க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com
புகழ்பெற்ற ‘ரோட்டர்டேம்’ சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’. 49 வருட வரலாற்றைக் கொண்ட இத்திரைப்படத் திருவிழாவில் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் தமிழ்ப் படம் இது. ரொமானியாவில் நடந்த திரைப்படத் திருவிழாவிலும் சிறந்த திரைப்படத்துக்கான விருதை இப்படம் பெற்றிருப்பதால், வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது ‘கூழாங்கல்’ படக்குழு. விருது பெற்ற நெகிழ்ச்சியிலிருந்த இயக்குநர் வினோத்ராஜிடம் பேசினோம்.
முதல் படத்திலேயே சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்கிறீர்கள். எப்படி ஆரம்பித்தது இந்த சாதனைப் பயணம்?
மதுரை ஊமச்சிக்குளத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, என் அப்பா இறந்துவிட்டார். அத்துடன் என் படிப்பும் முடிஞ்சுபோச்சு. கொஞ்ச நாள் ஊதாரியா சுத்திக்கிட்டு இருந்தேன். அதற்குப் பிறகு குடும்ப வறுமையைப் போக்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்திலிருந்த பூ மார்க்கெட்டில் மூட்டை தூக்கினேன். அப்போது அங்க நிறைய ஷூட்டிங் நடக்கும். அதை வேடிக்கை பார்ப்பேன். கேமராமேன் பயன்படுத்தும் கேமரா கிரேன் மேல்தான் என் கவனம் முழுக்க இருக்கும். ‘இதில் ஏறி அப்படியே மேல போனா மீனாட்சி கோபுரத்தை முழுசா பாக்கலாம்ல’ன்னு மனசுல நினைச்சுப்பேன். அப்படி சின்ன வயசிலேயே சினிமா மேல ஆசை வந்துடுச்சு.
ஒருகட்டத்தில் குடும்பத்தோடு திருப்பூருக்கு வேலை தேடி போய்ட்டோம். அங்க பல நண்பர்கள் கிடச்சாங்க. சினிமாவில் நுழையணும்னா படிப்பு இருக்கணும்னு சொன்னாங்க. அதுக்காகவே டுட்டோரியலில் போய்ச் சேர்ந்து ப்ளஸ் 2 வரைக்கும் படிச்சு முடிச்சேன். அப்படியே கோணங்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளின் அறிமுகம் கிடைத்தது. நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு, சினிமா ஆசையில் சென்னைக்கு வரும்போது ரயில் சிநேகமா அறிமுகமானவர் மூலமா ஒரு டிவிடி கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். கோடம்பாக்கம் பக்கத்தில் இருக்கும் விருகம்பாக்கத்தில் இருந்த அந்தக் கடைக்குப் பல இயக்குநர்கள், சினிமா ஆட்கள்னு வருவாங்க. அவங்ககிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்பேன்.
அப்படிதான் இயக்குநர் சற்குணம் எனக்கு அறிமுகமானார். அவர்தான், “கேமராமேன் ஆகணும்னா டெக்னிக்கலா நிறைய விஷயம் தெரியணும். நீ நல்லா கதை சொல்ற… நீ இயக்குநராக முயற்சி பண்ணு”ன்னு சொல்லி, அவருடைய உதவியாளர் ராகவன் இயக்கின ‘மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநரா வேலைக்குச் சேர்த்துவிட்டார். அதற்கு அப்புறம் நடந்ததுதான் ‘கூழாங்கல்’.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் முதலில் வெளிவந்துள்ள படம் ‘கூழாங்கல்’. படம் பார்த்துட்டு நயன்தாரா என்ன சொன்னாங்க?
வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்துத்தான் இந்தப் படத்தை ஆரம்பித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பணமுடக்கத்தின் காரணமா படத்தை நகர்த்த முடியலை. அப்போதான் கோவா திரைப்படத் திருவிழா நடந்தது. அங்க நடக்கிற ‘ஃபிலிம் பஜார்’ ரொம்ப முக்கியமானது. ‘நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், நல்ல கதை வைத்திருப்பவர்கள், படங்கள் எடுத்துக்கொண்டிருப்பவர்கள், படம் எடுத்து முடித்துவிட்டு வெளியிட முடியாமல் இருப்பவர்கள் போன்றோர் தங்கள் படங்களைச் சந்தைப்படுத்தலாம். இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்து வரும் தயாரிப்பாளர்களிடம் நமது படத்தைக் காட்டலாம். நம் படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்றால் அவர்கள் பொருளாதார ரீதியாக நமக்கு உதவுவார்கள். இது நம்மூர் இயக்குநர்கள் பலருக்குத் தெரிவதில்லை என்பது வருத்தமான விஷயம்.
இந்த ஃபிலிம் பஜாரில் ‘கூழாங்கல்’ படத்தின் ட்ரெய்லரைப் பலரிடம் காட்டினோம். அப்போது அங்கு வந்திருந்த இயக்குநர் ராம் அதைப் பார்த்துட்டு, “என்னடா இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துட்டு பாதியில நிப்பாட்டி இருக்க? சென்னைக்கு வந்ததும் உடனடியாக என்னை வந்து பாரு”ன்னு சொன்னார். சென்னைக்கு வந்ததும் அவர் பலரிடம் இந்தப் படத்தை எடுத்துச்செல்ல உதவி பண்ணினார். அப்படித்தான் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இசையமைப்பாளரா ஆனார். விக்னேஷ் சிவன், நயன்தாரா இந்தப் படத்தை நான் எடுத்ததுவரை பார்த்துவிட்டு, “இந்தப் படத்திற்கு நாங்க என்ன பண்ணணும் சொல்லுங்க; பண்றோம்”னு சொல்லி முழு ஆதரவு தந்தார்கள். முந்தைய தயாரிப்பாளர் செலவு செய்ததைவிட அதிகமாகவே அவருக்குக் கொடுத்துப் படத்தின் உரிமைகளை இருவரும் வாங்கினார்கள். ‘கூழாங்கல்’ சாதிக்கும் என்று அவர்கள் வைத்த நம்பிக்கைதான் இந்த வெற்றிக்குக் காரணம்.
படத்தின் கரு என்ன... அனைவரும் புதுமுகமாக இருக்கிறார்களே?
குடிகாரக் கணவன் ஒருவன் அவன் மனைவியை அடித்து அவள் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறான். சில நாட்களில் அவளைத் திரும்பக் கூப்பிட தனது மகனுடன் அவன் செல்லும் பயணமே ‘கூழாங்கல்’. இந்தப் பயணத்தில் அவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்தான் படத்தின் கதை. படத்தின் நீளம் ஒன்றரை மணி நேரம்தான். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருத்தடையான், கோவில்பட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞரான முருக பூபதியின் குழுவைச் சேர்ந்தவர். மகனாக நடித்திருப்பது செல்லப்பாண்டி. கஷ்டமான சூழலில் வாழும் சிறுவனே இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்குமென்று, பல சிறுவர்களை ஆடிஷன் செய்து செல்லப்பாண்டியைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களின் இயல்பான நடிப்பு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் ரசிகர்களின் மனதைத் தொட்டுவிட்டது.
திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே படத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். எப்பொழுது படத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டுவருவீர்கள்?
இந்த ஆண்டின் இறுதியில் கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆவது உறுதி. அதற்கான பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் அனைத்து மக்களும் ‘கூழாங்கல்’ படத்தைப் பார்ப்பார்கள்.
அடுத்து என்ன படம்?
‘கூழாங்கல்’ முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியைக் கொண்டது. என் குடும்பத்தில் நடந்த விஷயம் ஒன்றால் ஏற்பட்ட பாதிப்பில் அந்தக் கதையை எழுதினேன். அதே போல், என் வாழ்வில் நான் பார்த்த இன்னொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்புறத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன். அதுதான் அடுத்தப் படமாக இருக்கும்!