஷத்ஜி வீட்டில் காலை 8 மணிக்குத் தொடங்கி மேக்கப் முடிக்கவே 3 மணி நேரம் ஆச்சு. பிறகு ஷூட் மாலை 7 மணி வரைக்கும் நடந்துச்சு. என்னை அம்மன் தோற்றத்தில் பார்த்ததும் ஹர்ஷத்ஜியின் அம்மா வயது வித்தியாசம் பாக்காம அப்படியே காலில் விழுந்துட்டாங்க. “நீங்க அப்படியே அம்மன் மாதிரியே காட்சியளிக்கிறீங்க”ன்னு அவங்க சொன்னதுதான் எனக்குக் கிடைச்ச பெரிய காம்ப்ளிமென்ட்.
உங்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டா? எத்தனையோ அம்மன் அவதாரங்கள் இருக்கும்போது வேப்பிலைக்காரியானது ஏன்?
நான் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும் குருவாயூர், திருப்பதி, நாகூர்னு பல ஸ்தலங்களுக்கும் போயிருக்கிறேன். எனக்கு எல்லா கடவுளும் ஒன்றுதான். அதிலும் புத்தரைக் கூடுதலாகப் பிடிக்கும். அமைதியா ஓரிடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யுறதுதான் என்னைப் பொறுத்தவரை ஆன்மிகம். கடவுள் அவதாரத்தில் வேப்பிலைக்காரியைத் தேர்ந்தெடுக்க கரோனா காலமும் ஆடிமாசமும்தான் முக்கியக் காரணம்.
பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்ப்புசக்தியும் கிருமிநாசினியும் ரொம்பவும் முக்கியம். வேப்பிலையின் குணமே அதுதான். அதேபோல ஆடிமாசம் அம்மனுக்கு விசேஷமாச்சே! துர்க்கை, காளி மாதிரி உக்கிரமான பெண் தெய்வங்களைவிடவும் அன்பும் கருணையும் மிகுந்த கிராமத்துத் தேவதை மாதிரி இருக்கணும்னு யோசிக்கும்போது வேப்பிலைக்காரிதான் ஞாபகத்துக்கு வந்தாள். 1 நாள் முழுக்க தண்ணீர்கூட குடிக்காம விரதம் இருந்தேன். அடுத்த நாள் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டும் சைவ சாப்பாடு சாப்பிட்டேன். பிறகே ஷூட்டிங் போனோம். அத்தனை மணிநேரம் மேக் அப், ஷூட்டிங் செய்தாலும் சோர்வே தெரியல. ஏதோவொரு அபரிமிதமான சக்தி எனக்குள்ளே வந்ததுபோல உணர்ந்தேன்.
கே.ஆர்.விஜயா தொடங்கி நயன்தாரா வரை விதவிதமான அம்மன் வேடமிட்டிருக்கிறார்கள். அப்படி உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?
நான் கதாநாயகியா நடிச்ச காலத்துலயே விஜயசாந்தி, பானுப்ரியா, ரோஜா, ஷோபனா, ரம்யா கிருஷ்ணன் எல்லாம் அம்மனாகத் திரையில் மிரட்டியிருக்காங்க. அதிலும் கிளாசிக்கல் டான்ஸ் தெரிஞ்சவங்க என்பதால அவங்களுடைய நடை, உடை, பாவனை எல்லாமே அழகா இருந்துச்சு. சமீபத்துல ‘மூக்குத்தி அம்மன்’ வேடத்தில் நயன்தாரா பிரமாதமா நடிச்சிருந்தார். இவங்க எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். ஆனாலும் யாரைப் போலவும் நான் இருக்க விரும்பவில்லை. எனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் யாரையும் ரெஃபரன்ஸா எடுக்கல.
பெண்களை அணுகும் விதத்தில் தமிழ் சினாவில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?
கிராஃபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல்னு சினிமாவின் தொழில்நுட்பம் வெகுவாக மாறியிருக்கிறதால பல ஸ்டீரியோ டைப்ஸூம் மாறிவருது. குறிப்பா, ஓடிடி வந்தபிறகு யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இதனாலேயே கதாநாயகிக்கான வயது, தோற்றம் பத்தின பார்வையும் மாறிட்டுவருது.
உங்களின் அடுத்த அவதாரங்கள்?
விஜய் டிவி எண்டிமால் தயாரிப்பில் சத்யராஜ், லிவிங்ஸ்டன், சீதாவுடன் சேர்ந்து நடிக்கும் ‘பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் சீரிஸ் முடியும் தருவாயில் இருக்கு. இதுதவிர ஒரு மலையாளப் படம், இரண்டு தமிழ் படங்களில் நடிச்சு முடிச்சிருக்கேன். வேப்பிலைக்காரிக்கு அடுத்தபடியா பல ஐடியாக்கள் இருக்கு. அதையெல்லாம் இப்பவே வெளியில சொன்னா எல்லாரும் அதேபோல கிளம்பிடுவாங்களே... (சிரிக்கிறார்). நான் யோகாசனம், தியானம் செய்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பா வெச்சிருக்கதால பல அவதாரங்கள் எடுக்கத் தயார்!